பசி வருத்தம் உண்டாகும் போது நேரிடும் நிலை என்ன?
தாகத்தால் வருந்துகின்றவரும், பிணியால் வருந்துகின்றவரும், இச்சையால் வருந்துகின்றவரும், எளிமையால் வருந்துகின்றவரும், பயத்தால் வருந்துகின்றவரும், பசி வருத்தம், உண்டாகும்போது மற்ற வருத்தங்களை எல்லாம் மறந்து பசி வருத்தம் மேற்பட்டு, ஆகாரம் தேட முயற்சி செய்கின்றார்கள்.
10.2.
தேவர்களின் பசிக்காக நாம் செய்யத்தக்கது யாது?
மனித சுதந்திரத்தினும் மேற்பட்ட சுதந்திரமுடைய தேவர்களின் பசிக்காக நாம் யோசிப்பது அவசியம் அல்ல என்றாலும் தேவர்களுக்கும் பசி நேர்ந்தால் துன்பம் உண்டாகுமே என்று இரங்குவது மாத்திரம் அவசியம் என்று அறிய வேண்டும்.
10.3
நரகர்களின் பசிக்காக நாம் செய்யத்தக்கது யாது?
நரகர்கள், நாம் பசியாற்றுவிக்க தக்க இடங்களில் இல்லாமல் வேறிடங்களில் இருக்கின்றபடியாலும், நரகர் பசிக்குத் தண்டனை பரிவாரங்களால் பசியாற்றுவித்தலாலும், அந்நரகர் பசியைக் குறித்து நாம் யோசிப்பது அவசியம் அல்ல. என்றாலும் அந்நரகரும் பசி நேரிடில் வருந்துவார்களே என்று இரங்குவது மாத்திரம் அவசியம் என்று அறிய வேண்டும்.
10.4.
தாவரங்களின் பசித் துன்பத்திற்காக நாம் செய்யத் தக்கது யாது?
1. மனிதர்கள் – தங்கள் வாழ்க்கைக்குச் சகாயமாகத் தங்கள் முயற்சியால் விளைவிக்கின்ற தாவரவர்க்கங்களுக்குப் பசி குறித்து நீர் விடுவது அவசியம்.
2. மற்றைத் தாவர வர்க்கங்கள் எல்லாம் அருள் நியதியின்படி ஆகாரம் கொடுப்பிக்க உயிர்த்திருக்கின்றன. அவைகளுக்கு எல்லாம் பசியறிந்து ஆகாரம் கொடுப்பது, நமது சுதந்திரம் அல்ல, கடவுள் சுதந்திரம் என்றும், அவை குறித்து நாம் யோசிப்பது அவசியமல்ல என்றாலும் அத்தாவரங்களும் ஆகாரம் இல்லாவிடில் வருந்துமே என்று இரங்குதல் மாத்திரம் அவசியம் என்று அறிய வேண்டும்.
10.5.
நிலத்திலும், நீரிலும் ஊருகின்ற உயிர்களின் பசித் துன்பத்திற்காக நாம் செய்யத் தக்கது யாது?
நிலத்திலும், நீரிலும் ஊருகின்ற உயிர்களின் ஊழ்வகைக்குத் தக்கபடி அருள்நியதி ஆகாரம் கொடுப்பிக்க உண்டு பசியாறுகின்றன. அவைகளுக்குத் தக்க ஆகாரம் அறிந்து கொடுப்பது நமது சுதந்திரம் அல்ல, கடவுள் சுதந்திரம் என்றும் அறிய வேண்டும் என்றாலும் அவ் ஊர்வன உயிர்களூம் ஆகாரம் இல்லாவிடில் வருந்துமே என்று இரங்குதல் மாத்திரம் அவசியம் என்று அறிய வேண்டும்.
10.6.
பறவைகளின் பசித் துன்பத்திற்காக நாம் செய்யத் தக்கது யாது?
பறவைகளுக்கு அவ்வவற்றின் ஊழ்வகைக்குத் தக்கபடி அருள் நியதி ஆகாரம் கொடுப்பிக்க உண்டு பசியாறுகின்றன. அவைகளுக்குத் தக்க ஆகாரம் அறிந்து கொடுப்பது நமது சுதந்தரம் அல்ல, கடவுள் சுதந்தரம் என்றும் அறிய வேண்டும் என்றாலும் அப்பறவை யோனி வர்க்கங்களும் ஆகாரம் இல்லாவிடில் வருந்துமே என்று இரங்குதல் மாத்திரம் அவசியம் என்று அறிய வேண்டும்.
10.7.
மிருக யோனிவர்க்கங்களின் பசித் துன்பத்திற்காக நாம் செய்யத்தக்கது யாது?
மிருக யோனிவர்க்கங்கள் அவ்வவற்றின் ஊழ்வகைக்குத் தக்கபடி அருள்நியதி ஆகாரம் கொடுப்பிக்க உண்டு பசியாறுகின்றன. அவைகளுக்குத் தக்க ஆகாரம் அறிந்து கொடுப்பது நமது சுதந்திரம் அல்ல. கடவுள் சுதந்திரம் என்று அறிய வேண்டும். அவைகளில் மனிதர் வாழ்க்கைக்குச் சகாயமாகத் தங்கள் சுதந்திரத்தால் சம்பாதித்துக் கொள்ளுகின்ற பசு, எருது , எருமை, கடா, ஆடு, குதிரை முதலிய மிருகங்களுக்கு ஆகாரம் கொடுத்துப் பசியாற்றுதல் அவசியம் என்று அறியவேண்டும். மற்ற மிருக யோனிவர்க்கங்கள் ஆகாரம் இல்லாவிடில் வருந்துமே என்று இரங்குதல் மாத்திரம் அவசியம் என்று அறியவேண்டும்.
10.8.
மனிதர்களின் பசித்துன்பத்திற்காக நாம் செய்யத் தக்கது யாது?
ஊழ்வகையினாலும் அஜாக்கிரதையாலும் பசியை நிவர்த்தி செய்து கொள்ளத்தக்க அறிவும் சுதந்திரமும் இல்லாத ஜீவர்கள் வஞ்சியாமல் தயவினால் நிவர்த்தி செய்ய வேண்டும்.
10.9.
அரசனது பசியின் சகியாமை எத்தகையது?
உலகம் முழுவதும் ஆளுகின்ற சக்கரவர்த்தியாகிய அரசனும் – பசி நேரிட்டபொழுது தனது அதிகார உயர்ச்சி முழுதும் விட்டுத் தாழ்ந்த வார்த்தைகளால் “பசி நேரிட்டது. என்ன செய்வது?” என்று அருகில் இருக்கின்ற அமைச்சர்களிடத்துக் குறை சொல்லுகின்றான்.
10.10.
சுத்த வீரரின் பசியின் சகியாமை எத்தகையது?
பகைவரால் எறியப்பட்டு மார்பில் உருவிய பாணத்தையும் கையாற் பிடித்துக்கொண்டு, எதிரிட்ட பகைவரை எல்லாம் அஞ்சாது ஒரு நிமிடத்தில் வெல்லத்தக்க சுத்த வீரரும் – பசி நேரிட்டபோது செளரியத்தை (வீரத்தை) இழந்து பசிக்கு அஞ்சிப் பக்கத்தில் நிற்கின்றவரைப் பார்த்து “இளைப்பு வருமே! சண்டை எப்படிச் செய்வது?” என்று முறையிடுகின்றார்கள்.
10.11.
ஞானிகளின் பசியின் சகியாமை எத்தகையது?
இவ்வுலக போகங்களோடு இந்திரபோகம் முதலிய போகங்களையும் துரும்பாக வெறுத்து, முற்றுந்துறந்து, அறிவை அறிந்து அனுபவம் விளங்கிய ஞானிகள் பசிநேரிட்டபோது தங்கள் அனுபவ லட்சியங்களைவிட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு (பிச்சைக்கு) வருகின்றார்கள். பலி (பிச்சை) நேராதபோது நிலை கலங்குகின்றார்கள்.
10.12.
யோகிகளின் பசியின் சகியாமை எத்தகையது?
இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து உண்மை நிட்டையிலிருக்கின்ற யோகிகள் – பசி நேரிட்டபோது தங்கள் அனுபவ லட்சியங்களை விட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு (பிச்சைக்கு) வருகின்றார்கள். பலி (பிச்சை) நேராதபோது நிலை கலங்குகின்றார்கள்.
10.13.
சித்தர்களின் பசியின் சகியாமை எத்தகையது?
இறந்தோரையும் எழுப்பத்தக்க அளவிறந்த மகத்துவங்கள் விளங்கிய சித்தர்கள் பசி நேரிட்டபோது தங்கள் அனுபவ லட்சியங்களைவிட்டு அடுத்த ஊரை நோக்கிப் பலிக்கு (பிச்சைக்கு) வருகின்றார்கள். பலி (பிச்சை) நேராதபோது நிலை கலங்குகின்றார்கள்.
10.14.
கல்வி, கேள்விகளில் நிரம்பிய வல்லவர்களின் பசியின் சகியாமை எத்தகையது?
கல்வி கேள்விகளில் நிரம்பி, அறிதற்கரிய நுட்பங்களை அறிந்து, செய்தற்கு அரிய செய்கைகளைச் செய்து முடிக்கவல்லவர்களும் பசி நேரிட்டபோது, அறிவும் கருத்தும் அழிந்து தடுமாறுகின்றார்கள்.
10.15.
ஒருவகை ஆதாரமும் இல்லாத ஏழைகளின் பசியின் சகியாமை எத்தகையது?
அரசர், சுத்த வீரர், ஞானிகள், யோகிகள், சித்தர்கள், முனிவர்கள், தபசிகள், மானிகள், ஆசாரியர்கள், கல்வி கேள்விகளில் நிரம்பிய வல்லவர்கள், காமிகள், அகங்காரிகள், டம்பர்கள் ஆகிய இவர்கள் பசியின் சகியாமையினால் பல வகையாகத் துன்பப்படுகின்றபோது – ஒருவகை ஆதாரமும் இல்லாத ஏழைகள் – பசி நேரிட்டபோது – என்ன பாடு பட்டார்கள்.
Write a comment