Vallalar Universal Mission Trust   ramnad......
உபதேசங்கள்

கரிசாலையை தினே தினே பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையிலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும், மேல் குறித்த மூலிகையை அலட்சியம் செய்யாது, ஆசாரியான் திருவடியின்கண்ணே இலட்சியம் வைத்து எவ்வித தந்திரத்திலானாவது தினம் தினம் உட்கொண்டால் தேகக் கெடுதியாய அசுத்தம் நீங்கி வலிவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும். முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மகான்களிடத்தில் அனந்தகாலம் காத்தலும் மேல் குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள். பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும். மேல்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிற விசேஷ நன்று . ஜலமுள்ள இடத்தில் உள்ள காரமிராது. தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க மேல் குறித்த மூலிகையால் பித்தநீர் கபநீர் வெளியாகி கண்ணொளி விசேஷிக்கும். நேராத பட்சத்தில் பொற்றலைக் கையாந்தகரை கூடும். மேல்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தைலம் வாங்கியும் செந்தூரம் செய்யலாம் அதுபோலவே அறிவை விளக்குமாறும், கவன சக்தி உண்டு பண்ணுவதற்கும் கரணம் ஓய்வதற்கும் கபத்தை அரிப்பதற்கும் யோக்கியதையுடைய ஒளஷித தூதளை அதை மேல் குறித்த படி அநுஷ்டித்தால் விசேஷ நம்மை செய்யும், கரிசாலை தந்த கத்தியால் வசீகரமும் நேரிடும்.

தயவு.