கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருங் களிப்பே
காணார்க்குங் கண்டவர்க்குங் கண்ணளிக்குங் கண்ணே
வல்லார்க்கு மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கு மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கு நலமே
எல்லார்க்கும் பொதுவில் நட மிடுகின்ற சிவமே
என்னரசே யான்புகலு மிசையுமணிந்தருளே
அருள் விளக்கமாலை
கல்லாதவர் கற்றவர் என்று பிரித்துப் பார்க்கும் குணம் கடவுளிடத்தில் இல்லாது, நற்குணமே விளங்கிக் கொண்டிருக்கின்றபடியால், கல்லாதவருக்கும் அவருக்குத் தகுந்த பொருள் போகங்களையும் வசதிகளையும் உண்டாக்கி அவருக்கான களிப்பும், இன்பமும், ஆனந்தமும் கொடுக்கின்ற களிபே, கற்றவருக்கும் அவருக்குத் தகுந்த வசதியும் பொருள் போகங்களூம் உண்டாக்கி களிக்கச் செய்கின்ற களிப்பே.
காணாதவர் கண்டவர் என்று பிரித்தும் பார்க்கும் பாகுபாடான தீயகுணம் கடவுளிடத்தில் இல்லாமையால், காணாதவர்க்கும் கண்டவர்க்கும் ஞானக் கண்ணைக் கொடுக்கும் கண்ணே, கடவுள் அருளைப் பெற வேண்டும் என்ற வல்லமை உடையவரையும், கடவுள் அருளைப் பெற வேண்டும் என்ற வல்லமை இல்லாதவர் என்றும் பிரித்து வேறு வேறாய்ப் பார்க்கும் வேற்றுமை குணம் இல்லாததால், கடவுள் அருளைப் பெற வேண்டும் என்ற வல்லமையுடையவர்க்கும், கடவுள் அருளைப் பெற வேண்டும் என்ற வல்லமை இல்லாதவர்க்கும் கருணையோடு வரமளிக்கக் கூடிய வரமே.
` தன்னை மதியாதவர் அன்பு இல்லாதவர் என்றும், தன்னை மதித்தவர் அன்பு உடையவர் என்றும் குறை கூறும் தீயகுணங்கள் அறவே இல்லாததினாலும் கருணை மிகுதியாலும் தன்னை மதியாதவரையும் மதித்தவரையும் பிரித்துப் பார்க்காது, மதி யென்னும் அறிவு கொடுக்கும் மதியே, நல்லவர் என்றும் பொல்லாதவர் என்றும் பிரித்துப் பார்க்கும் குணம் கடவுளுக்கு இல்லாததால் இரண்டையும் சமமாகப் பார்க்கின்றதால் நடுநின்ற நடுவே.
அரக்க குணம் படைத்தவர் என்றும் மேலாம் நற்குணம் கொண்டவர் என்றும் பிரித்துக் காணும் குணம் கடவுளுக்கு இல்லாமல் பொதுவாக காணும் குணமுடைய வாரனதால் நரர், சுரர், ஆகிய இரு தரத்தார்க்கும் நன்மையே தருகின்ற நலமே.
இவ்வாறாக எல்லார் உள்ளத்திலும் பொதுவாகவும் கருணையோடும் தயவோடும், இருந்து அவரவர்களை நடத்துகின்ற சிவமே, என்னரசே நான் சொல்லும் நின் புகழையும் அணிந்து அருளே; எல்லா ஜீவர்களையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் குணத்தை யகற்றிவிட்டு எல்லா உயிர்களையும் நாமாகவே பார்க்க வேண்டும். “உயிரெலாம் பொதுவில் உளம்பட நோக்குக.