Vallalar Universal Mission Trust   ramnad......
எவ்வுயிரும் தம்முயிர்……

உயிர்க்கருணையாகிய ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல். வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டிய இம்மை வாழ்விற்கும், அதன் அடிப்படையில் அமைகின்ற மேலுலக வாழ்க்கைக்கும் இன்றியமையாத சாதனமாக அமைவது உயிர்க்கருணை. அந்தக் கருணை, தான், தன்மனைவி, மக்கள், சுற்றம் வீடு, நாடு என்ற குறுகிய வட்டத்தினுள் அடைபடலாகாது. இவன் மனிதன், இது பிராணி, இது தாவரம் என்ற பாகுபாட்டைப் பகுத்துக் கொண்டு, இனத்திற்கேற்றாற்போல் நடந்து கொள்பவன், சன்மார்க்கத்தை உணராதவன். தன்னையும், கொழுகொம்பில்லாமல் தவித்த முல்லைக் கொடிக்குத் தன் தேரை வழங்கினான் பாரி. கார்கண்டு தோகைவிரித்தாடும் கலாபம், குளிரால் வாடுகின்றது போலும் என்றெண்ணித் துடிதுடித்துத் தன் போர்வையை வழங்கினான் பேகன், மயிலையும்,முல்லைக் கொடியையும், முறையே ஒரு சாதாராணப் பறவையாகவும் கொடியாகவும் கருதியிருந்தால், பாரியும் பேகனும் அவ்வுயிர்களின் துன்பங்கண்டு துவண்டு போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. மாறாக, அவ்வுயிர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை தன்னதாகப் பாவித்துக் கொண்ட காரணத்தால், பிற உயிர் பதைக்கப் பார்த்திடாத உள்ளம் தங்களுடையது என்று தம்மை இனங் காட்டிக் கொண்டனர் பாரியும் பேகனும். இந்த ஒத்த உணர்வினைத்தான்

எவ்வுயிர்த் திரணுமென்னுயி ரெனவே

எண்ணி நல் லின்புறச் செயவும்

அவ்வுயிர்களுக்கு வருமிடை யூற்றை

யகற்றியே யச்சநீக் கிடவும்

செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச்

சிவசிவ வென்று கூத்தாடி

ஒவ்வுறு களிப்பா லழிவுறா திங்கே

ஓங்கவும் இச்சை காணெந்தாய்”

என்று அருட்பா பேசுகின்றது.

பொதுவாக உலகில், சமயம் சமுதாயம் இவற்றின் பேரால் எழும் சீர்கேடுகளைச் சாடுகின்றவர்கள் சீர்திருத்தவாதிகள் என்ற பெயரைப் பெற்றுவிடுகின்றனர். ஆய்ந்து பார்த்தால், உண்மைச் சீர்திருத்தம் விரும்புகின்றவன் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டுவதோடு மட்டும் அமையாமல், அவைகளை மாற்றிப்போட வழிவகைகளைக் கண்டுணர்ந்து, பிறர்க்கும் உணர்த்த வேண்டும், அப்படிப்பட்டவன் சொற்கேட்கும் இவ்வுலகம். அருட்பாவின் ஆறு திருமுறைகளூம் சீர்திருத்தப் பாதை அமைத்துக் காட்டும் திறமுடையவை.

……தொடரும்.