Vallalar Universal Mission Trust   ramnad......
உபதேசங்கள்

சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகளெல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள்.
வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களூம் சுத்த சன்மார்க்கானுபவ லேச (சாதாரணமானது சுலபம்) சித்தி பேதங்கள்.
சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தர்கள், மூர்த்திகள், ஈசுரன், பிரம்மம், சிவம் முதலிய தத்துவங்கள் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதற்கு மேல் இராது.
இதுவரையில் கர்ம சித்தருடைய காலம். அதனால் சமங்களும் மதங்களும் பரவியிருந்தன. இப்போது வரப்போகிறது ஞானசித்தருடைய காலம். இனி சாதி சமய ஆசாரங்களெல்லாம் போய் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் ஒன்றே விளங்கும்.
சுத்தசிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளூம் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தோட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும். அதன் மேன்மேலும் வழங்கும்.
மாயை வென்ற சுத்த ஞானிகளுக்கல்லது. மற்றவர்களூக்குப் பிழையற இயற்ற முடியாது. அந்தப் பிழைகள் சுத்த சன்மார்க்கம் விளங்குகிற காலத்தில் வெளிப்படும்.
விருப்பு வெறுப்பு அற்று அருள் வடிவாவதே சுத்த சன்மார்க்கம்.
சுத்த சன்மார்க்க லக்ஷிய அனுபவ விருப்பமுடையவர்களூக்கு நனவினும் மண்ணாசை, கனவினும் பெண்ணாசை, சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்றுங் கூடாவாம்.