வடலூர்ச் சத்திய ஞான சபையில் அமைந்துள்ள பெரியதோர் கண்ணாடியின் எதிரில் சோதியாகிய திருவிளக்கு உள்ளது; அந்தச் சோதியைத் தரிசிப்பதற்குத் தடையாக அமைந்துள்ள திரைகள் ஏழு. வழிபாட்டின் போது அந்த ஏழு திரைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நீக்கப்பெறும். பின்னர்சோதி தரிசனம் கிடைக்கும். இந்த ஏழுதிரைகளுக்கு இராமலிங்க அடிகளார்தரும் விளக்கம் வருமாறு:
“ இந்தப் பெள்திக உடம்பி லிருக்கிற நீ யாரெனில்; நான் ஆன்மா, சிற்றணு வடிவன், ஷை அணு கோடி சூரியப் பிரகாசம் உடையது. லலாடஸ்தான மிருப்பிடம். கால்பங்கு பொன்மை முக்கல்பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப்பிரகாசத்தை மறைக்க மாயாசத்திகளாகிய ஏழு திரைகள் உண்டு. அவையாவன; கருப்புத்திரை – மாயாசக்தி, நீலத்திரை – கிரியா சக்தி, பச்சைத்திரை-பராசக்தி, சிவப்புத்திரை-இச்சாசக்தி, பொன்மைத்திரை – ஞானசக்தி, வெண்மைத்திரை-ஆதிசக்தி, கலப்புத்திரை-சிற்சக்தி.
“ஞானசபை” என்பதற்கு வள்ளலார் தரும் விளக்கம் வருமாறு;
“ஞானசபை” யென்பது ஆன்மப்பிரகாசம், அந்தப்பிரகாசத்திற்குள்ளிருக்கும் பிரகாசம் கடவுள், அந்த உள்ளொளியின் அசைவே நடனம். இவற்றைத்தான் முறையே சித்சபை அல்லது ஞானசபை என்றும் நடராஜர் என்றும் நடனம் என்றும் சொல்லுகிறது.”
தைப்பூசத்தில் மட்டுமின்றி, ஒவ்வொரு திங்கள் தோறும் பூசநட்சத்திரத்தில் ஞானசபைத் தரிசனம் நிகழ ஏற்பாடு செய்தார் இராமலிங்க அடிகளார்.