மனித உள்ளத்தியல்பு
மெய்யுணர்ந்து அடங்கி ஒழுகும் சான்றோன், தன்னைக் காட்டிக் கொள்ளான் வெளிப்படையாக, இங்கு தன்னை என்றது. புறத்தோற்றமாகிய அன்னார் உடலுருவைச் சுட்டுவதன்று; தான், தான் என உள்ளிருந்து எழுகின்ற அகங்கார போத உணர்வையே முக்கியமாகச் சுட்டுவதாம்.
உலகியற் காரியங்களில் பற்றோடு முயன்று ஒன்றைச் செய்து முடித்து விடும்போது, தன்னால் தான் அது செய்து முடிக்கப் பட்டதாகப் பெருமித உணர்ச்சியோடு கூறிக் கொள்ளுகின்றான். இப்படிச் செய்வதுதான் தன்னைக் காட்டிக் கொள்ளுவதாம்.
ஆனால் அப்படி முயன்றும் வெற்றி பெறாது தவறிப் போகும் போது, அச்செயல் ஆண்டவன் செயலென, ஆண்டவன் மீது பழி சுமத்தி விட்டுத் தன்னை ஒரு நிரபராதியாகக் காட்டிக் கொள்ளுவதும் சாதாரண மனித இயல்பாயிருக்கின்றதாம்.
தம்மை மறைத்துக் கொள்ளல்
இதுபோன்றே பெரியவர்கள், தலைவர்கள் என்பவர்கள் கூட இந்த அகங்கார போதத்தால் தமது சொற்களாலும் செயல்களாலும் தம்மையே காட்டிக் கொள்ளுகின்றார்களே அல்லது, தம்மை முற்றும் மறத்துவிட்டு, தமக்கு உண்ணின்று யாவையும் புரியச் செய்கின்ற பதியையும், அவரது செயலையும் உணர்த்தித் தம்மை மறைத்துக் கொள்ளுகின்றவர்களைக் காண்பது அரிதாகும்.
ஒரு சிலர் தம்மை மறைத்துக் கொள்வதாகக் கருதிப் பெயரையும் உருவையும், உறைவிடத்தையும் இரகசியமாக வைத்துக் கொள்ளுகின்றனர். இது உண்மை அறியாமையே இது தேகப்பற்று அறாத காரணத்தாலும், தமது உண்மை அக வடிவத்தை உணர்ந்து கொள்ளாமையினாலும், அப்படி மறைக்க முயலுகின்றார்களாம்.
பிறர் தம்மைக் காட்டாது காட்டிக் கொள்ளல்
இதற்கு மாறாக இன்னும் சிலர் தம்மை மறுப்பவர்களாய், தமது உயர்வு மனப்பான்மையைத் துறந்து விட்டுத் தம்மைத் தாழ்த்திக் கொள்ளுபவர்களாய்க் கருதிக் கொண்டு, தம்மைக் காடையேன், அடிமை, சிறியேன், நாயேன் முதலியனவாய்க் கூறிக் கொள்ளுகின்றார்கள். இதுவும் உண்மை அறியாமையேயாம்.
உண்மையாதெனில், உள்ளிருக்கும் ஒப்புயர்வற்ற தனக்கு அன்னியமாய்ப் பிறிது ஒன்றில்லாத, அந்த அருட்பெருஞ்ஜோதியே ஒவ்வொருவரின் உண்மையாகும் என்று அறிதல் வேண்டும். இவ்வுண்மையைத் தெரிந்து கொள்ளாததினால்தான், தம்மைத் தாழ்த்திக் கொள்ளுதலும் புகழ்ந்து கொள்ளுதலும் ஆகத் தமது அகங்கார போதத்தையே காட்டிக் கொள்ளுகின்றனர் என்பது தெளிவாம்.
மெய்ஞ்ஞானியர் நிலை
இப்படி எல்லாம் தம்மைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் மெய்ஞ்ஞானிகள் மேலும்அனாவசியமாகத் தம்மை ஒளித்துக் கொள்ளவும் மாட்டார்கள். வாய்ப்புண்டான போதெல்லாம் தமது புற வண்ணத்தை மறுத்து நின்று தானாகி விரிந்து காரியப்பட்டுக் கொண்டுள்ள கடவுள் உண்மையையே காட்டிக் கொள்ளுவார்கள்.
இந்நிலையில் அவர்கள் கூறுகின்ற நான், எனது என்பதற்குப் பொருள், ஆண்டவர் உண்மையையும் சுட்டுவனவாகவே கொள்ளப்படும். மெய்ஞ்ஞானியர் அல்லாதார்க்கு இவ்வுண்மையை விளங்கிக் கொள்ள முடியாது ஆகையால், உண்மையை அறிந்து கொள்ளாமல் குறை கூறுவார்கள்.
வள்ளலின் அகம் அருள் ஒளியே
அருள் ஞானி இராமலிங்கர் தமது உண்மையைக் கண்டு, உட்கலந்து நின்று தான், பல பல அனுபவ வாசகங்களையும் வெளியிட்டுள்ளார், திருவருட்பாவின் வாயிலாக, தொட்ட தொட்டவிடங்களில் எல்லாம் இந்த உண்மையை நாம் அருட்பாவில் காணக்கிடக்கின்றன. ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக்காட்டி விளக்குவாம்.
எனையான் மதித்துப் புகல்கின்ற தன்று இஃது எந்தைபிரான்
தனையான் மதித்திங்குப் பெற்றநல் வாழ்வது சாற்றுகின்றேன்
வினையான் மெலிந்த மெலிவையெல்லாம் விரைந்தே தவிர்த்துத்
தனையான் புணர்ந்திடச் சாகா வரத்தையுந் தந்தனனே.
என்று கூறிய பாடல், தான் தனது அகங்கார போத ஒழிவில் பெற்ற அருளொளியின் உறவு பற்றிக் கூறியதாம். அப்பதியை மதித்துப் போற்றி நின்று அருட் கலப்பு எய்திவிட்ட காரணத்தால், இதுகாறும் தொல்லை வினை வசத்தால் அல்லல் பட்ட அவல வாழ்வெல்லாம் ஒழியவும் எல்லையிலா இன்புறுவில் என்றும் திகழவும் ஆன உண்மை வரலாற்றைக் குறித்திடுகின்றார் இந்த பாடலிலே.
மேலும், ஒரு பாட்டினை இசைக்கின்றார். தான் பெற்ற பேறு தனக்கு மட்டும் உரிமையான ஒன்றல்ல. அருள் அம்பலத்தைச் சார்கின்ற எல்லோருக்கும் இச்சாகா வரமும் சதானந்த வாழ்வும் கிடைப்பதே என்று உறுதி அளித்துள்ளார். இதற்குச் சான்றான அருட்பாடல் இதுவாம்.
ஒன்றுகண் டேந்திரு அம்பலத் தேயொளி யோங்குகின்ற
நன்றுகண் டேனுல கெல்லாந் தழைக்க நடம்புரிதல்
இன்றுகண் டேனென்றுஞ் சாகா வரத்தையும் எனக்கருள
மன்றுகண் டார்க்கிந்த வாழ்வுள தென்று மகிழ்ந்தனனே.
என்பதால், அவர் கண்டு, கொண்டு வழங்கிய உண்மையை நன்கு தெரிந்து கொள்ளலாம். இவை போல ஆயிரக் கணக்கான பாடல்களின் தொகுப்பே திருவருட்பா ஆகும்.
இந்த அருட்பா என்னும் கண்ணாடி வழியாக, நம் அருள் உணர்வாகிய கண்ணைக் கொண்டு உள் நோக்கினால், அருள் அம்பலத்தையும் அதிலே நித்தியானந்தத் தாண்டவம் புரிகின்ற அருட்பெருஞ் ஜோதியையும் கண்டு கொள்ளலாம்.
அருட்பா – அழியா வாழ்வு அருள்வது
இதற்கு முன்னுற்றார் பலவும் அக அம்பலத்தே ஆனந்த நடனபதியைக் கண்டது உண்டு. கண்டு களிகொண்டு ஆடினார்கள்; பாடினார்கள்; அருளையும் ஓரளவு பெற்ற அனந்த சித்திகள் புரிந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் அகத்திற் சென்று கலந்து அத்துவிதமாய் இருந்து அனக வாழ்வு வாழத் துணியவில்லை. அகத்தை விட்டுப் புறத்தே நழுவி நழுவிச் சென்று மெய்வாழ்வையும் நழுவவிட்டு விட்டார்கள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு:
ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்
அம்பலத்தே திருநடங்கண்(டு) அகங்களிக்கும் போது
மையகத்தே பொருந்தாத வள்ளல் அரு(கு) அணைந்தென்
மடிபிடித்தார் நானும் அவர் அடிபிடித்துக் கொண்டேன்
விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகவென் றெனது
கையகத்தே ஒரு பசும் பொற் கங்கணமும் புனைந்தார்
கருணையினிற் றாயனையார் கண்டாய் என் தோழி
என அனுபவ வாசகம் வழங்கியுள்ளார்.
முன்னோர் முடிவு
முன்னோர்கள் ஐயமுற்று, சந்தேகம் கொண்டு புறத்திருந்தார்களாம். என்ன சந்தேகம் என்றால், “அம்பல வாணனைக் கண்டு, அவனருளால் வாழ்ந்து விட்டு அவனில் ஐக்கியப்பட்டு மறைந்து போவதேதான் முடிவு” என முடிவு செய்து கொண்டிருந்தார்களே அன்றி, அந்த அம்பலவாணனோடு கலந்து விட்டால் பின்னும் இவ்வுலகில் மனித வடிவொடு வாழ முடியாது என்பது தான் அவர்களின் தீர்மானமாயிருந்தது.
இதனாலேயே “தில்லை வெளியினில் கலந்து கொண்டால் அவர் திரும்பியும் வருவாரோ!” என்றும் திருவடி சேர்ந்தார்க்கு மறுபிறப்பில்லை என்றும், வினையினால் உற்ற உடம்பிது, அவ்வினை ஒழியில், கணமும் நில்லாது என்றும், மின்னலால் தாக்குண்டு ஒழிந்தவன் தன் அனுபவத்தை மீண்டும் வந்து உரைக்க முடியாதது போலக் கண்டவன் விண்டதில்லை. விண்டவன் கண்டதில்லை எனவும் முடிவு கட்டி இருந்தார்கள்.
ஆகவே தான், அம்பலவாணனோடு கலந்து விட்ட பின்னும் வாழலாம் என்ற கருத்து பெரும் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டதாம்.
இதனால் அவர்கள் புறத்திருந்தே ஏகதேச சித்தி அனுபவங்களோடு வாழ்ந்துவிட்டு நீங்கிவிட்டார்களாம். அப்படிப் புறத்திருந்து வாழுங்காலும், அவரவர்கள் செய்த அத்துவித பாவனா தவ விரதங்களால்தான் அற்புத சக்தி சித்திகள் பெற்று விளங்கி இருந்தார்கள் என அறிகின்றோம்.
அப் பாவனா பழக்கச் சமாதி நிலைகளும், யோக ஞான சித்தி அனுபவங்களும் அவர்களுக்கு தேக அந்தியம் வரைதான் நியதி செய்யப்பட்டிருந்தனவாம். இவர்கள் சந்தேகத்தால் தம் தேக வாழ்வை இழந்தார்கள் என்னலாம். ஆனால் அது ஒரு பெருநஷ்டமாகவோ, பேரிழப்பாகவோ அன்று அறியப்படவில்லை!
ஏனெனில், கடவுள் உண்மை கண்டு உடலோடிருக்கும் வரையில் ஜீவன் முக்தர்களாய் வாழ்ந்துவிட்டு, முடிவிலே அக்கடவுளோடு இரண்டறக் கலந்து நின்று உடலை உதறிவிட்டு விடுகின்ற விதேக (தேகம் இல்லாத) :முக்தி நிலையே பெரு முடிவாகவும் பேரின்ப ஆன்ம லாபமாகவும் கருதி இருந்தார்கள். ஆகையால்தான் முடிவான தேக நஷ்டம் பெரிய லாபமாகவே மாறுபடக் கொள்ளப்பட்டதில் வியப்பொன்றும் இல்லையாம்.
ஆனால், இப்பொழுதுதான் இந்தத் தேக வாழ்வு சுத்த சன்மார்க்கத்தால் நிலையான அருள் இன்ப மயமாய் ஆக்கிக் கொண்டு விளங்க முடியும் என்ற உண்மை அனுபவ பூர்வமாக வழங்கப்பட்டு விட்டது நம் அருள் அண்ணலாரின் மூலமாக.
உண்மை வள்ளல் யார்?
உள்ளொளிர் அருட்ஜோதி தான் உண்மை வள்ளலாக இருக்கின்றது. எல்லோருக்கும், எல்லாக் காலத்தும், எல்லா இடத்தும் உண்மையான தேவைகள் எவையோ, அவைகளை எல்லாம், அவர் அவர்கள் கேட்டாலும் கேட்கா விட்டாலும் இடையறாது கொடுத்துக் கொடுத்து உள்ளும் புறமும் துணை நின்று காத்து வாழ்வித்து உய்வளிக்கின்ற வள்ளல் தான் நமது உள்ளமாகிய சத்திய ஞான சபையிலே விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணைப்பதி ஆவார். இவரன்றோ மெய்யான வள்ளல்.
உலகம் கண்ட முதல், இடை, கடை வள்ளல்கலையும் பிற ஏகதேசமான தர்மங்கள் செய்தும் ஞான உபதேசங்கள் புரிந்தும் வள்ளல் என்ற பட்டம் பெற்றவர்களெல்லாம் நம் அருட்பெருந்தயாஜோதி வள்ளலுக்கு எங்ஙனம் நிகராவார்கள்! ஒருபோதும், சிறிதளவும் நிகராக மாட்டார்கள் என்பது உண்மை.
அருள் ஒளியால் அருட் பிரகாசரானார்
இந்த அருட்ஜோதி வள்ளலைத்தான் அம்பலத்திலே நம் அருட்பிள்ளையார் கண்டார், கலந்தார், அதுவாகி வாழலானார். இந்த உண்மையை இப்படிப் பாடுகின்றார்.
அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் ஜோதியைஎன்
அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத்
தெருளுறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை
மருவு பெரு வாழ்வைஎல்லா வாழ்வும் எனக்களித்த
வாழ்முதலை மருந்தினைமா மணியை என் கண் மணியைக்
கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்
கண்டுகொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்து கொண்டேன் களித்தே
எனத் திருவடிப் புகழ்ச்சியில் போற்றி செய்கின்றார். மேலும் பாடுகின்றார்.
அடியாது என்று அறிந்துகொளற்கு அரும்பெரிய நிலையே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே!
முடியாதுஎன்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர்
மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே
கடியாத பெருங்கருணைக் கருத்தே என் கருத்தில்
கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியேஎன் களிப்பே
மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே
மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கையியற் பொருளே.
என்பதில் இருந்தே அகமுடையானோடு அத்துவிதமாகி மடியாத வடிவெய்தி வாழும் வரம் பெற்ற உண்மை பேசப்படுகின்றதாம். இதனால், இப்பொழுது இவர் இராமலிங்கர் அல்ல; உண்மையில் அகம் வளர் அருளொளி வள்ளலே என அறிந்து கொள்ள வேண்டும்.
புற உலகம் இவரை இராமலிங்க அடிகளாராகத் தான் கண்டு கொண்டிருந்தது. அருட்ஜோதி வளர் அகவுலகில் அருட்பிரகாச வள்ளலார் ஆக விளங்கலாயினார். இந்தத் திருவருட் பிரகாச வள்ளலுக்கு, கற்பூர மணம் கந்திக்கும் கடவுட் ஜோதித் திருமேனி ஏற்பட்டு விட்டதாம். இதனை அவரே கூறுகின்றார்.
கடவுட் கற்பூரமணம் பெற்ற வள்ளல்
கற்பூர மணக்கின்றது என் உடம்பு முழுதுங்
கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
இயற்கைமணம் துரியநிலை இறைவடிவத்(து) உளதே
பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
புண்ணியனார் திருவடிவின் நண்ணியவா(று) அதுவே
நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
நான்கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அதுஆ னேனே.
இதனால் நம் வள்ளலார் பசுங்கற்பூர நறுமணம் வீசும் தெய்வத் திருமேனியோடு என்றும் திகழ வல்லவராகி விட்டார் என்று அறிதல் வேண்டும். இந்நிலை அனுபவம் இறுதிக் காலத்தில் தான் கிடைக்கப் பெற்றது. அதாவது அகமிருந்து அனக முற்றதாகும். இது வெளியாகுமுன் சுத்த தயவு நிரம்பிட வேண்டியிருந்தது. ஜீவ கருணை வளர வேண்டியிருந்தது.
அறிவு ஒன்றாலே ஆதிகாலத்தில் தானே கடவுள் ஆன்ம உண்மை கண்டு கொள்ளப்பட்டு இருந்ததால், அது குறித்து முயற்சி கொள்ளவேண்டிய பொறுப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால், அந்த அக ஞானத்தால் கண்டிருந்த கடவுள் உண்மை கொண்டு வாழற்கு வகை தேட வேண்டிய பொறுப்புதான் பெரிதான ஒன்றாய்த் தோன்றி இருந்தது. அறிவினாற் கண்டதைப் பாவனையால் கூடி சிறிது காலம் களித்திருந்து அழிந்து போகத்தான் செய்ததால், அவ்வழியை விட்டுவிட்டு வேறு ஒரு புது நெறியைக் காண வேண்டியிருந்தது. இப்புது நெறி கடவுள் இயற்கையோடு வெளிப்பட நேர்ந்ததாகும்.
தயவு