கண்புருவப்பூட்டு (5258-5268)
121. கண்புருவப்பூட்டு
தாழிசை
அஃதாவது, இரண்டு துருவங்களுக்கு இடைவெளியான இலாடத் தானத்தைக் கண் புருவப் பூட்டு என்று சொல்லுகின்றனர். இதனை இலாடத்தானம் என்றும் கூறுவர். இலாடத்தானம் சாக்கிரத்தானம் என்றும் சொல்லப்படும். யோகிகள் இதன் நடுவிருந்து நோக்கி ஆங்கு ஒழுகும் அமுது தானத்தை உண்டு மகிழ்வார்கள்.
5258. கையறவிலாதுநடுக்கண்புருவப்பூட்டு
கண்டுகளிகொண்டுதிறந்துண்டுநடுநாட்டு
ஐயர்மிகஉய்யும்வகைஅப்பர்விளையாட்டு
ஆடுவதென்றேமறைகள்பாடுவதுபாட்டு
உரை: யோகியர்கள் தாம் உய்யும் பொருட்டுச் சிவபெருமானை நினைந்து செய்யும் யோக விளையாட்டு என்பர் என வேதங்கள் உரைப்பதும் இதுவே என்று இயம்புகின்றனர். (1)
5259. சிற்சபையும்பொற்சபையும்சொந்தமெனதாச்சு
தேவர்களும்மூவர்களும்பேசுவதென்பேச்சு
இற்சமயவாழ்வில்எனக்கென்னைஇனிஏச்சு
என்பிறப்புத்துன்பமெலாம்இன்றோடேபோச்சு
உரை: ஞான சபையும் பொற்சபையும் நான் ஆடுகின்ற சொந்த சபையாகி விட்டது; தேவர்களும் மூவர்களும் என்னுடைய பேச்சையே பேசுகின்றார்கள்; இல்வாழ்வில் இருந்து செய்யும் விரதத்தில் எனக்கு இனி இகழ்வு இல்லை; என்னுடைய பிறவித் துன்பமெல்லாம் இன்றோடு ஒழிந்தது.(2)
5260. ஐயர்அருட்சோதியரசாட்சிஎனதாச்சு
ஆரணமும்ஆகமமும்பேசுவதென்பேச்சு
எய்யுலகவாழ்வில்எனக்கென்னைஇனிஏச்சு
என்பிறவித்துன்மெலாம்இன்றோடபோச்சு
உரை: சிவபெருமானுடைய அருட்சோதியால் உண்டாகும் அரசாட்சி எனக்கே உரியதாயிற்று; வேதங்களும் ஆகமங்களும் என்னையே புகழ்ந்து பேசுகின்றன; அறிஞர்கள் வாழும் உலக வாழ்வில் எனக்கு இனித் தாழ்வில்லை; என் பிறவித் துன்பமெல்லாம் இன்றோடு ஒழிந்தது. (3)
5261. ஈசன்அருளால்கடலில்ஏற்றதொருஓடம்
ஏறிக்கரைஏறினேன்இருந்ததொருமாடம்
தேசுறும்அம்மாடநடுத்தெய்வமணிபீடம்
தீபஒளிகண்டவுடன்சேச்ந்ததுசந்தோடம்
உரை: ஈசன் திருவருளால் எனக்கொரு ஓடம் வாய்த்தது; அதன் கண் ஏறிக் கரையேறினேன்; அங்கே ஒரு மாடம் ஒருந்தது; விளக்கம் மிகுந்த அம்மாடத்தின் நடுவே தெய்வ மணி ஒளி ஒன்று கண்டேன்; கண்டவுடனே எனக்குச்சந்தோஷம் உண்டாயிற்று (4)
5262. மேருமலைஉச்சியில்விளங்குகம்பநீட்சி
மேவும்அதன்மேல்உலகில்வீறுமரசாட்சி
சேரும்அதில்கண்டபலகாட்சிகள்கண்காட்சி
செப்பல்அரிதாம்இதற்கென்அப்பன்அருள்சாட்சி
உரை: மேரு மலையில் உச்சியின்கண் ஓங்கித் தோன்றுகின்றது உயரம்; அதன் மேல் உலகில் சிறப்பு மிகுந்த அரசாட்சி ஓங்குகிறது; அதில் பல காட்சிகள் காணப்படுகின்றன; அவைகள் சொல்ல முடியாதவை; அதற்குச் சிவனருளே சாட்சியாகும். (5)
5263. துரியமலைமேல்உளதோர்சோதிவளநாடு
தோன்றும்அதில்ஐயர்நடம்செய்யுமணிவீடு
தெரியும்அதுகண்டவர்கள்காணில்உயிரோடு
செத்தவர்எழுவார்என்றுகைத்தாளம்போடு
உரை: துரியத்தானமாகிய மலையில்மேல் ஒரு வளநாடு உளது அதன்கண் சிவயோகியர் செய்யும் நடன வீடு ஒன்றுளது; அதனைக் கண்டவர்கள் காண்பார்களானால் செத்தவர்கள் எழுவார்கள் என்று கைத்தாளம் போடுவாயாக. (6)
5264. சொல்லால்அளப்பரியசோதிவரைமீது
தூயதுரியப்பதியில்நேயமறைஓது
எல்லாம்செய்வல்லசித்தர்தம்மைஉறும்போது
இறந்தார்எழுவார்என்றுபுறந்தாரைஊது
உரை: வாயால் சொல்லுதற்கரிய சோதி மலைமேல் தூயதாகிய துரியத்தானத்தில் அன்பு தரும் வேதங்களை ஓதுகின்ற எல்லாம் வல்ல சித்தர் நம்மை அடையும் போது இறந்தவர்கள் எழுவார்கள் என்று சங்கு கொண்டு ஊதுவாயாக. (7)
5265. சிற்பொதுவும்பொற்பொதுவும்நான்அறியலாச்சு
சித்தர்களும்முத்தர்களும்பேசுவதென்பேச்சு
இற்பகரும்இவ்வுலகில்என்னைஇனிஏச்சு
என்பிறவித்துன்பமெலாம்இன்றோடேபோச்சு
உரை: ஞான சபையும் பொற்சபையும் அறியத் தகுந்தவை என்பது விளங்கிற்று; சித்தர்களும் முத்தர்களும் யாவரும் என் பேச்சே பேசுகின்றார்கள்; இவ்வுலக வாழ்வில் எடுத்துரைக்கின்ற வாழ்க்கையில் எனக்கு இனிப் பேச்சு இல்லை; என்னைப் பற்றிய பிறவித் துன்பமெல்லாம் இன்றோடு ஒழிந்தது. (8)
5266. வலதுசொன்னபேர்களுக்குவந்ததுவாய்த்தாழ்வு
மற்றவரைச்சோர்ந்தவர்க்கும்வந்ததலைத்தாழ்வு
வலதுபுஜம்ஆடநம்பால்வந்ததருள்வாழ்வு
மற்றுநமைச்சூழ்ந்தவர்க்கும்வந்ததுநல்வாழ்வு
உரை: வல்லாங்கு சொன்னவர்களுக்குத் தாழ்வு வந்து வீழ்ந்தது; அவரை ஒத்த மற்றவர்களுக்கும் தாழ்வு வந்தது; நமது வலது தோள் ஆடும் நற்குறியாக அருள் வாழ்வு வந்து விட்டது; மற்றும் நம்மைச் சூழ்ந்திருக்கும் நண்பர்களுக்கும் நல்வாழ்வு வந்து விட்டது. (9)
5267. அம்பலத்தில்எங்கள்ஐயர்ஆடியநல்லாட்டம்
அன்பொடுதுதித்தவருக்கானதுசொல்லாட்டம்
வம்புசொன்னபேர்களுக்குவந்ததுமல்லாட்டம்
வந்ததலையாட்டமின்றிவந்ததுபல்லாட்டம்
உரை: பொன்னம்பலத்தில் ஆடுகின்ற நம்முடைய பெருமானுடைய அருளாட்டம் அன்போடு துதித்தவர்க்கப் புகழ் உண்டாகிற்று. சொல்லாட்டம் – புகழ். அந்தத் திருவருள் ஆட்டத்தை அன்பொடு துதித்தவர்க்கு நல்ல புகழ் விளைந்தது; வம்பு பேசின கொடியவர்களுக்கு மல்லாட்டம் உண்டாயிற்று; வந்தபின் தலையசை வின்றிப் பல்வேறு ஆட்டங்கள் உண்டாயின. (10)
5268. நாத்தகம்சொல்கின்றவர்தம்நான்குமுடைநாக்கு
நாக்குருசிகொள்ளுவதும்நாறியபிண்ணாக்கு
சீர்த்திபெறும்அம்பலவர்சீர்புகன்றவாக்கு
செல்வாக்குநல்வாக்குதேவர்திருவாக்கு
உரை: நாத்திகம் பேசுகின்றவர்களுக்கு நாக்கில் முடை நாற்றமும் நாக்கு ருசியில் புண்ணின் நாற்றமும் சிறப்புடைய அம்பல வாணருடைய புகழ் பாடியவர்க்கு நல்ல செல்வாக்கும் நல்வாக்கும் தேவர்களின் திருவாக்கும் உண்டாயின. (11)
தயவு
திருச்சிற்றம்பலம்
Write a comment