Vallalar Universal Mission Trust   ramnad......
சன்மார்க்ககொடி

தயவு
சன்மார்க்க கொடி என்பது மஞ்சள் வண்ணமும், வெள்ளை வண்ணமும் உடையது. கொடியின் நான்கில் ஒரு பகுதி – மேல் பாகம் மஞ்சள் வண்ணமும், நான்கில் மூன்று பகுதி கீழ் பாகம் வெள்ளை வண்ணமும் உடையது.
முதன் முதலில் இக்கொடியை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தவர் வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளாவர். இவர் மஞ்சள், வெள்ளை ஆகிய இருநிறங் கொண்ட கொடியை மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை என்னும் இடத்தில் (வடலூருக்கு அருகாமையில் உள்ளது.) 22.10.1873 ஷ்ரி முக ஆண்டு ஐப்பசித் திங்கள் 7 ஆம் நாள் புதன்கிழமை காலை 8 மணிக்கு முதன் முதலாக இக்கொடியைக் காட்டி நீண்ட உபதேசம் ஒன்றையும் செய்தருளினார். சன்மார்க்கத்தின் முடிந்த முடிவான கொள்கைகளைக் கொண்ட அவ்வுபதேசம் மஹாபதேசம், பேருபதேசம் என வழங்கப்பெறுகிறது. அவ்வுபதேசத்தின் சிறுபகுதியை இங்கே காண்போம்.
“இக்காலமே சன்மார்க்க காலம்: இதற்குச் சாட்சியாக இப்போது தான் சன்மார்க்க கொடி கட்டிக் கொண்டது. இக்கொடி உண்மையில் யாது எனில் நமது நாபி (கொப்புழ்) முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது. அந்த நாடி நுனியில் புருவ மத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது. அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம், மேல்புறம் மஞ்சள் வர்ணம், அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும், இறங்கவும் இருக்கின்றது. இக்கொடி நம் அனுபவத்தின் கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமாகக் கொடி கட்டியது. இனி எல்லோருக்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.
சுத்த சன்மார்க்க கொடி என்பது இதுபோல் ஓர் காலத்தில் ஏற்றி பின் இறக்குவது இல்லை. என்றுமே ஏற்றியே இருக்கும். அக்கொடியின் உண்மை சுத்த சன்மார்க்க அனுபவத்தில் ஆன்ம அறிவில் விளங்கும். அது எப்படி எனில் சன்மார்க்க அனுபவம் என்பது எப்பொழுதும் நம் மனதை புருவ மத்தியில் நிறுத்தி, நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் இறை உணர்வு கலந்து, உயிர்கள் அனைத்தையும் தன் உயிர்போல் நேசிக்கும் குணத்தைப் பெற்று, நமது ஒவ்வொரு செயலிலும் இரக்கத்தையும் பொது நோக்கையும் வெளிப்படுத்திய வண்ணம் வாழ்ந்து வருவதே சன்மார்க்க வாழ்வு பெற அனுபவ முறையாகும். இவ்வாழ்வைப் பெற்றவர்களுக்கு இக்கொடியின் உண்மை நன்கு விளங்கும்.”
hariharan_82
எல்லாமே அனுபவத்தின் கண் விளங்கும் என்பதை வள்ளலார் சுவாமிகள் மிகவும் அழுந்தந்திருத்தமாகக் கூறிச் சென்றுள்ளார்கள்.
அனைவரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததற்கு நன்றி
Wednesday, December 16, 2009 at 06:31 am by hariharan_82