அருள்பாவலர் சக்திவேல் .வே
வள்ளல் பெருமானாரும் பாரதியாரும்....!
தமிழ்ப் படைப்பிலக்கியப் போக்கின் திருப்பு முனையாகத் திகழ்பவர் மகாகவி பாரதியார். பாட்டுத் திறத்தால் தமிழுக்கு உரம் ஊட்டிய அம்மகா கவியை மறந்துவிட்டு தமிழிலக்கிய வரலாற்றை எழுத முடியாது... தனக்குப் பின்னால் ...தமிழகத்தில் ஒரு புலவர் பரம்பரையை உருவாக்கிய பெருமை பாரதிக்கு உண்டு... அம் மகாகவியின் பிறந்தநாள் 11-12-1882.. ..

அம் மகாகவி பிறப்பதற்குச் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வாழ்ந்த மாபெரும் கருணைக்கவிஞர்... வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகள்...!

வள்ளலாரைப் பற்றி பாரதி நன்கு அறிந்திருந்தார்...

சுதேசமித்தரன் இதழில் "தமிழ்நாட்டின் விழிப்பு" என்ற தலைப்பில் பாரதி ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.அதில்..

" பூமண்டலம் முழுவதும் புதிய விழிப்பொன்று வரப்போகிறது. அதற்கு ஆதாரமாக ஹிந்துஸ்தானம் கண்ணை விழித்து இருபது ஆண்டுகளாயின. ஹிந்துஸ்தானத்துக்குள் தமிழ்நாடு முதலாவது கண்விழித்தது.
ராமலிங்க சுவாமிகளும்..... இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர்....." என்று பாரதியார் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
(ஆதாரம்; பாரதியார் கட்டுரைகள் -பக்கம் -265; பூம்புகார் பிரசுரம் ,முதல் பதிப்பு -1977)

'பூமண்டலத்தின் விழிப்பானது - தமிழகத்தில் .. தாம் வாழுவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது... 'என்ற பாரதியாரின் குறிப்புரையைக் கூர்ந்து நோக்குவோம்..

அதுமட்டுமின்றி வள்ளலாரின் திருவருட்பாப் பாடலைப் போலவே ... பாரதியாரும் பாடலொன்றை இயற்றியுள்ளமை கவனிக்கத்தக்கது.

"களக்கமறப் பொதுநடம் நான் கண்டு கொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம் பூத்துக் காய்த்ததொரு காய்தான்..."எனும் வள்ளலாரின் திருஅருட்பா (3380) பாடலைச் சற்று மாற்றி ....

"களக்கமுறும் மார்லிநடம் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்....."

என்று பாரதியார் எழுதியுள்ளமை.... பாரதி வள்ளலார் மீதுகொண்டிருந்த பற்றைப் பறைசாற்றுகின்றது..

அதுமட்டுமா...

"நான்படும் பாடு .... என்ற ராமலிங்க சுவாமிகளின் பாடலைக் கேதார கௌளராகத்தில் அவர் (பாரதியார்) அடிக்கடி பாடுவதைக் கேட்டிருக்கின்றேன்...."

என்று பாரதியாரின் திருமகளார் சகுந்தலா பாரதி எழுதிய 'பாரதி என் தந்தை ' என்ற நூலில் 21-ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : பாரதி -என் தந்தை ,சகுந்தலா பாரதி , பழனியப்பா பிரதர்ஸ் ,இரண்டாம் பதிப்பு )

ஆங்கிலேயரின் பிடியிலிருந்த... பாரதத்தின் விடுதலைக்காகப் பாடுபட்டது பாரதியின் காலத்தின் கட்டாயம்....

கருணையிலா ஆட்சி கடுதி ஒழிக...!என்று பாடியது.... வள்ளலாரின் தவ உள்ளம்.

"சாதி சமய சழக்கெல்லாம் அற்றது..
சன்மார்க்க ஞானசபை நிலை பெற்றது...!"
என்று பாடியது வடலூர் வள்ளலின் அருளுள்ளம்.

"சாதிகள் இல்லையடி பாப்பா ; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..." -என்று பாடியது பாரதியாரின் பாட்டுத் திறம்.

பிறப்பால் ஒரு அந்தணராகப் பாரதி இருந்தபொழுதிலும்.... ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த கனகலிங்கருக்குப் பூணூல் அனுவித்த சீர்திருத்தத்தை என்னவென்று சொல்வது... தமிழ் மண்ணில் ... பாரதிக்கு அந்த தைரியத்தைக் கொடுத்தது வள்ளலாரின் வரிகள் தான்.... என்றால் மிகையில்லை.....

பாரதிக்குத் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம் ,வடமொழி உள்ளிட்ட பற்பல மொழிகள் தெரியும்.... ஷெல்லிதாசனாகவே மாறியவன் பாரதி...! பாரதியிடம் ... சற்று மேலை நாட்டின் சீர்திருத்தப் போக்கு இழையோடும்..... ஆனால் வள்ளலாரிடம் மையப்புள்ளியாக இருந்தது சமரச சன்மார்க்கம் என்பது..... வாழையடி வாழையாக தமிழ் மரபில் தோன்றி வளர்ந்தது அது.....

ஆம்...
இனி தமிழிலக்கிய வரலாற்றை எழுதும் ஆய்வாளர்களே.... அறிஞர்களே...! உங்களுக்கோர் பணிவான வேண்டுகோள்.....

'தமிழின்-தமிழகத்தின் மறுமலர்ச்சிக் காலம்... நவீனக்காலம்... பாரதியிடமிருந்து தோன்றியது ...'-- என்று எழுதாதீர்கள்...

தமிழின் மறுமலர்ச்சி...தமிழின் நவீனத்திற்கான விதை வள்ளலாரிடமிருந்து தோன்றியது என்று எழுதுங்கள்....

பாரதியாரே சொல்லிவிட்டாரா.....
'பூமண்டலத்தின் விழிப்பு / தமிழகத்தின் விழிப்பு ... தனக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டதென்று.....'

---

(கட்டுரை ஆக்கம் : அருள்பாவலர் சக்திவேல்.வே)