நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். இவ் அருளை அன்பினால் அல்லது வேறுவகையில் அடைவது அரிது. என்று அவர் கூறுவதினின்றும் இதனை அறியலாம். இதனை மேலும் ஒரு சான்று காட்டியும் நிறுவதல் கூடும். ஆன்ம ஒழுக்கம் பற்றி விளக்க வந்த அடிகள் “ யானைமுதல் எறும்பு ஈறாகத் தோன்றிய சரீரங்களிலுள்ள ஜீவான்மாவே திருச்சபை யாகவும், அதனுள் பரமான்மாவே பதி யாகவும் கொண்டு, யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதமற்று எல்லாந்தானாக நிற்றல் என்று கூறுகின்றார்.
அருளைச் சோதியாகக் கண்ட வள்ளலார், அஃதே சோதியாகக்கண்ட வள்ளலார், அஃதே உலக இயற்கை எனக் கொண்டார். எம்மதத்தவரும் போற்றும் அருள் நெறியே சமரச சன்மார்க்க நெறி என்று எண்ணினார். தனித்தலைமைப் பெரும்பதியாகிய பெருங்கருணைக் கடவுள் இயற்கை உண்மையர்; இயற்கை அறிவினர் இயற்கை அன்பினர் என அவர் விளக்குவார்.
இயற்கையுண்மைத் தனிப்பெரும் பொருள் என இறைவனையும் இயற்கை விளக்கம் தனிப்பெரும்பதம் என சத்திய ஞான சபையினையும் இயற்கை இன்பதனிப் பெரும் சுகம் என இறை அனுபவத்தையும் அவர் சுட்டுவார். இயற்கை உண்மை நிறைவான சுத்த சிவ அனுபவ வெளியே இறைவனின் இடமாகும். இயற்கை விளக்க நிறைவான அருட்பெருஞ்ஜோதி வடிவமே இறைவனின் உருவமாகும். இயற்கை இன்ப நிறைவாகி ஓங்கிய சிவானந்த ஒருமைத் திரு நடனமே இறைவனின் செயலாகும். இவ்வாறு அருளைச் சோதி வடிவாகாக் கண்டு, அஃதே உலக இயற்கை என விளக்கும் வள்ளலார், இறையுண்மையைக் காட்டக் கையாளும் பிறிதோர் உத்தியைஅயும் இங்குக் காண்போம்.
தொடரும்…..