மானிடர்களுக்கு கடவுளால் விதிக்கப்பட்ட அருள் நியதி என்ன?
ஆகாமியத்தால் சம்பாதிக்கின்ற ஜீவசுதந்திரம் மனிதர்களுக்கு அருளால் மிகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஊழ்வகையால் ஆகாரம் நேரிடாமல் பசித்து வருந்தும்படியாகவும், அந்தப் பசியை நீக்கும் நிமித்தம் ஒருவரை ஒருவர் எதிர்பார்க்கும்படியாகவும் அவர் தயவினால் ஆகாரம் கொடுத்து அப்பசியை நீக்கி அவரை நன்முயற்சியில் செலுத்தவும், ஆகாரம் கொடுத்தவர் சித்தி முத்திகளை அடையவும் செய்விப்பதே கடவுளால் விதிக்கப்பட்ட அருள் நியதி ஆகும்.
9.2
ஒருவகை ஆதாரமும் இல்லாத ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்து அந்த ஆகாரத்தால் சந்தோஷத்தைத் தோற்றுவித்தவர்களுக்கு எப்படிப்பட்ட லாபம் கிடைக்கும்?
அரசர், சுத்த வீரர், ஞானிகள், யோகிகள், சித்தர்கள் முதலானவர்கள் பசியின் சகியாமையால் பலவகையாகத் துன்பப்படுகின்றார்கள். அப்படியிருக்க ஒருவகை ஆதாரமும் இல்லாத ஏழைகளுக்கு ஆகாரம் கிடைத்தால் எப்படிப்பட்ட சந்தோஷமும் உண்டாகும்! அந்த சந்தோஷத்தை தோற்றுவித்தவர்களுக்கு எப்படிப்பட்ட லாபம் கிடைக்கும்! இப்படிப்பட்டதென்று சொல்வதற்கும் அருமை என்று அறியவேண்டும்.
9.3.
ஆகாரத்தினால் உண்டாகும் திருப்தி இன்பத்தின் தன்மை எத்தகையது?
அகம், புறம், நடு, கீழ், மேல், பக்கம் என்கிற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோட்ச இன்பமே ஆகாரத்தினால் உண்டாகும் திருப்தி இன்பம் என்று அறியப்படும்.
9.4.
இந்த ஆகாரத்தின் சொரூப ரூப சுபாவங்கள் எதனுடைய சொரூப ரூப சுபாவங்களாக அறியவேண்டும்?
இந்த ஆகாரத்தின் சொரூப ரூப சுபாவங்களும் கடவுள் அருளின் ஏகதேச சொரூப ரூப சுபாவங்களாகவே அறிய வேண்டும்.
9.5.
உள்ளபடி பசியால் வருந்துகின்ற ஜீவர்களுக்கு ஆகாரம் கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் முதலான கரணங்களின் நிலை யாது?
உள்ளபடி பசியால் வருந்துகின்ற ஜீவர்களுக்கு ஆகாரம் கொடுக்க நினைத்த போது நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்த கரணமாக விளங்கும்.
9.6.
உள்ளபடி பசியால் வருந்துகின்ற ஜீவர்களுக்கு ஆகாரம் கொடுக்க நினைத்த புண்ணியரை யோகிகள் என்றே உண்மையாக அறியவேண்டும் – என்பது எப்படி?
உள்ளபடி பசியால் வருந்துகின்ற ஜீவர்களுக்கு ஆகாரம் கொடுக்க நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்த கரணமாகி நினைத்தபடியால், அந்த புண்ணியர்களை யோகிகள் என்றே உண்மையாக அறியவேண்டும்.
9.7.
ஆகாரம் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும் புண்ணியர்களை 1.ஞானிகள் என்றும் 2. தெய்வம் என்றும் 3. கடவுளைக் கண்டவர்கள் என்றும் 4. கடவுள் இன்பத்தை அனுபவிக்கின்ற முத்தர் என்றும் கூறுவது எப்படி?
1. ஆகாரம் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவர் உண்ணுவது தாம் உண்ணுவதாக அறிந்து களிக்கின்றபடியால், ஞானிகள் என்றே உண்மையாக அறிய வேண்டும்.
2. ஆகாரம் கொடுக்க உண்டு, பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும், கீழும் மேலும், நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்கள் எல்லாம் குளிர்வித்துத் தேகமுழுவதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற, கடவுள் விளக்கத்தையும், திருப்தி இன்பமாகிய கடவுள் இன்பத்தையும், பிரத்தியட்சத்தில் தெரிசித்து அனுபவிக்கின்றவர்கள் ஆதலால் அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்கள் என்றும், கடவுள் இன்பத்தை அனுபவிக்கின்ற முத்தர் என்றும் அறிய வேண்டும்.
3. பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்கள் ஆதலால், இவர்களே தெய்வமும் என்று உண்மையாக அறிய வேண்டும்.
Write a comment