Damodaran Raman
கலங்கரை விளக்கம்
அன்பர்களே!  கடலில் வழி தெரியாமல் திண்டாடுபவர்களுக்கு  நல்வழி காட்டுவது கலங்கரை விளக்கம். நாம் இருப்பதும் வாழ்வதும் மரணக்கடலுள் இருக்கும் குட்டித் தீவுகள். சும்மா இருந்தாலும் சூறாவளி,இடிமின்னல்,பெரு மழை,பெருவெள்ளம்,சுனாமி என்னும் பேரலை முதலிய அழிவுகளால்  மரணம் நிச்சயம் உண்டு. மரணத்திலிருந்து தப்பிக்க வேண்டுமானால் சாக்கடலைக் கடந்து கரை சேரவேண்டுமென்பது கட்டாயமாகும்.  ஆண்டவன் வழிகாட்டுகிறான். கரை எங்கே இருக்கிறது என்பதைக் காட்டவே அமைக்கப் பட்டது கலங்கரை விளக்கம்  என்னும் சுத்த சன்மார்க்கம். தோன்றாத் துணைவனாக ஆண்டவன் வழி காட்டுவான் என்பது உண்மையே யாயினும் நிச்சயம் சோதிப்பான். சோதனையில் வென்றால்தான் கரை சேர முடியும். இல்லையேல் மரணமடைவதைத் தடுக்க முடியாது.                                                                           மரணத்தை வெல்வது அரிய பெரிய செயல். வள்ளுவர் அருளியவாறு கூற்றம் குதித்தலும் கை கூடும். யாருக்கு? நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு. நோற்றல் என்றால் தவமுயற்சி. தவம் என்றால் என்ன? சரியை,கிரியை,யோகம் என்பனவே. ஞானம் என்பது சரியை,கிரியை,யோகம் என்னும் தவ முயற்சியால் பெறப்படுவது. ஞானமென்பதும் வாசக ஞானம்,அனுபவ ஞானம் என்று மேலும் இரு வகைப்படும்.வாசக ஞானம்,அனுபவ ஞானமாக ஆகாவிடின் தவம் முழுமை பெறாது. மரணத்தை வெல்ல முடியாது.ஞானச் சரியையில் வள்ளலார் இந்த நால்வகை நெறியையும் குறிப்பாக விளக்குகிறார்.அழுத பிள்ளைதானே பால் குடிக்கும்?ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைவது  சரியை.மெய்ப்பொருளையும் மெய்ந்நெறியையும் நன்கு உணர்வது கிரியை.அதன்படித் தவத்தில் ஈடுபடுவதே யோகம். யோகத்தில் வெல்வதே அனுபவ ஞானம்.சித்தாதிச் சித்தன் சிவ பெருமான் அருளியதுதான் யோகம். யோகம் என்பது அட்டாங்க யோகம் என்று எட்டு வகைப்படும்.இதனைத் திரு மந்திரம் விளக்குகிறது. வள்ளலார் போற்றியதும் சுத்த சன்மார்க்கம் தெரிய வேண்டுமாகில் கவனிக்க வேண்டுமென்று வலியுறுத்தியதும் திருமந்திரமே எனும் ஒன்றே யாகும்.யோகம் தேவையில்லை.வாசி மரணத்தைத் தடுக்காது.வாசியோகம் பயில்பவர் மரணத்தை வெல்ல முடியாது  என்று கூறுபவர்கள்  உண்மையை விரும்பாதவர்கள் என்பதுடன் வள்ளலார் உபதேசத்தையும் புறக்கணிப்பவர்கள் என்பது தெளிவு.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  வாசி என்னும் ஒன்று-ஒன்றே ஒன்று மட்டுந்தான் மரணத்தை வெல்ல நமக்கிருப்பது. முற்றுமுணர்ந்த சிவ பெருமான்தான் வள்ளலாருக்குச் சாகாத்தலை,வேகாக்கால்,போகாப்புனல் என்னும் இம்மூன்றையும் சன்மார்க்க மரபாக உபதேசித்தான்.சிவ பெருமானும் வள்ளலாரும் வலியுறுத்திய உபதேசத்தைப் புறக்கணிக்கிறவர்களும் எதிர்ப்பவர்களும்  நிச்சயம் சன்மார்க்கம் பற்றிப் பேசும் தகுதியற்றவர்கள் என்பது சத்தியமாகும்.சொல்லால் அளப்பரிய என்னும் திருப்பாட்டில் வள்ளலார், செத்தார் எழுவாரென்று புறந்தாரை ஊது என்றார்.இதன் உண்மைப் பொருளை உணரமாட்டாதார் தாரை எதற்கு?தம்பட்டம் எதற் கெனக் கேட்பது வள்ளலாரை நையாண்டி செய்யும்  துடுக்குத்தனத்தைத்தான் வெளிப்படுத்தும்.வேகாத காலாதிகளைக் கண்டு கொண்டு மெய்த்தொழில் புரியாதவர்கள் சாவது திண்ணம். ஆனால் அதற்காகச்  சாகாத்தலை,வேகாக்கால்,போகாப்புனல்  என்னும் இம்மூன்றும் சாகாக்கல்வியைத் தெரிவிக்கும் என்பது பொய்யாகுமா? பட்டினத்தார் மூவகைச் சங்குகளை விளக்குகிறார்.அப்பாடல் முதற்சங்கு எனத்தொடங்குகிறது.முதற் சங்கு பாலூட்டும்.நடுச்சங்கு நல்விலங்கு (கல்யாணம் என்னும் தண்டனை)பூட்டும்.கடைச்சங்கு சாவின்போது ஊதப்படும். தாரை வேண்டாதவர்களுக்கு நிச்சயம் கடைச் சங்கு தேவைப்படுமென்பது சத்திய வாக்கு.                                                                         கடலைக் கடப்பதற்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டியது  கட்டாயமாகும். சாக்கடலைக் கடக்க வாசியோகம் என்னும் நீச்சல் பயிற்சி  மிகவும் இன்றியமையாதது.  இது தவறு என்பவர்கள் சிவ பெருமான் எதற்காகச் சுத்த சன் மார்க்க மரபுகளுள் ஒன்றாக வேகாத காலாதியைக் குறித்தார் என்பதையும்  வள்ளலார் எதற்காகத் திருமந்திரத்தைக் கவனிக்கச் சொன்னார் என்பதையும் தெளிவு படுத்த வேண்டும். உலக மக்கள் அனைவரும் மரணமிலாப் பெரு வாழ்வு வாழவேண்டுமென்பதே வள்ளலாரின் பெரு விருப்பாகும். வணக்கம். வாழ்க.
2 Comments
ஸ்வாமி  இராஜேந்திரன்
Ayya, What do you think of these poems;

019. பிள்ளைச் சிறு விண்ணப்பம்

சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.

முறையீடு



8. சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
தரம்அறியேன் போகாத தண்­ரை அறியேன்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்

Thanks
Wednesday, November 25, 2015 at 10:29 am by ஸ்வாமி இராஜேந்திரன்
Damodaran Raman
ஐயா,வணக்கம். நான் ஏற்கனவே அரிமா நோக்கு பற்றி விளக்கியுள்ளேன். வள்ளலாருக்கு ஒன்றிலும் இச்சை இல்லையென்றால்-வேகாத காலாதிகளை அறியாதவர் என்றால் ஏன் சுத்த சன்மார்க்கத்தைப் பற்றிக் கூற வேண்டும்? ஞானச்சரியையைப் பாட வேண்டும்? தம்மை எளிய நோக்கில் வைத்துப் பாடிய அனைத்தும் மனுஷ்ய தரத்தில் வைத்துப் பாடியதாம்.இவை போல்வன வலிமையற்றன. சித்தர் நிலையிலிருந்து பாடியவை அனைத்தும் வலிமையானவை.இவை மட்டுமே பிரமாணமாக ஏற்கத்தக்கன். இச்சையும் அறிவும் இல்லையென்றால் சித்தன் ஆனேன் என்று கூற முடியுமா?எங்கும் எதிலும் அரிமா நோக்கு வேண்டும். வணக்கம். வாழ்க.
Wednesday, November 25, 2015 at 11:21 am by Damodaran Raman