இறைவனை ஒளி வடிவினனாகக் காண்பது நமக்குப் புதுமையன்று மரபு வழிப்பட்டதேயாகும்
“ உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு
ஓஅற இமைக்கும் சேன்விளங்கு அவிர் ஓ”
திருமுருகு 1: - 3
என நக்கீரர் கோலமயில்மீது ஏறிவரும் சேயானைச் சித்தரித்து காட்டியுள்ளார் அன்றோ? அருட்பத்தில் மாணிக்கவாசகர், சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே என்று பரவினார் அன்றோ. தாயுமானவ அடிகளூம் அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தமூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எதுவோ அதுவே இறை” என உணர்த்தினார் அன்றோ? ஆனால் வள்ளலார் பெருமான் சோதி என்பதைக் குறீட்டுப் பொருளோடு படிமம்பொருள் உணர்வோடு படித்து இக்கருத்திற்கு ( concept) ஒரு முழுவடிவம் தந்துள்ளமையை நாம் உணர்தல் வேண்டும்.
வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி யாகும் தன்மையை – படி முறை வளர்ச்சியை வாதவூரடிகளிடம் கண்டு பாராட்டும்போது சோதி வடிவாவதென்பது எது என நமக்கு விளங்கி விடுகிறது.
அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்து பின்னர்
இன்புருவம் ஆயினை நீ எழில்வாதவூர் இறையே. திரு..
அன்புருவம் சுத்த தேகம்; அருளுருவம் பிரணவதேகம்; இன்புருவம் ஞானதேகம் என்பர். வள்ளலார் இறையை ஞானதேகம் உடையதென்பர் எனவே ஆன்மா ஞானதேகம் பெறுவதென்பது இறையோடுஇரண்டற ஒன்றுவதே யாகும். எவ்வுயிரும் தம்முயிரெனக் கருதும் கருணை ஒழுக்கத்தையும் ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் கைக்கொண்டு இறைவனை நாம் இடையறாது வணங்கிவந்தால் நமது தூய உடம்பாகி அன்புருவாக அமையும்.
தொடரும்
திரு
இராம.பெரியகருப்பன்