அருள்பாவலர் சக்திவேல் .வே
தைப்பூசமும் இயற்கை உண்மையும்
தைப்பூசமும் இயற்கை உண்மையும்:


தமிழகத்தின் ஆன்மிக விழாக்களில் தைப்பூசம் சிறப்பான விழா. தை மாதத்தில் வரும் முழு நிலவுக்கூடிய பௌர்ணமி பூச நட்சத்திர நாளில் வருவது சிறப்பு. குன்றுதோறும் இருக்கும் தமிழ்க் கடவுளான முருகன் ஆலயங்களில் தைப் பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் தைப்பூச விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக தைப்பூசத்தன்று மலேசிய அரசு பொதுவிடுமுறை அறிவித்து சிறப்புச் செய்கின்றது.

காலந்தோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட தைப்பூச விழாவானது வடலூர் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமனாரால் மேலும் புகழ்பெற்றது. வடலூர் சத்திய ஞான சபையில் வள்ளலார் 25/01/1872 -இல் முதல் தைப்பூச ஜோதி தரிசத்தை நடத்தினார்கள். அன்று முதல் இன்று வரை வடலூர் ஜோதி தரிசனம் சிறப்பாக நடந்து வருகின்றது.

"சத்திய ஞான சபை எனுள் கண்டனன்" (அருட்பா : 4909) என்று வள்ளலார் பாடியுள்ளார்கள். வள்ளலார் தன்னுள் உணர்ந்து அனுபவித்த அருட்பேராற்றலை உலகத்தார்க்குக் காட்சிபடுத்தும் வகையிலே வடலூர் சத்திய ஞானசபை ஜோதி தரினத்தை வடிவமைத்தார்கள்.

"அகமாகிய ஆன்மப் பிரகாசமே ஞானசபை ; அந்தப் பிரகாசத்துக்குள் உள்ளிருக்கும் பிரகாசம் கடவுள்."என்று உபதேசப்பகுதியில் (பக்கம் :345) வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும்;

"இந்தப் பவுதிக உடம்பிலிருக்கின்ற நீ யாரெனில் : நான் ஆன்மா , சிற்றணு வடிவனன். மேற்படி அணு கோடிசூரியப் பிரகாசமுடையது. லலாட ஸ்தானம் இருப்பிடம் . கால் பங்கு பொன்மை , முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சக்திகளாகிய ஏழு திரைகள் உண்டு....."

என்று உபதேசப் பகுதியில் (பக்கம்: 435) வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்கள். இக்குறிப்புகளிலிருந்து நாம் புரிந்துகொள்வதென்ன... ?

★இறை ஆற்றலானது மனிதத் தேகத்தில் விளங்குகின்றது.

★அது கோடி சூரியப் பிரகாசத்துடன் விளங்குகின்றது.

★லலாட ஸ்தானம் எனப்படும் புருவ மத்தியில் இறை ஆற்றல் விளங்குகின்றது.

★அது பொன்மையும் வெண்மையும் கலந்த பேரொளியாத் திகழ்கின்றது.

★அவ் இறையொளியை ஏழு திரைகள் மறைத்துள்ளன.

எனும் ஆன்மிக உண்மைகளை மேற்கண்ட வள்ளலாரின் குறிப்புகளால் அறிந்துகொள்ளலாம். இவ் உண்மைகளின் வடிவமைப்பே வடலூர் சத்திய ஞான சபை.

"இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞான சபைக் கண்ணே , இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய் , இயற்கை இன்பம் என்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப்பெருங் கருணைத் தனிப் பெரும் பதியாய் தனித் தலைமைக் கடவுளே....!"

என்று உபதேசப் பகுதியில் (பக்கம் : 572) வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்கள். இக்குறிப்பால் சத்திய ஞான சபையானது ஒவ்வொரு மனிதன்னுள்ளும் இயற்கையாகவே அமைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

வடலூர் சத்திய ஞான சபையின் தொடக்க விழாவின் போது ஒரு பொது விளம்பர - அறிவிப்பை வள்ளலார் வெளியிட்டார்கள். அதனுள்..

"ஒருவாற்றானும் ஒப்புயர்வில்லாத தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகப்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்....."

என்று வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்கள் (உரைநடைப்பகுதி : பக்கம் 549) .
இக்குறிப்பின் மூலம் , உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ள இறையாற்றலானது , நம் அறிவுவெளியில் நாம் அறிந்துகொள்ளத்தக்க வகையில் விளங்குகின்றது எனும் ஆன்மிக உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

மேலும் அவ் விளம்பர அறிவிப்பில் ;

"உண்மையறிவு , உண்மையன்பு , உண்மையிரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவராய் , எல்லாச் சமயங்களுக்கும் , எல்லா மதங்களுக்கும் , எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்கத்தைப் பெற்று , பெருஞ் சுகத்தையும் , பெருங் களிப்பையும் அடைந்துவாழும் பொருட்டு , மேற்குறிப்பித்த உண்மைக கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞான சபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து....."

என்று வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்கள்.(பக்கம் 550). இக்குறிப்பினால் ஞான சபையின் நோக்கம் தெளிவாக விளங்குகின்றது.

நம்முள் விளங்கும் இறைப் பேரொளியைத் தரிசிக்க ; நமக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது மேற்கண்ட வள்ளலாரின் உபதேசத்தால் அறியலாம்.

★மயக்கம் இல்லா உண்மையான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

★எவ்வித வேறுபாடும் பார்க்காது ; எல்லா மனிதர்கள் மீதும் உண்மையான அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

★பிற உயிர்களிடத்தும் அன்பு காட்டி , அவற்றிற்கு ஏற்படும் இடையூற்றை நீக்கி , எப்பொழுதும் இரக்கக் குணத்துடன் விளங்க வேண்டும்.

★நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

★சமய - மத வேறுபாடு பார்க்காது , சடங்கு - சம்பிர்தாய கண்மூடி வழக்கங்களுக்கு இடமளிக்காது இருக்க வேண்டும்.

★இயற்கையோடு இயந்து தயவு உள்ளத்துடன் வாழ வேண்டும்.

மேலும்...

★வடலூர் சத்திய ஞான சபை தைப் பூச ஜோதி தரிசனமானது சமயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது தெளிவாகின்றது.

மனிதனைப் போலவே கை- கால்களை உடைய ஒரு பருப்பொருளாகவே பற்பல சமயங்களில் இறைவன் கற்பிக்கப்படுகின்றான். அவ் இறைவனைப் புறச் சடங்குகளால் பூஜை செய்து வழிபட்டால் வேண்டியதைப் பெறலாம் என மக்கள் நம்பினர்.

ஆனால் , வள்ளலாரின் இறைகொள்கையானது இதற்கு மாறுபட்டது. இறை - கடவுள் பேராற்றலானது ஒவ்வொரு மனிதனின்னுள்ளும் இயற்கையாகவே உள்ளது என்பதே வள்ளலாரின் கொள்கை. அதன் அடையாளமே வடலூர் சத்திய ஞான சபை.

அவ் ஞான சபையில் தை மாத பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் காண்பிக்க வள்ளலார் ஏற்பாடு செய்தது ஏன்....? (சற்றே சிந்திப்போம்)

★தைப் பூசம் முழு நிலவு கூடிய பௌர்ணமி நாளிலேயே வரும்.

◆தைப்பூச நாளின் விடியற்காலையிலும் , மறுநாள் விடியற்காலையிலும் வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

◆தெற்கு நோக்கியுள்ள ஞான சபையின் முன்புறம் , நாம் வடக்கு நோக்கி நின்று ஜோதியை தரிசிக்க வேண்டும். அப்பொழுது நம் வலப்புறத்தில் - கிழக்கு திசையில் சூரியக் கதிரொளியைத் தரிசிக்கலாம். நம் இடப் புறத்தில் - மேற்குத் திசையில் சந்திரனின் ஒளியைத் தரிசிக்கலாம்

சூரிய சந்திர இயற்கை ஒளிகளோடு , ஞான சபை பேரொளியையும் நாம் தரிசிக்கலாம். ஆதலால் தான் ....

"இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமுமாய் அயர்பிலாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி." (அகவல் வரி 70) என்றும்...

"முச்சுடர் ஆதியால் எச்சக உயிரையும் அச்சறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி" (அகவல் வரி 740) என்றும் வள்ளலார் பாடியுள்ளார்கள்.

மேற்கண்ட பகுதிகளிலிருந்து ; வடலூர் சத்திய ஞான சபையின் தைப் பூச ஜோதி தரிசனம் என்பது 'இயற்கையாக மனிதத் தேகத்தில் உள்ள இறையாற்றலைப் பற்றியதாகும் ' என்று தெளிவடையலாம்.

வடலூர் சத்திய ஞான சபையின் தைப் பூச பேரொளியைத் தரிசிக்கும் நாம்.... நம்முள் அகம்நோக்கி ...நம்முள் அகவழிபாடு செய்து.... அருட்பேரொளியை கண்டு - உணர்ந்து - அனுபவித்து பேரின்பத்தை துய்க்க வேண்டும்.

என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து

என்னுளே விரிந்த என்னுடை அன்பே

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து

என்னுளே கனிந்த என்னுடை அன்பே

என்று வள்ளலார் பாடியுள்ளார்கள். (அகவல் வரி1480) இவ்வரிகளை ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது.

★இறையாற்றலான அருட்பேரொளியானது வள்ளலாரின் அகத்துள் தோன்றி , வளர்ந்து, உயர்ந்து ,நிறைந்து விளங்கியது.

(அதே போல்....)

வள்ளலார் காட்டிய ஞான வழியில் பயணிக்க விரும்புவோரும் ....புறத்தில் தேடாது அகத்துள் அருட்பேரோளியை உணர்ந்து அனுபவிக்க முற்சிக்க்க வேண்டும்

"பிண்டமும் அதிலுறு பிண்டமும் அவற்றுள் பண்டமும் காட்டிய பராபர மணியே..." என்ற வள்ளலாரின் (அகவல் வரி..1292 )களில் தைப்பூசம் பற்றிய ஆன்மிக உண்மைகள் பொதிந்துள்ளன.

இயற்கையில் அண்டத்தில் உள்ள சூரிய - சந்திர - அக்னி பேரொளிகளைப் போல ... நம்முள் ... நம் பிண்டத்தில் முச்சுடர்களைக் கண்டு பேரொளியைத் தரிசித்து , உணர்ந்து , அனுபவித்து அப்பேரொளியோடு கலக்க தகுதியாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே மேற்கண்ட அகவல் வரியின் அர்த்தமும் , ஞான சபை ஜோதி தரிசத்தின் அர்த்தமும் ஆகும்.

அதுமட்டுமின்றி .... 1872-யில் முதல் தைப்பூச ஜோதி தரிசனத்தை வள்ளலார் நிகழ்த்திய பின் ; 1874 தைப் பூச நன்னாளில் வள்ளல் பெருமனார் இறைவனோடு இரண்டறக் கலந்து சித்திபெற்றார்கள்.

ஆதலால் ...வடலூர் சத்திய ஞான சபையின் தைப் பூச ஜோதி தரிசனம் என்பது ...வள்ளலாரின் ஆன்மிக உண்மையோடு வள்ளலாரின் ஆன்மாவும் கலந்து காட்சி தருகின்றது என்பது பற்பலரின் நம்பிக்கையாய் உள்ளது.

கடந்த ஆண்டுகளில் தைப்பூச நாளில் வடலூரில் சுமார் ஏழு இலட்சம் பேர் கூடினார்கள். இந்த ஆண்டு 31/01/2018 அன்று வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு இரண்டறக் கலந்த இடமான வடலூர்க்கு தென் மேற்கே சுமார் மூன்று கி.மீ தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையின் திருவறை தரிசனமானது 02/02/2018 அன்று நடைபெறவுள்ளது . இம் மூன்று நாட்களிலும் உலகின் பற்பல பகுதிகளிலிருந்து பல இலட்ச மக்கள் கூடுவார்கள். ஆங்காங்கே சன்மார்க்க சொற்பொழிவுகளும் , திருஅருட்பா இசை நிகழ்ச்சிகளும் , இடைவிடாத அன்னதானமும் நடைபெறும். அனைவரும் வருக! வருக...!

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...!

வள்ளல் மலரடி வாழி...வாழி...!
[கருத்துப் பதிவும் பகிர்வும் : அருட்பாவலர் சக்திவேல்.வே]

2 Comments
venkatachalapathi baskar
அருமையான விளக்கம்.

திருவறை தரிசனம் என்பது தேவையில்லாத ஒன்று.
Monday, January 22, 2018 at 00:16 am by venkatachalapathi baskar
SAKTHIVEL . V அருள்பாவலர் சக்திவேல். வே
அருள் நன்றிகள்.....ஐயா...

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

எல்லாம் செயல் கூடும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...!

வள்ளல் மலரடி வாழி...வாழி...!
Monday, January 22, 2018 at 04:52 am by SAKTHIVEL . V அருள்பாவலர் சக்திவேல். வே