Vallalar Universal Mission Trust   ramnad......
அருட்பெருஞ்ஜோதி அகவல்


அருட்பெருஞ்ஜோதி அகவல்

இதை எவ்விதம் பாடவேண்டுமென்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று இராமலிங்க வள்ளலார் அன்பர்களைத் தம்முடன் அழைத்தார். சித்திவளாகம் என்றழைக்கப்பெற்ற வள்ளலாரின் இருப்பிடத்தை அன்பர்களுடன் அவர் வலம் வந்தார். அவ்வாறு வலம் வரும்போது அருட்பெருஞ்ஜோதி அகவலை வள்ளலார் பாட, அன்பர்கள் அதனைத் தொடர்ந்து பாடினார்கள்.

அருட்பெருஜோதி அருட்பெருஜோதி என்று துவங்கும் அருட்பெருஞ்ஜோதி அகவல் 1596 வரிகளைக் கொண்டது. இந்த அகவலை வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் இருந்த சித்தி வளாகத்தின் ஒரே இரவில் எழுதி முடித்தார். ஆகம முடிமேல், ஆரண முடிமேல் ஆக நின்றோங்கிய அருட்பெருஞ்ஜோதிஎன்று வேதாமச் சிறப்புடன் தொடங்குகிறார்.

சுந்தரக் கை சாத்திய திருவோடு என்று வள்ளலாரின் முதன்மை மாணாக்கராக இருந்த தொழுவூர் வேலாயுதனார் இப்பாடலை போற்றியுரத்திருக்கிறார். இந்த அகவலை வள்ளலார் 1872ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ஆம் தேதி எழுதியருளினார்.

ஒரே இரவில் எழுதப்பெற்ற அருட்பெருஞ்ஜோதி அகவலில் அருள்விளக்கம் பெறும் வழிகளை வள்ளலார் அழகுபடப் பாடியுள்ளார். வள்ளலாரின் அருட்பெருஞோதி அகவல், அவருடைய சீடர்களாலும், அன்பர்களாலும் பாராயணம் செய்யப்பட்டது. செய்யப்பட்டு வருகிறது. சன்மார்க்க இயக்கத்தின் மகாமந்திரமாக இருப்பது, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்பதாகும்.

வடலூர் சத்திய தருமச்சாலையில், அடிகளாரின் திருவுருவப் படத்தின் பின்புறம் அவரது திருக்கரத்தால் எழுதப்பெற்ற மூல ஏடுகள் காகித நோட்டுகள் மறைவாக வைக்கப்பட்டுள்ளன. அந்நோட்டுப்புத்தகம் 58 பக்கங்களைக் கொண்டதாகும்.

சங்க இலக்கியங்களில் ஒன்றான மதுரைக் காஞ்சியில் 782 அடிகள் உள்ளன. இதனை விஞ்சிய அடிகள் கொண்ட அகவல் வேறு இல்லை. வள்ளற்பெருமானின் அருட்பெருஞ்ஜோதி அகவலே ஆயிரம் அடிகளூக்கு மேற்கொண்ட ஒரே அகவல் என்னும் பெருமை படைத்ததாகும்.

நிலைமண்டில ஆசிரியப்பா என்ற விருத்தத்தில் எழுதப் பெற்றுள்ள பக்தியும் ஞானமும் இழையோடும் இந்த அருட்பெருஞ்ஜோதி அகவல் வள்ளற்பெருமானின் ஒப்பற்ற கவித் திறனுக்கும் ஞானச் செறிவுக்கும் விளக்கமாகத் திகழ்கின்றது.

வு