Vallalar Universal Mission Trust   ramnad......
கடவுள்

7.1.

கடவுள் அண்டங்கள் முதலானவற்றை எதனால் தோற்றுவித்தார்?

கடவுள்

எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோற்றுவித்து விளங்க விளக்கஞ் செய்விக்கின்றார்.

7.2.

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக்கூடும்?

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் பெறக்கூடும்.

7.3.

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை “ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்ற வழியைத் தவிர வேறு எந்த வழியாலாவது பெற முடியுமா?

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் பெறக்கூடுமல்லது வேறு எந்த வழியாலும் சிறிதும் பெற முடியாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.

7.4.

கடவுள் அருளை ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் பெறக்கூடுமல்லது வேறு எந்த வழியாலும் பெறமுடியாது என்பது எப்படி?

அருள் என்பது கடவுள் தயவு அல்லது கடவுள் இயற்கை விளக்கம். ஜீவகாருண்யம் என்பது ஜீவர்கள் தயவு அல்லது ஜீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும், விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலும் கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவம்; வேறொன்றினால் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம் வேண்டாம் என்று அறிய வேண்டும்.

7.5.

கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயம் ஆவது எவர்க்கு சாத்தியமாகும்?

கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயம் ஆவது ஜீவன் முத்தர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.

7.6.

கடவுள் நிலை எப்படி கைகூடும்?

ஜீவகாருண்யம் உண்டாகும்போது அறிவும், அன்பும் தோன்றும்; அது தோன்றவே கண்ணோட்டமும், ஒருமையும், உபகாரமும் விளங்கும். அத்துடன் அருள் விளக்கமும் தோன்றும். அது தோன்றவே கடவுள் நிலையும் கைகூடும்.

7.7.

கடவுள் அருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனம் எது?

ஜீவகாருண்யமே கடவுள் அருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமாகும்.

7.8.

கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் எத்தகைய ஜீவர்களுக்கு வெளிப்படும்?

ஆன்மாக்களின் இயற்கை விளக்கமாகிய ஜீவகாருண்யம் உள்ள ஜீவர்களுக்கு கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படும்.

7.9.

கடவுள் இயற்கை விளக்கத்திற்கு இடமாக விளங்குவது எது?

கடவுள் இயற்கை விளக்கத்திற்கு இடமாக விளங்குவது- ஜீவதேகங்கள் என்கிற ஆலயங்களேயாகும்.

7.10.

பசித்தவர்களுக்கு பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற ஜீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது யார் யாரால் செய்யத்தக்கது என்று கடவுள் ஆணை செய்திருக்கிறார்?

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டுபண்ணுகின்ற ஜீவகாருண்யமாகிய மேலான விரதமானது தேவர்கள், மனிதர்கள், பிரம்மச்சாரிகள், சமுசாரிகள், தபசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியர், பெண் சாதியர், வார்த்திபர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம் செய்யத்தக்கது என்பது கடவுள் ஆணை என்று அறிய வேண்டும்.

7.11.

ஜீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்வது எப்படி?

ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கமாகிய காருண்யம் உண்டாக உண்டாக அந்த ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டு பூரணமாக விளங்கும். அத்திருவருள் விளங்கவே கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாகும் அவ் அனுபவம் பூரணமாதலே கடவுள் வழிபாடு என்று அறிய வேண்டும்

7.12.

ஆன்ம உருக்கம் உண்டாக உண்டாக ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்படுவது எப்படி?

தயிருக்கும் கட்டைக்கும் கடைதலால் நெகிழ்ச்சி உண்டாக, உண்டாக அதன உள்ளிருக்கின்ற வெண்ணெயும் நெருப்பும் வெளிப்படுவது போல் வெளிப்படும் என்று அறிய வேண்டும்.

தயவு