Vallalar Universal Mission Trust   ramnad......
முக்காடு

முக்காடு

அடிகள் இடையில் உடுத்தும் ஆடையை முழங்கால் மறையுமளவிற்கே உடுத்துவார். மேலாடையை உடல் முழுவதும் போர்த்தியிருப்பார். தலையைச் சுற்று முக்காடக அணிந்திருப்பார்.

கையுற வீசி நடப்பதை நாணிக்

கைகளைக் கட்டியே நடந்தேன்

மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால்

மெய் எலாம் ஐயகோ மறைதேன்

வையமேல் பிறர் தங் கோலமும் நடையும்

வண்ணமும் அண்ணலே சிறிதும்

பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப்

பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.

பிள்ளைப்பெருவிண்ணப்பம்52

மெய்யுறாக்காட்ட வெருவி மெய் எலாம் ஐயகோ, வெண் துகிலால் மறைத்தேன் என்பதைக் காண்க. தலையையும் காலையும் எப்போதும் மூடியிருக்க ( கவசித்திருக்க) வேண்டும் என்பது அடிகளின் கொள்கை. அதற்கேற்ப தலையை முக்காடிட்டு, காலுக்குச் செருப்பு (ஜோடு) அணித்தும் இருப்பார்.

இராமலிங்க அடிகள் தலைமுடியை மழித்திருந்தார்களா அல்லது நீள வளர விட்டிருந்தார்களா என்பதனை மட்டும் உறுதியாகக் கூற இயலவில்லை. மீசை வைத்திருந்தார்களென்பது மட்டும் கருங்குழி ரெட்டியார் வீட்டிலிருந்த ஒரு பழைய படத்தால் தெரிகிறது. இப்போது அங்கு இருப்பது பழைய படத்தைக்கொண்டு செய்த ஒரு புதிய படம். மீசையை முழுமையாக முறுக்கி வளர்க்க வில்லை ஓரங்களைக் கத்தரித்து விட்டிருந்தார்கள். மீசை விட்டிருப்பதால் தலையைச் சுத்தமாக மழிப்பதற்கில்லை தாடி வைத்திருக்கவில்லை. கடைசி காலத்தில் முடியை நீள வளர விட்டிருந்தார் ( toward the end he let his hair grow long) என தொழுவூர் வேலாயுதனார் கூறுவர். அடிகள் கைக்குட்டை ஒன்றை வைத்திருப்பார் அமர்ந்த நிலையிலுள்ள கருங்குழி ரெட்டியார் வீட்டுப் படத்தில் கைக்குட்டை வவத்திருப்பதனைக் காணலாம். கைக்குட்டையை இடையில் செருகியிருப்பாரென்பது கைத்துகில் வீசி அயந்தருதெருவில் நடப்பதற்கஞ்சி அரைக்குமேல் வீக்கினன் எந்தாய் என்பதனால் அறியப்படும்.

கைகளை கட்டியிருத்தல்

இராமலிங்க அடிகள் கைகளை வீசி நடவார். கைகளைத் தொங்கவிட்டுக்கொண்டும் இரார். கைகளைக் கட்டிக்கொண்டே இருப்பர். அடிகளின் திரு உருவப்படங்கள் அனைத்தும் கைகட்டிய நிலையில் அமைந்திருப்பதைக் காணலாம்.

கையுற வீசி நடப்பதை நாணிக்

கைகளைக் கட்டியே நடந்தேன்

என்பது இராமலிங்க அடிகளின் திருவாக்கு. கைகளை கட்டியிருந்ததன் காரணம் அடக்கங் கருதியேயாம்.