பனாத்த நிர்வி காரம்
(ப-ரை) பரவு சாட்சாத்காரம் – ( எவரும்) ஏத்தும் நேர்முக அனுபவம் நிறைவது; நிர் அவயவம் – (கருவிகரண) உறுப்புகள் கலவாதது ; கற்பனாதீதம் – (அரிய)பாவனைக்கு அப்பாற்பட்டது; நிர்விகாரம்-என்றும் வேறுபாடு இல்லாதது( எ-று).
(வி-ரை) ஒருமை உணர்வொடு , உருகுபவர் கண் முன்னர் , காட்சியாம் வரலாறுகள் இன்றுமுள, ஆதலின், ‘ பரவு சாட்சாத்காரம்’ ஆகிறது பரம்.
அவரவர் நினைவின்படி, அருளை மேனியாகக் கொள்வது அன்றி, இயல்பில் தனக்கெனக் கருவி கரணங்கள் இல்லாதது ஆதலின் , ‘ நிர் அவயவம்’ என்றார்.
“ மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் – பந்தனையால்
ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவமே சத்த தாதுவா…வடிவமாக் கொண்டோய்”
எனும் குமர குருபரர் குறிப்பு இங்குக் குணிக்கத் தகும்.
கற்றதும் கேட்டதும், உயிரின் கற்பனையில் உருவாகும்; உருவை ஆன்மா, அன்பு கொண்டு உணரும்; அந்த அன்பிற்கு இரங்கி, வித்தகப் பரம், உயிர் எண்ணிய உருவில் எதிர்ப்படும், இவ்வழியால் அன்றி, அதனை உணர்ந்து அனுபவிக்க எவரால் இயலும்?
இந்த வரிசையிலும், உடன்பாட்டுக் கற்பனையை, மல்லடித்து எதிர்மறை மறுதலிக்கும். எதிர்மறைக் கற்பனையை, உடன்பாடு உருத்து உதறிவிட முயலும்; ஊன்றி இவைகளை உணர்ந்து, அது கற்பனைக்கு அதீதம் என்று மறைகள் கைகுவிக்கின்றன. கற்பனைச் சமயங்கள், இந் நிலையில்தான் ஒன்றை யொன்று எதிர்த்துக் கனைக்கின்றன.
காலையின் ஒன்றாகி, பகலில் வேறாகி, மாலையில் பிறிதாகி மடங்கும் நிலையது மனமாயை, இந்த விகாரம் எதுவும் இன்றி, என்றும் ஒரே படித்தாயிருப்பது ஆகலின், நிர்விகாரம் எனப் பெற்றது.