ஜலத்தில் இருக்கின்ற பாசியை நீக்குவது போல் நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தால் அல்லது மற்ற உஷ்ணங்களால் நீக்கமுடியாது.
அந்த உஷ்ணம், யோகியினுடைய அனுபவத்தில் தெரியும், யோகிகள் வனம், மலை, முதலிய வற்றிற்குப் போய் நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ் செய்து இவ்வுஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள் இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டுபண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும்,
தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் இதைவிடக் கோடிப்பங்கு, பத்துக்கோடிப்பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டுபண்ணிக் கொள்ளலாம்.
எவ்வாறெனில் ஒரு ஜாம நேரம் மனதில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவது இருந்தால் நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம். இடைவிடாது நன்முயற்சியின் கண் பயிலுதல் வேண்டும்.
பச்சைத்திரை:
இரண்டு கூறுகளாய் உடையது. கீழ்ப்பாகத்தில் உள்ளது – அசுத்த மாயாதிரை-இகலோக போக லட்சியமுடையது. மேற்பாகத்தில் உள்ளது-சுத்த மாயா திரை பரலோக சாத்தியத்தை உடையது.
பேருபதேசம் தொடரும்..