Vallalar Universal Mission Trust   ramnad......
உண்மை நெறி

உண்மை நெறி

(சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம்)

புருஷார்த்தம்

நாம் பெரும் புருஷார்த்தம் நான்கு அவையாவன

1. ஏமசித்தி செய்தல்

2. சாகாக்கல்வி கற்றல்

3. தத்துவ நிக்கிரகம் செய்தல்

4. கடவுள் நிலை யறிந்து அம்மயமாதல்

ஒழுக்கம்

இவை பெறுவதற்கு ஒழுக்கம் நான்கு அவையாவன

1. இந்திரிய ஒழுக்கம்

2. கரண ஒழுக்கம்

` 3. ஜீவ ஒழுக்கம்

4. ஆன்ம ஒழுக்கம்

1) இந்திரிய ஒழுக்கம்

1. கொடிய சொல் செவிபுகாது நாத முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்டல்:

2. அசுத்த பரிசமில்லாது தயாவண்ணமாகப் பரிசித்தல்

3. குரூரமாகப் பாராதிருத்தல்

4. உருசி(சுவை) விரும்பாதிருத்தல்

5. சுகந்தம் விரும்பாதிருத்தல்

6. இன்சொல்லாடல்

7. பொய் சொல்லாதிருத்தல்

8. ஜீவஹிம்சை நேரிடும் காலத்தில் எவ்விதத் தந்திரத்தினால் ஆவது தடை செய்தல்

9. பெரியோர்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்

10.ஜீவ உபகார நிமித்தமாய் சாதுக்கள் வாசஸ்தலங்களிலும் திவ்ய திருப்பதிகளிலும் சஞ்சரித்தல்

11. நன்முயற்சியில் கொடுத்தல் எடுத்தலாதி செய்தல்

12. மித ஆகாரம் செய்தல்

13. மித போகம் செய்தல்

14. மலஜல உபாதிகளை அக்கிரமம் அதிக்கிரமம் இன்றிக் கிரமத்தில் நிற்கச் செய்வித்தல்

15. கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஒளஷதி வகைகளாலும், பெளதிக மூலங்களாலும் சரபேத, அஸ்தபரிச தந்திரத்தாலும், மூலாங்கப் பிரணவத் தியான சங்கற்பத்தாலும், தடை தவிர்த்துக் கொள்ளல்.

16. மந்ததரம்; சுக்கிலத்தை அக்கிரம அதிகிரமத்தில் விடாது நிற்றல்

17. தீவிரதம்; எவ்வகையிலும் சுக்கிலம் வெளிப்படாமல் நிறுத்தல்

18. இதுபோல் உச்சி மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்

19. இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல்

20. சஞ்சரிக்கும் காலத்தில் காலில் கவசம் தரித்தல்

21. அழுக்காடை உடுத்தாதிருத்தல் முதலிய இந்திரிய ஒழுக்கம்

2) கரண ஒழுக்கம்

1. மனத்தைச் சிற்சபை இடத்தே நிறுத்தல் முதலில் புருவ மத்தியில் நிற்கச் செய்தல்

2. துர்விஷயத்தைப் பற்றாது இருக்கச் செய்தல்

3. பிறர்குற்றம் விசாரியாது இருத்தல்

4. பிறர் மீது கோபியாதிருத்தல்

5. தன்னை மதியாதிருத்தல்

6. இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல்

7. தனது தத்துவங்களை அக்கிரமத்தில் செல்லாது கண்டித்தல் முதலிய கரண ஒழுக்கமாகும்.

3. ஜீவ ஒழுக்கம்

ஆண்மக்கள் பெண் மக்கள் முதலிய யாவர்களிடத்திலும், ஜாதி சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோரென்னும் பேதம், நீங்கி, அனைவரையும் தம்மவர்களாய்ச் சமத்தில் கொள்ளுவது ஜீவ ஒழுக்கமாம்,

4) ஆன்ம ஒழுக்கம்

யானை முதல் எறும்பு வரை தோன்றிய சரீரங்களில் உள்ள ஆன்மாவே திருச்சபையாகவும், அதன் உள் ஒளியே பதியாகவும் யாதும் நீக்கமறாக் கண்டு எவ்விடத்தும் பேதமற்று எல்லாம் தானாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாம்.

இவ்வண்ணம் நின்றால் மேற்குறித்த அரும்புருஷார்த்தம் கைகூடும்.