இராமலிங்க அடிகளார் ஒரு சமயவாதி என நாம் அறிவோம். சென்றா நூற்றாண்டிலே தமிழகத்தில் தோன்றித் தில்லை நடராசர் பக்தராகி உணர்வும் உருக்கமும் பெற்று அருட்பாக்கள் ஆயிரமாயிரம் பாடிய அருளாளர் அவர். தேவார மூவர், திருவாசம மணிவாசகர், முற்றுந்துறந்த பட்டினத்தடிகள், எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்த தாயுமானர் ஆகியோர் வழியிலேஇறுதியில் தோன்றிய உறுதியாளர் அவர். நாம் எல்லோரும் சமயவாதிகள் என்பது போல அவரும் ஒரு சமயவாதி என்று எளிதாகக் கூற முடியாது. அவர் வாழையடி வாழை என வந்த திருக்கூட்டத்தில் ஒருவர். நாம் வாழையடி வாழை என வந்த வெறுங்கூட்டத்தில் ஒரு கூட்டம். நாம் எல்லாம் சமயிகள். அவர் சமயவாதி, நாம் சமய வழிபாட்டினர். அவர் சமய வழிகாட்டுநர். நாம் சமயத்தொண்டர் அவர் சமயத்தலைவர்.
அவருக்கும் மற்றையோருக்கும் இடையே அமைந்த வேறுபாடு என்ன வேறுபாடு? இராமலிங்க அடிகளார் கொண்ட தெய்வபக்தி ஆழமானது; நம்பிக்கை முழுமையானது; ஈடுபாடு எல்லையற்றது. அறவு ஐயம் திரிபற்றது. ஆகவேதான் அவர் ஒரு தெய்வீகச் சான்றோராகத் திகழ முடிந்தது. இத்தகைய பண்புகளால் தெய்வீகச் சான்றோர் ஆனவர் தாம் திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தர். மாணிக்கவாசகர், தாயுமானவர் முதலானோர். ஆதலால் இராமலிங்க அடிகளாரும் மற்றைய அடிகளாரும் இவ்வகையில் ஒற்றுமையுடையோரே.
ஆனால் இராமலிங்க அடிகளாருக்கும் மற்றைய அடிகளாருக்கும் இடையே வேறொரு வேறுபாடும் உண்டு. இராமலிங்க அடிகளார் ஒரு புதிய மார்க்கத்தையே தோற்றுவித்தார். மாணிக்கவாசகரும் பட்டினத்துப் பிள்ளையாரும்தாயுமானாரும் தாம் சார்ந்த சமயத்தையே வளர்த்தனர். வாழ்வித்தனர். இராமலிங்க அடிகளார் ஒரு புதிய மார்க்கத்தை காண்பதற்கு ஒரு காரணம் உண்டு. அவர் கண்ட மார்க்கம்சமரச சன்மார்க்கம் ஆகும். இராமலிங்க அடிகளார் தாம் சார்ந்திருந்த சமயமும் தாம் வாழ்ந்து வந்த சமூகமும் குறையுடையவை என்றும் அவற்றின் கொள்கைகளும் பணியும் போதா என்றும் உணர்ந்தார். அவை சில தவறுடையவை எனவும் அவர் எண்ணினார். அவை சில தீமை தருபவை எனவும் கண்டார். ஆகவே அவற்றுக்கும் மாற்றாக மற்றொரு மார்க்கம் காணவேண்டிய தேவை அடிகளாருக்கு ஏற்பட்டது. இதுவே இராமலிங்க அடிகளாருக்கும் மற்றைய அடிகளாருக்கும் இடையே அமைந்த முக்கியமான வேறுபாடு. இவ்வகையில் இராமலிங்க அடிகளார்சிறப்புப் பெற்றவராகத் திகழ்கிறார் எனலாம். இவ்வாறு இருக்கும் நிலையினை வெறுக்கும் நிலையில் தோற்றம் பெற்றவரே சமயச் சான்றோர்.
நடப்புலகைக்கண்டு அடிகளார் கசப்புணர்வு கொண்டார் என்பதற்கு அவர் பாடிய அருட்பா முழுவதிலும் நிறையச் சான்றுகள் கிடைக்கின்றன. அவர் காலத்தில் அவர் கண்ட முதற் குறை சமயப்பூசல், அன்று சமயங்கள் பலவாக விளங்கின. சமயங்களுக்குள்ளும் சமயப் பிரிவுகள் மிகப் பலவாக இருந்தன. சமயங்களிடையே உட்பூசலும் வெளிப்பூசலுமாகப் பெரும் போர் நடைபெற்றுவந்தது. சைவர்க்கும் வைணவர்க்கும் இடையே போர், சைவத்தில் வேதாந்திகளுக்கும் சித்தாந்திகளுக்கும் இடையே போர். வைணவத்தில் தென்கலைக்கும் வடகலைக்கும் இடையேபோர். இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையேபோர். கடவுள் நம்பிக்கை உள்ளோர்க்கும், இல்லாதோர்க்கும் இடையே போர். இந்தப்போர்கள் எல்லாம் பொருளற்றவை என்றுணர்ந்தார் இராமலிங்கர். இந்தப்போர்களை அறிவாக உணராது வெறியாக உணர்ந்தார். இப்போராட்டங்களை எதிர்த்துஅவர் முழக்கம் இட்டார்.
கூறுகின்ற சமயமெல்லாம் மதங்கள் எல்லாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டறியார் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார்…..
சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானைத்து அலைகின்ற உலகீர்
அலைந் தலைந்து வீணே நீர் அமிதல் அழ கலவே
இவைபோன்ற முழக்கங்கள் பலப்பல. மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும். என்னும் தொடரால் அவரது வெறுபின் ஆழம் புலப்படுகிறது. மதித்த சமய மத வழக்கெல்லாம் மாய்ந்தது.
இந்தச் சமயங்களுக்கும் மதங்களுக்கும் அடிப்படை, அவற்றின் தத்துவ நூல்கள், இந்தியச் சமயங்களும் வேதங்களும் ஆகமங்களும் சாத்திரங்களும் புராணங்களும் இதிகாசங்களும் அடிப்படையாக விளங்குகின்றன. இவற்றின் மீது கட்டப்பட்ட கோபுரமே இந்துசமயம்.
இந்த இந்து சமயத்தில் ஒருவராகவே அடிகளார் திகழ்கிறார். அதனை அவர் நன்கு அறிந்தும் இருந்தார். உணர்ந்தும் இருந்தார். ஆனாலும் அவ்வடிப்படை நூல்களில் அவர்க்கு நம்பிக்கை இல்லை. அவை உண்மையும் இல்லை, நன்மையும் செய்வதில்லை. மாறாகத் தீமையே விளைவிக்கின்றன என இராமலிங்க அடிகளார் கருதினார். அவர் கருத்துக்களில் சில இவை.
வேதநெறி ஆகமத்தின் நெறிபவுராணங்கள்
விளப்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுவதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உரைத் தனையே
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரச் குப்பையும் தணந்தேன்.
சமய நூல்களைச் சூது எனவும் குப்பை எனவும் இங்கெல்லாம் அவர் குறிப்பிடுவது அவர் உள்ளக் குமுற,லையே எடுத்துக் காட்டுகிறது. இவற்றைப் பொய் எனவும் அவர் ஓரிடத்தில் பழிக்கின்றார்.
........ தொடரும்
we will eagerly await the continuation of the article.