Vallalar Universal Mission Trust   ramnad......
கடவுளின் சச்சிதானந்த நிலை

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே எல்லாம் வல்லவர். இயற்கை உண்மையாம் சத்தாகி, இயற்கை விளக்கமாம் சித்தாகி, இயற்கை இன்பமாம் ஆனந்தமாய்த் திகழ்ந்து கொண்டுள்ளவர் ஆவர். புலனாகின்ற தூல வண்ணமான ஒன்றல்ல. எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள் அகத்தே என்றும் இருக்கும் சத்திய சொரூபமான ஒன்றாய்

அந்தக் கடவுளரின் சத்தான நித்திய இயற்கை வடிவம், புறத்தில் இருக்கின்றதாம்.

இந்தச் சத்திய சொரூபி ஆகிய ஒன்றான கடவுள் தான், என்றென்றும், எங்கெங்கும் யாவுமாய்த் தன் புற வண்ண அனந்த பேதத்தோற்றங்களைச் சதா காட்டிக் காட்டி, மறைத்துக் கொண்டே இருக்கின்றார். இதுதான் அந்தச் சத்சொரூபி ஆகிய ஆண்டவரின் சித் விளக்க நிலையாகும்.

ஏன் இந்தச் சித்துச் செய்லாகிய உலகுயிர்ப் பொருள்களின் தோற்றமும் கேடும் இந்தப் பிரபஞ்சத்தில் இடையறாது நிகழ்த்தப் பட்டுக்கொண்டே இருக்கின்றது சதா காலமும்?

ஏனென்றால் அதுதான் கடவுளரின் இயற்கைச் சுபாவமாக இருக்கின்றதாம். அதாவது, ஆண்டவரின் தன்மை பெருந்தயவாக இருப்பதால், அதுவும் செயலோடு காரியப்பட்டுக் கொண்டேயிருப்பதால் உலகுயிர்ப் பொருள்கள் எல்லாம் தோன்றி விளங்குகிடுவதற்குத்தான் கடவுட் தயா செயல் வெளிப்படுவதாய் உள்ளதாம். முடிவில் இத்தயா அனுபவம் அகமிருந்து வெளிப்பட்டு விளங்க நேரும்போது அதுவே இயற்கை உண்மை இன்பம் என்னும் ஆனந்தமாக இருக்கின்றதாம். ஆகவே இந்த ஆனந்தம்தான் கடவுளரின் சுபாவம் ஆக அறியப்படும்.

இவற்றால், சத்தாகிய ஆண்டவர் சொரூபம் அகத்திலே நிலைத்து இருக்கின்றதாகவும், சித்து விளக்கத் தோற்றங்களாய்க் காரியப்பட்டுள்ள பிரபஞ்சம் முற்றும் ஆண்டவரின் புற வண்ண ரூபமே என்றும், முடிவில் பெறப்படுகின்ற அழிவற்ற தயானந்த வாழ்வு நிலையே, நமது ஆண்டவரின் சுபவம் என்றும் தெரிந்து கொள்ளுவோமாக.

அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மை

ஒன்றான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் சத்து வடிவினர். அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரேதான் தனது சித்து வசத்தால் எல்லாமாய் விளங்கிக் கொண்டே இருக்கின்றார். முடிவில் அவ் அருட்பெருஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை வடிவினராய்ப் பேரின்ப வாழ்வு நிலைக்கச் செய்ய வெளிப்படுகின்றார். இதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணையோடு வெளிப்பட்டு விளங்கும் உண்மை ஆகும்.

இராமலிங்கரின் அகமும் புறமும்

இந்த உண்மையை உள்ளவாறு கண்டு, அனுபத்திற்கொண்டவர்தான், நாம் போற்றும் சிதம்பரம் இராமலிங்க அடிகளார் ஆவார். இந்த இராமலிங்க அடிகளாரைப் பற்றிய புறவாழ்க்கை வரலாறுதான் உலகம் அறிய அவாவுகின்றது. மிகவும்முயன்று ஆதாரங்களைத் தேடித் தேடித் சேகரித்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆராய்ச்சி முறையால் ஏகதேச நன்மையே உண்டாகலாம்.

முழுமையான நற்பயம் விளைய வேண்டுமானால் அக உண்மையை அருள் விசார முறையால்தான் அறிந்து கொள்ள வேண்டியுள்ளதாம்.

இராமலிங்கப் பெருமானைப் பற்றிய அக உண்மையை எப்படி டருளாலே விசாரிப்பது?

மக்கள், பொறிவாயில் புறஞ்சென்று பொருள் தேடித் தேடித் துய்த்துக் களித்ததற்கே பழக்கப்பட்டிருக்கின்றனர். எதையும் புற நாட்டத்தோடே ஆராய்கின்றனர். புறப்பயனையே வேண்டுகின்றனர். அதே முறையில்தான் நம் அடிகளாரைப் பற்றியும் புற வாழ்க்கை வரலாற்றை மிகப் பாடுபட்டு, பலவிடங்களிலும் மக்கள் மூலமாகவும், நூல்கள் மூலமாயும் விசாரித்தரிய முயன்றுள்ளனர்.

அவ்விசாரத்திற்கு ஒப்பற்ற அகச் சான்றாகக் கிடைத்துள்ளது அண்ணலார் திருவாய் மலர்ந்துள்ள திருவருட்பாவே ஆகும். இத்திருவருட்பாவையும் கூட புற ஆய்வுக்கே பயன்படுத்துகின்றனர். மக்கள் அவர்களுக்கு ஏதோ சிறிது வரலாற்றுக் குறிப்பு கிடைக்கின்றது. அத்தோடு அங்கங்கு பாக்களின் உதவியும் பெற்றுச் சில விளக்கங்களைத் தருகின்றனர். இவ்விளக்கங்களுக்கு உறுதி அளிப்பதாகக் கருதிக்கொண்டு பிறரையும், பிறர் கூற்றுக்களையும் வளைத்துப் பிடித்து ஒப்பு நோக்கி, ஒன்று படுத்திக் காட்டி மகிழ்ந்து போகின்றார்கள்.

இது எப்படி இருக்கின்றது என்றால் ஒருவன் ஓர் ஊரைப்பற்றிய விளக்கத்தை நேரடியாக அங்கு வாழ்ந்திருந்து அனுபவித்து எடுத்துக்கூறுகின்றான். மற்றொருவனோ அந்த ஊரைப்பற்றிச் சிறிதே நூலறிவும், லேசான கேள்வி ஞானமும் கொண்டு எடுத்துக் கூறுகின்றான் எனில், இவற்றில் எது உண்மையை வெளிப்படுத்தும் எனச் சொல்லவும் வேண்டுமோ! முதல்வன் கூற்றே பொருந்தும் என்பது யாவரும் அறிவர்.

இது போலப் புற நிலை ஆராய்ச்சிகள் எல்லாம் உண்மையைத் தெரிவிக்காது எனவும், அக அனுபவத்திச் சிறிதும் வழங்கமாட்டாது எனவும் அறிந்து கொள்ளலாம். ஆகையால் நாம், அக உண்மையைக் காண முயல வேண்டும்.

அடிகளின் அக உண்மை

நம் அடிகளாரின் அக உண்மை காணத் திருவருளால் கிடைக்கப்பெற்றுள்ள புறக்கருவி, திருவருட்பாவும், வடலூரின் கண் விளங்கும் சத்திய ஞான் சபையும், அன்னார் உறைவிடமாகிய மேட்டுக்குப்பச் சித்தி வளாகமும் மற்ற சூழிடமூமாகும். இப்புறத் துணைக் கருவிகட்கு மேலாய் அகத்துணை மெய்ப்பொருளாய் ஒவ்வொருவரின் உள்ளத்திலும், அவரே அருள் ஒளி வடிவாய் எழுந்தருளி உதவி புரிகின்றனர்.

ஆதலின் அவரைப் பற்றிய அக உண்மை காண வேண்டுமானால் தயா ஒழுக்கத்தோடு இருந்து கொண்டு மன ஓர்மையை உண்டாக்கி உள்நோக்கித் தியானித்தல் வேண்டும். பிரார்த்தித்தல் வேண்டும். இப்படி செய்து கொண்டிருந்தால், இதுவரையும், அறிந்தும் கேள்விப்பட்டும் அறியாத உணமைகளை உணர்த்தப் படுவோம்.

அந்த உண்மைகளை உறுதிப்படுத்த மேற்குறித்த புறத்துணைக் கருவிகளும், பிறவும் அப்போதப்போது உதவும் இப்படித்தான் அடிகளாரின் மெய் நிலையை மெய்யாக அறிந்து கொள்ளமுடியும்.

புறம் , அகம், அனகம்

திரு அருட்பாவிலே, நூன்முகமாம, சிறிதளவு நம் அடிகளாரின் புறத்தோற்றத்தைப் பற்றியும், வாழ்வு வரலாறு பற்றியும் சூழ இருந்தவர்களால் அறிந்து கொள்ளப்பட்ட வரை குறிப்பாக வரைந்து வைக்கப்பட்டுள்ளதைக் காண்கின்றோம். இலக்கண வழக்குப்படி, பாயிரம் இல்லது பனுவலு மன்றே என்ற கருத்துக்கு இணங்கித்தான் திரு அருட்பாவின் தொடக்கத்தில் அதன் பாயிரமாக நூலாசிரியர் வரலாறு கொடுக்கப்படலாயிற்று என அறிந்து கொள்ளலாம். இவ்விலக்கண முறையே கூடப் பிற்கால மரபாகத் தோன்றிய ஒன்றேயாகும்.

அக உண்மையைஆதராமாய் வைத்து, அரும் பெருஞ்சித்தர்களால் ஆக்கப்பட்ட நம் தமிழ், புறநிலைக்கு மட்டும் உதவ உருவாக்கப்பட்ட பிறச் செயற்கை மொழிகளோடு ஒப்பு நோக்குதல் ஏற்றதல்லவாம். அக உண்மையை அறிந்து அடைவதற்காகவே ஆக்கப்பட்டது தமிழ்மொழி.

அகம் அறிந்து கொண்டால் மட்டும் போதாது. அது கொண்டே அனகமாக இவ்வுலகில் வாழ வேண்டுவது நம் கடமையாக இத்தருண முதல் ஆணை செய்யப்படுகின்றோம். ஆகையால், நம் முக்கிய இலக்கிய அல்லது சாத்திர நூன்முகங்களில் அகவுண்மையையே அனக விரிவு படுத்திப் பாயிரமாகப் பகருதல் பொருந்துவதாம். மற்றபடி புற ஆய்வு வரலாற்றுக் குறிப்பும் பயன்களும் காட்டி வைத்தல் பொருந்தாவாம்.

இராமலிங்க வாழ்க்கை உண்மை

சுவாமி சரவணானந்தா.