“இந்த ஆட்டை விரட்டுங்கள்! எங்கிருந்து வந்தது இந்த ஆடு – நல்ல சொற்பொழிவைக் கேட்கக் காத்திருக்கும்போது நடுவில் வந்து வந்து தொல்லை செய்கிறதே. விரட்டுங்கள்”.
வடலூரில் வள்ளலாரின் சொற்பொழிவைக் கேட்பதற்காக நூற்றுக்கணக்கானவர்கள் கூடியிருந்தார்கள். ஆடு ஒன்று கூட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து அசையாமல் நின்றிருந்தது. அதை அங்கிருந்து விரட்டுவதற்கு பலரும் முயன்றார்கள்.
அவர்கள் விரட்டியதும் அங்கிருந்து சிறிது தொலைவு செல்வதுபோலச் சென்று மீண்டும் பழைய இடத்திற்கே அந்த ஆடு வந்தது. கூட்டத்தினர் ஆட்டட விரட்டிக் கொண்டிருந்ததைக் கண்ணுற்றவாறே அவ்விடம் வந்தார் வள்ளலார்.
“வாயில்லா ஜீவனான ஆட்டை எதற்காக விரட்டுகிறீர்கள். அது நின்றுவிட்டுப் போகட்டுமே” என்றார் வள்ளலார் அவர் கூறியபின்பு. எவரும் ஆட்டை விரட்டவில்லை. வள்ளலார் உரையாற்றத் துவங்கினார். உரையின் போக்கிலே அனைவரும் தம்மை மறந்து இருந்தார்கள்.
ஆடு கூட்டத்தின் ஓர் ஓரத்திலே நின்ற வண்ணம் வள்ளல் பெருமானை நோக்கியது. அதனுடைய காதுகள் முன்நோக்கிச் சாய்ந்திருந்தன. பெருமான் கூறுவதைச் செவிமடுத்துக் கேட்பதுபோல ஆடு நின்றது. இருந்த இடத்தைவிட்டு அது இம்மியும் அசையவில்லை.