(1) பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக
பாக்கியம் பரம நிதியம்
(பதவுரை): பரசிவம் – மாபெரும் மங்கலம் ; சின்மயம் – வளரும் ஞான வண்ணம்; பூரணம் – (நிறைவு அனைத்தினும்) நிறைவு : சிவபோக பாக்கியம் – சிவானுபவம் எனும் பரவும் இன்பப் பயம் ; பரம நிதியம் – பேரருள் பெருந்திரு.
(விரிவுரை) இகத்தை மறந்தால், பரம் விளங்கும், பரத்தை மறந்தால் , இகம் தெரியும், இனம் பற்றிய , மொழி பற்றிய, மதம் பற்றிய விவாதங்கள், இகத்து நினைவில் இயற்கை, பரத்து உணர்வில், மயங்க வைக்கும் வேற்றுமைகள் மறைந்து விடும். இகம், கீழ் நோக்குச் செய்தி; பரம், மேல் நோக்கின் பயன்.
வாயில் வாய்மையை வளர்த்தால், உளத்தில் உண்மை உருவாகும். உண்மை ஒளிரும் உவகையில், வித்தக செய்ம்மை எங்கும் விளங்கும். அந்த மெய்ம்மை நிலயமே மெய் மெய் மெய்; பிற அனைத்தும் பொய் பொய் பொய் என்று ஒழிவில் ஒடுக்கம் உணர்த்துகின்றது.
அம் மெய்ம்மையின் மேலிடத்தை, ஒளிநிறை உணர்வினர், பரம் என்று பகரல் ஆயினர், அவர்கள்,
“ பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார்”
எனும் சிவஞான சித்தியாய் இங்குச் சிந்திக்கத் தகும்.
பரமே பார்க்கும் சாதகர் முன், ஓங்கி ஒளிவெள்ளம் உதிக்கும், அதனை அடுத்துப் பாயும் அருள் வெள்ளம், விட்டும் தொட்டும் சாதனையிலிருந்து விலகும் சிலரை, சி சி சி என்று ஒளி வெள்ளம், காட்டாமல் தன்னைக் கரக்கும், என்ன பரிதாபமான செய்தி இது!
அந்நிலை கண்ட அருள் வெள்ளம், இரக்கம் கொண்டு எதிர்ப்படும், “ போகாதே ! சால்பற்ற சாக்கடையிற் சாயாதே! வாழ வழிவகை செய்கிறான் வா வா வா என்று அவர்களை அன்புக் கரம் நீட்டி அழைக்கும்..
ஊன்றி அதனை உணர்ந்து , மனத்தில் இரக்கத்தை மலர வைத்து, அறிவிற் கருணை அமர இடம் தரில், அழைத்த அருள் வெள்ளம் அணைக்கும், அதன் பயனாக , ம் ம் ம் எனும் மோன இன்பம் முறுவலிக்கும்.
‘ திருந்துநர் சீயென் றுதறிய கையும்
அருந்தவ வாவென் றணைத்த மலர்க்கையும்’
என்று பாட்டாகத் திருமூலர் பாடுகிறார், ( சி –ஜோதி, வ – அருள். ம்-மோனசுகம்)
இந்த அதிசிய அனுப அருமைகளை உணர்ந்து, பரசிவம் பரசிவம் பரசிவம் என்று, நான்மறைகள் பாராயாணம் செய்கின்றன. தூய இச்செய்திகள் அனைத்தையும்தொகுத்து, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை என்று வடித்துக் கொடுக்கும் வள்ளலார் திருவருளை, மறவாது என்றும் நம் மனம்.
பரசிவத்தை உணர்விற் பந்திப்பார்க்கு , ஊனமான அஞ்ஞானம் ஒழியும்; மெய்ஞ்ஞானம் அதன் பிறகு மேவும், அதன் துணையால், சித் என்னும் ஞானமயம் பரசிவம் என்று தெரியும்.
“ சின்மயமாம் பரஞ்ஜோதி – அருட்
செல்வம் அளிக்கும் சிதம்பர ஜோதி-
என்று, வேறு ஒரு இடத்தில் இந்நுட்பத்தை விளக்கி வைக்கிறார் வள்ளலார். ( சித் – நிலைமொழி; மயம் – வருமொழி ; வருமுதல் நோக்கி நிலைமொழி யீறு திரிந்தது) சித்மயம் சின்மயம் ஆனவண்ணம் இவ்வண்ணம்.
எள்ளில் நெய்போல், மலரின் மணம்போல், பொன்னின் ஒளிபோல், உடலில் உயிர்போல், பரசிவ சின்மயம் பூரணம் ஆனது.
உணர்விற் குறைந்தவர்களான உயிர்கள், பரத்தினும் பல குறையே பகர்வர். அக் குறையின் குரல்கள்தான் பலவான சமயங்கள், நிறைந்த நிறைவினன் சின்மயம் ஆதலின் அவர்கள் “ கோடிகுறை கருதினாலும் முனிய அறியாத பெருமாள் “ என்று அருளோடு ஆன்றோர் அறிவிப்பார் ஆயினர். எப் பொருளிலும், மேலும் கீழும் நிறைந்தது பரம் என்பதை.
“ ஊர்த்வ பூர்ணமத பூர்ணம் மத்ய பூர்ணம் சிவாத் மகம்!
ஷாஷாத் விதிகோஹ்யேஷ ஸமாதி; பாரமராத்திகா; என்று முக்திகோபநிடதம், பூரணம் என்பதன் சொற்பொருளைப் புகல்வதை அறிவம்.
“ ஒன்றான பூரண ஜோதி – அன்பின்
ஒன்றாத உள்ளத்தின் ஒன்றாத ஜோதி
என்றா ஒளிர்கின்ற ஜோதி – என்னுள்
என்றும் விளங்கிய என்னுயிர் ஜோதி
என, மற்றொரு இடத்தில் வள்ளலார், பூரணம் நினைவிலுறப் புகல்வதை இங்கு எண்ணல் நலம்.
தேக போகம், ஆக்கையோடு தீரும்; இது கீழ்நோக்கு, - இரு உயிர்கள், ஒன்றை ஒன்று காதலித்து ஒன்றாகும்’ இஃது கதன் மனையாளும் காதலனும் ஆன கதை, இதனுடன் பரமாச்சாரியன் தன்னை மாணவனிற் பாய்ச்சுவது ஒன்று ; இவ்விரண்டும் நடுநோக்கு, அருள் ஒளியை மேல்நோக்கில் ஆவலித்து, கணுவறச் சிவத்திற்கலப்பதுவே சிவபோகம்.
போகிப்பது போகம், வடசொல், அனுபவிப்பு, என்பது இதன் பொருள், புனித சிவத்தில் உணர்வு புகுந்து, நான் கெட்டுத் தானாதல் எனுமாம்.
திருவொற்றிநகர்
தங்கும் சிவபோக சாகரமே”
என்பது விண்ணப்பக் கலிவெண்பா,
“ நானும் நீயுமாய் ஏக போகமாய்
இறுகும் வகை பரமசுகம் அதனையருள்
இடைமருதில் ஏக நாயகா!
என்று அருணகிரியார் போன்றோர், இப் புனித போக பாக்கியத்தை விரும்பிப் போற்றுகின்றார். ( பாக்கியம் – வடசொல் பெருவாழ்வு என்பது குறிப்பு)
சந்திரன் எல்லாக் கலைகளையும் சார்ந்தபின், நிறைவு பெறுகிறான். அதுபோல், சாதகர், நிறைவு பெறும் நிலையில் வருகின்ற பேறு இது. பதினாறும் வாய்த்துப் பெருவாழ்வு பெறுதல் என்று, ஆன்றோர் செய்யும் ஆசி நுட்பத்தை இங்கு அறிதல் நலம்.
] “ ஜெகத்தில் ஜோதிப் பெருமாளே
இகபர செளபாக்கியம் அருள்வாயே ! என்பது திருப்புகழ்
பரம சிவபோக பாக்கியத்தில் புனித உணர்வு அழுந்தும் பொழுது, பரசிவம் பரமநிதியாக வந்து பலிக்கும்; சாதனைக்குத் தக்க அளவு சார்பு, எவரிடம் எந்த அளவு இருக்க வேண்டும் எனும் நீதியை அறிந்துள்ளது அந்த நிதி, அதனால்தான் அது பரம நிதி எனும் பெயர் படைத்துள்ளது.
“ அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!
உலகில் மூவகை உயிர்கள்; அவர்கள் ஒருமலர், இரு மலர், மும்மலர், எனப் பெறுவர்; அவர்கள், படிப்படியாகச் சாதனியிற் பயில்வர். அவர்களது தரத்திற்குத் தக்கவாறு தன்னைத் தருகிற அப் பரத்தினை , பரமநிதியம் என்றார். ( ப – வல்லினம் , ர – இடையினம் , ம் – மெல்லினம்) வல்லினம் போல்பவர் ஒரு மலர் உயிர்கள் , இடையினம் போல்பவர் இருமலர்; மெல்லினம் போல்பவர் மும்மலர். இம் மூவர்க்கும் அருளும் அனுபவக் குறிப்பை, பரம என்ற சொல் கொண்டு படித்தபடி ( மேலும் இம் மூவகை உயிர்களைக் குறித்து, ஐம்பெத்தெட்டாம் வரியில் விளக்கம் வந்துள்ளது: அவைகளை அங்கே அறிதல் நலம்)
‘பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரம நிதியம் ‘ என ஐந்து மந்த்ர நாமங்கள், முதல் வரியில் இருந்து முறுவலிக்கும் அருமையே அருமை ( பரசிவம் பரையை யுடைய சிவம் எனினுமாம், பரை பராசக்தி)
திருவருட்பா
திருவடிப்புகழ்ச்சி,குகத்திரு இரசபதி அடிகள்
vallalarspace.com/vumt
Write a comment