சன்மார்க்கி பெறுகின்ற ஒரே இலாபம், மரணமிலாப் பெருவாழ்வு-அதாவது, செத்துப்பிறவாத பேரின்ப
முத்திநிலை. இதனை அடைவதற்கு யோகம், தவம் முதலிய கடினமான முயற்சிகள் தேவையில்லை என்பது
வள்ளலார் கண்ட சனமார்க்க நெறி.
“ சாதனங்கள் ஒன்றும் வேண்டாம், ஏதாவது ஓர் சாதனம் சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் சிறு
ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்துக் இறுமாந்து கெட நேரிடும். ஆதலால் காலந் தாழ்த்தாது
எல்லாவுயிரையும் தன்னுயிரைப்போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக்கொள்ளவேண்டும். இதுவே சாதனம்.
“ நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்தருளி யிருக்கும்கோட்டையின்
சாவியாகிய அருள் வேண்டும். அவ் வருள் அன்பினாலல்லது வேறு வகையால் அடைவது அரிது. அவ்வன்பு
ஜீவகாருண்யத்தாலல்லது வேறு வகையால் வாராது. அந்நிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே
ஜீவகாருண்ணியம். இத்துதான் சித்திபெறுவதற்கு முதற்படியாகவிருக்கின்றது.”