Vallalar Universal Mission Trust   ramnad......
எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணல்….


எவ்வுயிரையும் தன்னுயிராய் எண்ணிப் போற்றும் பண்பினைப் பெற வேண்டுமாயின் மனிதன் என்ன என்ன செய்ய வேண்டும்? முதலில் நான் யார்? என் உள்ளம் யார்? என்ற வினாக்களுக்குரிய விடையை மனித உள்ளம் உணர்ந்திருக்க வேண்டும். தன்னைப் பற்றிய உண்மை அறிவு ஓரளவுக்கேனும் மனிதனுக்கு வேண்டும்.

“தன்னை உணர்ந்து இன்பமுற வெண்ணிலாவே

ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே”

என்றுபாடுகின்றார் திரு அருட்பிரகாசர். அடுத்து இறைவன் முன்னிலையில் தன்னைத் தாழ்த்துகின்ற உணர்வும், மனப்பக்குவமும் மனிதனுக்கு வேண்டும். ‘’தன்னைத்தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப்படுவான்” என்று விவிலியம் பேசுகின்றது. உள்ளத்தின் அழுக்காறு, அவா, வெகுளி, இவை அகல , தன் குறைகளை நினைந்து கண்ணீர் மல்கி, இக்கருணையை பெறல் வேண்டும். வினையேன் அழுதால் உன்னைப் பெற லாமே” என்ற மாணிக்கவாசகப் பெருமானின் வாசகம் காட்டும் நெறியும் இதுவே. கடையனுக்கும் கடையனாக தன்னைக் கருதுகின்றார் இராமலிங்கர் திருவருட்பாவிலே.

நாயினுங் கடையேன் ஈயினு மிழிந்தேன்

ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி

தோத்திரம் புகலேன் பாத்திரம் மல்லேன்

ஆத்திரம் அளித்த அருட்பெருஞ்ஜோதி”

என்கின்றார். காட்டிலே திரியும் விலங்கை விடக் கொடியவன் நான்; எளியவர் வளைத்த நிலமெல்லாம் கவரும் எண்ணமே பெரிதுமுடையவன்; அளத்திலே பிடித்து துரும்பினும் சிறியேன்; என்கிறார். தான் ஒன்றுக்கும் உதவாதவனே தன்னைப்பற்றி மிகப் பெரிய வனாக நினைத்துக் கொள்ளும் இந்த நாளில் அருள் அனுபவம் பெற்றவர்கள் தங்களை தரையளவாகக் தாழ்த்திக் கொள்வதைக் காணும்போது நம்மால் உருகாமல் இருக்கமுடியவில்லை.

அளத்திலே படிந்த துரும்பினுங் கடையேன்

அசடனே னறிவிலே னுலகில்

குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க்

குழியிலே குளித்தவெங் கொடியேன்

வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க

மனங்கொண்ட சிறியனேன் மாயைக்

களத்திலே பயின்ற வுளத்திலே பெரியன்

என்னினுங் காத்தருள் எனையே”

(ஆறாந்திருமுறை, அகவல்11, பாடல்7)

என்று பாடிப் பரவுகின்றார். மாறாக இந்தவுலகில் தன்னைத்தானே பெரியவனாக எண்ணிக் கொள்வார் தொகைதான் அதிகம். தன்னைப் பெரியவனாக எண்ணிக் கொள்பவன் கண்கள் ஒளியற்றுப்போகும். உள்ளபொருட்களில் உண்மையைக் கண்டு கொள்வதே அவனுக்குக் கடினமாகும். அப்பேர்ப்பட்ட மனிதன் பிறரால் மதிக்கப்படவும், போற்றப்படவும் மட்டுமே விரும்பான். தன் உள்ள உணர்வுகளைச் சீர்படுத்தும் பயிற்சியும், இறைசிந்தனையும், இத்தூய உணர்வுகளைச் சாதாராண மனிதர் மட்டும் புகுத்தும் தன்மையுமுடையன். மாணிக்க வாசகரும் தன் திருவாசகத்தில் நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை” என்றும் விலங்கு மனத்தால் விமலா’ உனக்கு கலந்த அன்பாகி கசிந்து உள் உரும் நலந்தானில்லாத சிறியேன்” என்றும் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார். மெய்யடியார்கள் அனைவரும். இறைவன் முன்னிலையில் தங்களைத் தாழ்த்திக் கொள்வதும், எல்லா உயிர்களையும் போற்றிக் காக்கும் நன்னிலை எய்த அருட்பா காட்டும் வழிகளில் சிறந்தவைகளாக் அமைகின்றது.

தொடரும்.