மாசுகளால் தூய்மையிழந்த தேகத்தை தாம் எப்படி பொன்னுரு (ஸ்வர்ண தேகம்)வாக்கிக்கொண்டார் என்பதை வள்ளலார் பாடி வைத்திருக்கிறார்.
சாகாக்கல்வியின் தரமெலாம் உணர்த்திச்
சாகாவரத்தையும் தந்து மேன்மேலும்
அன்பையும் விளைவித் தென்னையும் நின்னையும்
இன்பையும் நிறைவித் தென்னையும் நின்னையும்
ஓருருவாக்கியான் உன்னியபடியெலாஞ்
சீருறச் செய்துயிர்த் திறம்பெற அழியா
அருளமுதளித்தனை அருணிலை ஏற்றினை
அருளறிவளித்தனை அருட்பெருஞ்ஜோதி
இப்படிப்பா நடையில் குறிப்புகள்
ஏன் பிறந்தோம்? என்ற கேள்வியை எல்லாரும் தங்களுக்குள் எழுப்பிக் கொள்கிறார்கள். ஆனால் உரிய விடைதான் அவர்களுக்குக் கிடைத்தபாடில்லை. சாகா நிலையென்னும் முடிந்த நிலையை அடைதற்காகவே உயிர்கள் பிறந்தன .
தூலவுடல் அழிதல் கண்டு சாகா நிலை மீது நாம் ஐயம் கொள்ள வேண்டியதில்லை. சாகாநிலை என்பது மீண்டும் பிறவாநிலை.
இறவாதார் எவரோ அவரே மீண்டும் பிறவாதார். தீயவர்களின் நுண்ணுடல் மீண்டும் பிறக்கும். நல்லவர்களீன் நுண்ணுடல் மீண்டும் பிறப்பதில்லை.
பிறவிக்கு வித்தாயிருப்பின அழுக்காறு முதலிய தீமைகள். தீமைகளற்றது சுத்த தேகம்.
தூல உடல் பற்றி எவரும் ஐயுருவதில்லை. நுண்ணுடல் பற்றியே சிலருக்கு ஐயம். தூல சரீரம் மண்ணுக்கோ, நெருப்புக்கோ இரையாகும். ஆனால், நுண்ணுடல் அழிவதில்லை. உயிர் அந்நுண்ணடலோடு மேற் செல்லுகிறது.
தீய எண்ணங்கள் மனிதனை
கீழ் நோக்கச் செய்கிறது, பிறக்கிறான்
நல்ல எண்ணங்கல் அவனை
மேனோக்கச் செய்கிறது, நிலைக்கிறான்
தூல சரீரத்துடன் வாழும் நாம் என்ன செய்ய வேண்டும்? நல்லெண்ணங்களால் நுண்ணுடலைப் பண்படுத்தி மீண்டும் பிறவாமை என்னும் சாகாநிலை அடைய உழைக்க வேண்டும்.
இராமலிங்க சுவாமிகள் இறுதிப் பேறாகிய சாகாநிலையைக் குறிகொண்டே வாழ்வு நடத்தினார். அவர் தூய நல்லெண்ணங்களால் நுண்ணுடலைச் செம்மை செய்தனர்.
சுவாமிகள்
ஆனந்தத்தில் தோய்ந்து
அனந்த மயமாய்
ஆனந்த வடிவினராயினர்.
எல்லா உயிர்களையும் சமமாய் கருதுங்கள். எல்லா உயிர்களும் இன்புற வேண்டி கருணை செய்யுங்கள். சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றி எக்காலத்தும் நாசமடையாத சுத்ததேகத்தையும், பிரணவதேகத்தையும், ஞானதேகத்தையும் பெறுங்கள் என்பார் அவர்.
மெய்யறிவால் மட்டுமே முதல் உருமாற்றத்தை நிகழ்த்த முடியும். அதற்குத் தேவை பரோபகராமும், கடவுள் தியானமும், இரக்கத்தின் மூலம் இறையருளை எளிதாய் பெறமுடியும் என்பது அவருடைய கருத்து.
அருளென்பது, இறைவன் நம்மிடம் காட்டும் கருணை. இரக்கத்தை நம்முள் வளர்த்துக் கொண்டால், பிரபஞ்ச ஆன்ம தொடர்பு உண்டாகும். உலகளாவிய அன்பும் உருவெடுக்கும். இரக்கம் என்பது மனித உயிர்கள் காட்டும் கருணை. அதை வளர்த்துக் கொண்டால் இறையருளை அறியமுடியும்.
தொடர்ந்து இறைவனை சிந்திப்பது, ஆர்வத்துடன் பிரார்த்திப்பதுமே அவனருள் பெறுகிற வழியாகும்.
இறைவனை உணர்ந்து, அன்பில் கரைந்துருகும்வரை ஒருவர் இடைவிடாது தியானித்து வரவேண்டும். கரைந்ச்துருகும் நிலையில் கண்ணீர் பொங்கி வழிந்தோடும். சாதகனுக்குள் ஒரு வெதுவெதுப்பு பரவி நிற்கும்,
நினைந்து நினைந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்தன்பே
நிறைந்து நிறைந்தூற்றெழுங் கண்ணீரதனாலுடம்பு
நனைந்து நனைந்தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்தேத்து நாம் வம்மினுலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் செய்கின்றேன்
பொற்சபையிற் சிற்சபையிற் புகுந்தருணமிது
இந்த ரகசியம் தெரிந்திராத யோகிகள் உலக இன்பங்களைத்துறந்து துறந்து கடுமையான நியமங்களைக் கடைப்பிடிக்கின்றனர். உடலை வருத்திப் பயிற்சிகள் செய்கின்றனர்.
ஒளியின் வடிவில் இறைவனின் அருள் இறங்கிவர பிரபஞ்ச அன்பும், உடல் மற்றும் மனம் சார்ந்த உவகையும் உதவும் அந்நிலையிலே தூல சரீரத்தின் அழுக்குகள் நீங்கி, சுத்த தேகம் பொன்னொளி வீசும்.