Vallalar Universal Mission Trust   ramnad......
திருவருட்பா வசனபாகம் 2. பெரு விண்ணப்பம் ..தொடர்ச்சி

திருவருட்பா வசனபாகம்

2. பெரு விண்ணப்பம் ..தொடர்ச்சி

எல்லாமுடைய இயற்கை விளக்கக் கடவுளே!

(பூதப் பேரணு உரு)

தாய் கருப்பையிற் சோணிதத் திரளிற் சேர்த்து என்னை, ஓர் பூதப் பேரணுவுருவிற் பெருகி வெளிப்பட இருத்திய காலத்திலும் எனக்குள் உள்ளோளியாகியிருந்து அப்பூதப் பேரணுவுருவைச் சிருட்டித்தருளினீர் அன்றிப் புறத்தில் எவராலுஞ் சிறிதுஞ் சகிக்கப்படாத அதன் அசுத்தம், அருவருப்பு, துர்க்கந்த முதலியவற்றைப் பொறுத்து அச்சோணிதத்திரளுள் ஓர் ஆவியுருவாகியிருந்து , அத்திரளிலுள்ள பல்வகை விரோத தத்துவங்களாற் சிறிதுந் தடைபடாமல் என்னுருஐக் காத்தருளினீர், அன்றியும், அவ்விடத்த தெதிரிட்ட துரிசுகளெல்லாவற்றையும் நிக்கிரகஞ் செய்தருளீனீர், அன்றி அங்ஙனம் பூத்த ஆன்ம சத்திக்கலைகள் வாட்டமடையாது வெளிப்பட்டு விளங்க வளர்த்தருளினீர்.

(பவுதிக பிண்ட வடிவு)

அன்றியும், தாய் கருப்பையினிடத்தும், பூதப்பேரனுவிற் கிடந்த என்னை, அக்கருப்பையிற் பவுதிக பிண்ட வடிவில் இருத்தும் வகையில், நச்சுக்கிருமி, நச்சுக்காற்று, நச்சுச் சுவாலை முதலிய வற்பாத வகைகளால், எனது பூதப் பேரணுவுருச் சிதறி வேறுபடாமலும் காத்தருளினீர், அன்றியும், தாய் கருப்பையிற் பவுதிக பிண்ட வடிவில் என்னை யிருத்திய காலத்திலும், எனது இச்சை ஞானக் கிரியைகளை வெளிப்படுத்துதல், முதலிய உபகரிப் பதிகரிப்புகளுக்குரிய உபயோக தத்துவ வறுப்புகளெல்லாவற்றையும் குறைவின்றி வகுத்து அமைத்து வளர்த்துக்காத்தருளினீர். அன்றியும், அடியேன் தாய் கருப்பையிற் பிண்ட வடிவிற் கிடந்தகாலத்து, இரும்பிற் பெரிதுங் கனமுடையதாய் , இருட்குகையிற் பெரிதும் இருளுடையதாய், மிகவுஞ் சிற்றளவுடையதாய், அசுத்த முதலியவற்றால் நிரம்பிய அக்கருப்பையினுள் நெருக்கத்தாலும் வெப்பத்தாலும் புழுங்கிய புழுக்கத்தினால் வருந்தி வருந்தி களைத்த போதெல்லாம் அங்ஙனம் அமுதக்ககாற்றை அடிக்கடி மெல்லென வீசிவித்து, அவருத்தமுங் களைப்பும் தவிர்த்துக் காத்தருளினீர்.

அன்றியும் , தாய் கருப்பையிற் பிண்டவடிவிற் கிடந்து பசியினால் பரிதவித்து மூர்ச்சித்த போதெல்லாம் பூதகாரிய அமுதத்தை எனக்கு ஊட்டுவித்துப் பசியை நீக்கி மூர்ச்சை தெளிவித்தருளினீர், அன்றியும் தாய் கருப்பையிற் பிண்ட வடிவிற் கிடந்து பேய்வெருட்டாலும், பேரிருட்டாலும், பயந்தபோதெல்லாம் நாதவொலியாற் பேய் வெருட்டையும், விந்து விளக்கத்தால் பேரிருட்டையும் தவிர்த்து, என் பயத்தை நீக்கியருளினீர், அன்றியும், தாய் கருப்பையின்கண் நேரிட்ட பெருந்தீ, பெருங்காற்று, பேரோசை, பெருவெள்ளம் பொஎரும் புழு முதலிய் உற்பாத துரிசுகள் அனைத்தையும் தவிர்த்துக் காத்து அப்பிண்ட வடிவில் எனக்கு ஓரறிவையும் விளக்கியருளீனீர்.

அன்றியும், உலகினிடத்தே பிறந்து அனுபவிப்பதற்குரிய சுகவனுபவப் பெருக்கம், ஆயுட் பெருக்கம் முதலிய நன்மைகளையும் எனக்கு அப்பிண்டவடிவின்கண்ணே அமைத்தருளினீர்.

அன்றியும், சோணிதக்காற்றின், அடிபடல், யோனிநெருக்குண்ணல் முதலிய அவத்தைகளால் அபாயம் நேரிடவொட்டாமற் காத்து இவ்வுலகினிடத்தே தோற்றுவித் தருளினீர், இங்ஙனம் புரிந்த தேவரீரது திருவரு பெருங்கருணைத் திறத்தை எங்ஙனமறிவேன! எவ்வாறு கருதுவேன்! என்னென்று துதிப்பேன்!

தொடரும்//