Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலார் ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் இறைக்காட்சியையும் (gods realization) எவ்வாறு இணைக்கின்றார்?

இறைக்காட்சியை வெறும் சமயச் சடங்குகளால் பெறமுடியாது என்று உறுதியாகக் கூறுகின்றார் வள்ளலார். அவை கலை உரைத்த கற்பனைகள்- அவற்றிற்குப் பயன் இருக்கலாம், ஆனால் அவை முடிந்த பயனைத் தாரா. அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். அவற்றுள்ளேயே உழலுதல் கண்மூடி வழக்கம்.

இறையுருவத்தை வழிபாட்டின் முதற்படியாக வள்ளலார் கொண்டாலும் அதைக்கடந்து செல்ல வேண்டும் என்கின்றார். அவர் காட்டிய இறை அருட்பெருஞ்ஜோதி ஆகும். அருள் வெளியில் அதாவது உயிர் அருள்மயமாகி நிற்கும்போது அதில் இறை, சோதியாகக் காட்சி தருகின்றான். இது அகமுகக்காட்சி, வெளியே உள்ள சடங்கு, ஆலயம், பூசை, பொருட்கள் எல்லாம் புறக்காட்சி. இவற்றைக் கடந்து அகமுகமாகப் பார்க்கும் பார்வை வளரவேண்டும் என்றார் வள்ளலார். பூசை, திருவிழா, தேங்காய் உடைத்தல், கற்பூரம்காட்டல் எல்லாவற்றையும் ஒதுக்குகின்றார். காவியுடை அணிவதை மறுக்கின்றார். அது போராட்டத்தின் அறிகுறி என்றும் வெள்ளாடையே வெற்றியின் அறிகுறி என்றும் கூறுகின்றார். புராணங்கள், கலைவடிவங்கள் எதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவை எல்லாம் புறக்காட்சி. அகமுகக் காட்சி என்ற ஆன்மீக அனுபவத்தையே அவர் வற்புறுத்துகின்றார்.

இந்த அகமுகக் காட்சி, இறையருளால் தான் வாய்க்கும். அந்த அருளை அதன் இனமாகிய நமது கருணையால் தான் பெற முடியும். கருணையால் சமுதாயச் சேவை செய்தால் இறையருள் கிடைக்கும். அது கிடைத்தால் இறை அன்பு பிறக்கும். அன்பால் அகமுகக் காட்சி, சிறிது முயற்சியிலேயே வாய்க்கும். அக்காட்சியால் அருள் வல்லமை’ பெறலாம். அவ்வல்லமையால் பின்னும் பெருகிய அளவில் சீவகாருணிய சேவைச் செயல் செய்தல் வேண்டும். இதற்கு எல்லையே இல்லை. செயல், செயல், செயல் இதுவே என்றும் மனிதனின் நெறியாக இருக்க வேண்டும். அச்செயலால் மேலும் இறையருள் வாய்க்கும். இறைக்காட்சியும் இறைக்கலப்பும் வாய்க்கும். அதனால் மேலும் செயல் செய்தல் வேண்டும். இதனை வள்ளலார் கரும சித்தி முதலிய சித்திகள் என்று கூறுகின்றார். இறைவனோடு ஒன்றிக் கலந்து நிற்கும் முத்தியின் பின்னும் சித்திவாய்க்கும் அதாவது செயல் வல்லமை வாய்க்கும் என்கின்றார். அவ்வல்லமையால் உலகம் எங்கும் சென்று, யாவர்க்கும் தேவைப்பட்ட உதவிகளைச் செய்து, இறைவனையும் கலந்து, நுகர்ந்து, இந் நுகர்வும் செயலுமாக வாழ்வதே சன்மார்க்கம் என்கின்றார் வள்ளலார். இறைவனுக்கும் எல்லை இல்லை. அவன் தரும் இன்பத்திற்கும் எல்லை இல்லை. அவனது கலப்பால் கிடைக்கும் வல்லமையால் செய்யும் செயலுக்கும் முடிவில்லை. இதுவே இறவாப் பெரு வாழ்வு என்பது சன்மார்க்கக் கோட்பாடு.

திரு சுப . அண்ணாமலை.