வள்ளலார் ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகிற்கூணர்த்த விழைந்தார். சமரசமாக உடன்பட்டு வாழ்வேண்டிய இறைவனின் பிள்ளைகளான மக்கள் தங்களுக்குள் எண்ணற்ற வேற்றுமைகளை வளர்த்துக்கொண்டு சண்டையிடுவதைக் கண்டார். ஆதலால் தான் அமைக்கின்ற சங்கம் மனிதர்கள் மனத்தால் உருவாக்கித் தங்களை குழுக்களாகப் பிரித்துக் கொள்ளப் பயன்படுத்தும் கற்பனை வேலிகளையும், வரம்புகளையும் அகற்றி, எல்லோரையும் இணைக்கின்ற ஒன்றாக இருக்க வேண்டுமென்று விரும்பினார். ஆதலால்தான் இறைவனை அருட்பெருஞ்ஜோதியாகக்கண்டு விண்ணப்பித்த பொழுது “ இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தைன் தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல்வேண்டும்” என்று முறையிட்டுள்ளார்.
வள்ளலார் காணவிரும்பிய சமரசம் சாதி சமயம், மொழி, இனம், நாடு ஆகிய உணர்வுகளை எல்லாம் கடந்தது. அவர் வாழ்ந்த காலத்தில் எத்தனையோ வகையான ஏற்றத்தாழ்வுகள் மக்களிடத்தில் இருந்தன. அவற்றின் குறுகிய வட்டங்களை உடைத்துக்கொண்டு பரந்த உலகினைத் தனதாக்கி கொள்ள குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு வருவதைப்போல மனிதன் வந்து ஒன்று சேர ( சமரசம் காண) ஏற்பட்ட அமைப்புதான் சன்மார்க்க சங்கம் என்பதை ‘ சமரச ‘ என்ற முதல் சொல் காட்டுகிறது.
தொடரும்///