உள்ளத்தே தயவுடையார் தவிர மற்றை யாரும் இந்த மலைவறு சுத்த சன்மார்க்க நன்னெறியில் சேர இயலாது என்பதனைத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றார். யாராயினும், இந்த சன்மார்க்கமெனும் நன் மார்க்க சங்கம் சார்ந்து ஒழுக இயலும் என்று சொல்லி வைக்காமல் கருணையில்லாதாரின், அகவிருள் போக்கி, அவர்தம் உள்ளங்களைத் தெளிவித்துத் திருத்திய பின்னரே சன்மார்க்க சங்கத்தில் அடைவித்திடுதல் வேண்டுமென்கிறார்,
“ அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்த
சகத்தோர் அனைவரையும் திருத்திச்
சன்மார்க்க சங்கத்து அடைவித்திட”
என்ற வரிகளில் விளக்குகின்றார்.
இவ்வுலகில் தூண்டில், கண்ணி, கத்தி போன்ற பொருட்களின் துணைகொண்டு பிராணிகளைக் கொன்று குவிப்பது மட்டும்மே பாவம் என்றும், போட்டி, பொறாமை, போர் இவைகளின் விளைவாக எழுகின்ற பூசல்களின் அடிப்படையில் ஒருமனிதனை, மற்றொருவன் கொல்வதே கொலை என்றும் எண்ணிக் கொண்டிருப்பார்க்கும், அருட்பா ஒரு புத்தம் புதிய கொல்லாமை நெறியையும் உபதேசிக்கின்றது. பிற உயிரைக் கொல்வது எத்துணை அளவுக்குப் பாவம் என்று கருதப்படுகின்றதோ, அதுபோன்று பிற உயிர்பசிக்கப் பார்த்திருப்பதும் கொலை, பாவம் அறத்திற்கு மாறுபட்ட செயல் என்று விளக்குகின்றார். கொன்றென்ன இன்னாசெய்யுங் கொடியாரேயாயினும், அவர் படுந்துயரையும் மாற்ற வேண்டிய கடமை நமக்குண்டு என்று உணர்த்துகின்றார்.
“ கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வா ரெனினும்
குறித்திடுமோ ராபத்தில் வருந்துகின்ற போது
படியிலதைப் பார்த்துகவேல் அவர்வருத்தத் துன்பம்
பயந்தீர்த்து விடுகவெனப் பரிந்துரைத்த குருவே”
என்று அருட்ஜோதி தெய்வத்தை அழைகின்றார். இந்த அருள் நோக்கந்தான் சுத்த சன்மார்க்க சாதனம் என்று வழங்கப்படுகின்றது. எல்லா உயிரையும் தன்னுயிராய் மதிக்கும் சன்மார்க்க சாதனம் பெற்றவன் எவனோ அவனே இறந்தாரை எழுப்புகின்ற ஆற்றல் படைத்தவன்.
…தொடரும்…..