4. பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத
பெளதிகா தார நிபுணம்
(பதவுரை) பரம தத்துவம் – அதி நுண்மையான உள்பொருள்: நிர் அதிசயம் – அதிசயத்திற்கு அப்பாற்பட்டது; நிட்களம் ( அனைத்துமான) உருவங்கட்கும் அப்பாற்பட்டது; பூத பெளதிக ஆதார நிபுணம் – ஐந்து பூதங்கட்கும் ( அவைகளால் ஆன) உலகிற்கும் ஆதாரமான ஆற்றலை யுடையது (எ-று)
(விரிவுரை) தத்துவம் – வடசொல்; உள்பொருள் என்னும் கருத்தது இப்பெயர்ப்பொருள்,. தொண்ணூற்றாறு தத்துவங்களும் அநாதி நித்தியம் ஆனவை; அவைகள் அனைத்தும் உயிர்க்க உயிர்ப்பது ஆதலின் பரம தத்துவம் எனப்பெற்றது.
‘ தத்துவம் எல்லாம் ஜோதி – அந்தத்
தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி
அத்துவி தப்பெருஞ் ஜோதி – எல்லாம்
அருளின் விளங்க அமர்த்திய ஜோதி’
என்று இக்குறிப்பு வேறு இடத்திலும் விளக்கப் பெற்றுளது.
அதிசயம் வேறு, அற்புதம் வேறு; திருவாசகத்தில் அதிசயப்பத்து, அற்புதப்பத்து என இருபகுதிகள் இருப்பதை எவரும் அறிவர். அதிசயங்களை , விஞ்ஞான சாதனைகளில் அறியலாம். அந்த அதிசயங்கட்கு அப்பாற்பபட்டது நிரதிசயம்.
நிஷ்களம் – அருவம் உருவம் அருவுருவம் எனும் ஒன்பதும் அல்லாதது; சகளம் ரூபம்; அஃது அல்லாதது நிஷ்களம்.
பூதம், புத்திக்குப் புலனாகாத அதிநுட்பம் ஆனது; பிரகிருதியி லிருந்து, விண் ஆதியில் விளங்கியது; விண்ணிலிருந்து காற்று விளைந்தது; காற்றில் பிறந்தது கனல்; தேர்ந்த கனலின் இருந்து நீர் உதித்தது; மகத்தான நீரில் விளைந்தது மண்; உதித்தவாறே இவைகள் ஒடுங்கும்; அரிய இந்நுட்ப ஆரம்பம் அறிய முடிவதில்லை; ஆதலின் , ஐந்திற்கும் ஐந்து பூதங்கள் எனும் பெயரிட்டுளர் ஆன்றோர். பூதங்கல் தனித் தனியாய்ப் புதுமை காட்டின. திருவருள் சங்கற்பப்படி அவைகள், விரிந்தும் செறிந்தும் பெளதிகங்கள் ஆயின. பெளதிகள் பூதங்களின் கூட்டுறவால் உண்டான உலகம்.
மண்ணில் திண்மை; நீரில் சுவை; நெருப்பில் வெப்பு; காற்றில் ஊக்கம்; விண்ணில் கலப்பு என்னும் தன்மைகளாகி , விசுவ உருவம், விசுவாத்மா, விசுவாதிகம் எனும் பெயராகி, உருவாகி, எவரையும் எவைகளையும் தாங்கப்படு பொருளாகியும், தாங்கும் சத்தியாகியும் உளது ஆதலின், ‘ பூத பெளதிக ஆதார நிபுணம்’ என்றார்.
) நிபுணம் – பேராற்றல் பெருமதி_)
“ ஆதார ஆதேயம் முழுதுநீ ஆதலால்,
அகிலமீ(து) என்னை ஆட்டி
ஆடல் கண்டவனும் நீ ஆடுகின் றவனுநீ”
என்றார் தாயுமானார். இந்த அருமையை
“ பார்முதல் ஐந்துமாம் ஜோதி – ஐந்தில்
பக்கமேல் கீழ்நடுப் பற்றிய ஜோதி
ஓரைம் பொறியுரு ஜோதி – பொறிக்கு
உள்ளும் புறத்தும் ஒளிர்கின்றா ஜோதி”
என்று அருட்பிரகாச வள்ளலார் வேறொரு இடத்தில் இதனை உணர்ந்து நெகிழ்ந்து ஓதுவதை உணர்ந்துளம்.
குகத்திரு இரசபதி அடிகள் உரை