®
ஓரெழுத்து விளக்கம்
“ தங்களிடம் சிவபுராணத்திற்கு விளக்கம் கேட்க வந்திருக்கிறோம்” என்று சில வித்துவான்கள் வள்ளலாரை நாடி வந்தார்கள். தமிழில் புலமை பெற்றவர்கள் என்று அவர்கள் தம்மைப்பற்றிக் கூறிக்கொண்டர்கள். வள்ளலார் அவர்களை ஒருகணம் உற்று நோக்கினார்.
சிவபுராணம் திருவாசகத்தின் அங்கம். அதற்கு விளக்கம் கூறப் புகுந்தால் நெடுநேரமாகும், விளக்கிக் கொண்டே போவேன், உங்களுக்குக் கேட்பதற்குப் பொறுமையும் திறமையும் உண்டு என்றால் விளக்குவேன். என்றார் வள்ளலார்.
எங்களால் முடியும் நீங்கள் விளக்கவுரையைத் துவங்குங்கள் என்று வித்வான்கள் உற்சாகத்துடன் மொழிந்தார்கள்.
சிவபுராணத்தின் முதல் சொல் நமசிவாய அதன் முதல் எழுத்தான ‘ந’ என்ற எழுத்துக்கு வள்ளலார் விளக்கம் கூறலானார்கள்.
‘ந’ என்ற எழுத்தின் சிறப்பு, அதைத் தொடர்ந்து அதன் இலக்கணங்கள், இலக்ஷ்ணங்கள், என்று விவரித்துக் கொண்டே போனார். நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. இவ்வளவு நுணுக்கமான நுழைபுலம் மிகுந்த உரை, துவக்கத்தில் வித்வான்களூக்கு மகிழ்ச்சியையே அளித்தது, நேரம் செல்லச் செல்ல அவர்கள் உரையை உள்வாங்கிக் கொள்ள இயலாதவர்களாக, பொறுமை இழந்தவர்களாக ஆனார்கள், அவர்களூக்கு இருக்கை கொள்ளவில்லை.
வள்ளலாரின் தலையாய சீடரும், அறிவிலே தேர்ந்தவர் என வள்ளலாரால் புகழப்பட்டவருமான தொழுவூர் வேலாயுதனாருக்கே அவரது குருநாதரின் விளக்கவுரையைக் கேட்கவும் கிரகிக்கவும் இயலாது போயிற்று. விநாயகப் பெருமான் பாரதம் சொல்ல வியாசர் எழுதினார்.
விநாயகப் பெருமானைப் போன்ற சக்தியும் திறனும் வள்ளலாருக்கு இருந்தது. அவர் விளக்கத்திப் பொழிந்தார். ஆனால் வித்வான்களுக்கோ வியாசரைப் போன்ற திறமை இல்லை.
விளக்கம் கேட்க வந்தவர்கள் களைத்துப் போனார்கள் இரண்டரை மணி நேரமாகத் தொடர்ந்து அறிவார்ந்த விளக்கம் கூறிக் கொண்டிருந்த வள்ளல் பெருமானோ சிறிதளவும் களைப்பின்றிச் சோர்வின்றி அருவிபோலப் பொழிந்துகொண்டே இருந்தார்.
வித்வான்கள் வள்ளலாரைக் கைகூப்பித் தொழுது சிவபுராணத்தின் முதல் சொல்லின் முதல் எழுத்தின் விளக்கமே இன்னும் முற்றுப் பெறவில்லை. பெருமானே, எங்களுக்கு திறனில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம்/ என்று எழுந்தார்கள் எழுந்து நின்றவர்கள் சற்று நேரத்தில் சென்றார்கள்.
தயவு
'அ' என்ற ஒரு எழுத்துக்கும் பெருமானார், அளித்த 3, 4 பக்கங்களுக்கான விளக்கம், உபதேசப் பகுதியில் உள்ளதை அன்பர்கள் கண்ணுற வேண்டும்.