SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
திருக்கதவம் திறத்தல்

திருக் கதவம் திறத்தல்

திருக்கதவம் திறவாயோ திரைகள் எல்லாம் தவிர்த்தே
திரு அருளாம் பெருஞ்சோதித் திரு உருக்காட்டாயோ
உருக்கி அமுது ஊற்றெடுத்தே என் உடம்பு உயிரோடு உளமும்
ஒளி மயமே யாக்குற மெய் உணர்ச்சி அருளாயோ
கருக்கருதாத் தனி வடிவோய் நின்னை என்னுட் கலந்தே
கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச் செய்யாயோ
செருக்கருதாதவர்க்கு அருளும் சித்தி புரத்தரசே
சித்த சிகாமணியே என் திருநட நாயகனே .

முற்காலத்தில் குருகுலத்தில் சேர்த்துப் படிக்கவைத்தார்கள். அங்கே தவம் செய்யும் ஒரு முனிவர் இருப்பார். அவர் பிள்ளைகளுக்குக் கல்விச் செல்வத்துடன் ஞானமும் போதிப்பார். மூலாதாரத்திலிருந்து கனலைஎழுப்பிசுவாதிஷ்டானம்,மணிபூரகம்,அனாகதம்,விசுத்தி,வழியாக ஆக்ஞா பீடத்தில் கொண்டு சேர்ப்பதே சாதனையாகப் போதிக்கப் பட்டது. அவ்வைப் பாட்டிகூட தான் பாடிய விநாயகர் அகவலில் மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்தே என்று பாடியுள்ளார். வள்ளலார் .ஞானேந்திரியங்கள் கழுத்துக்குமேலே என்றும் கர்மேந்திரியங்கள் கழுத்துக்குக் கீழே என்றும் கூறியுள்ளார்."ஆன்ம வாசமாகிய இந்தத் தேகமாகிய கிருகத்தில் அருட்பிரகாசம் இல்லாது மருளாகிய அஞ்ஞான சம்மந்தம் உடைய இருள் சேர்ந்தால் பிராண நஷ்டம் உண்டாகும்.ஆதலால் நாம் நெற்றியில் இருக்கும் நடுக்கண்ணை ஆச்சாரியார் அனுக்ரகத்தால் திறக்கப் பெற்றுக்கொள்வது நலம்.ஏன் எனில் மேற்படி நெற்றிக்கண்ணைத் திறக்கப் பெற்றுக்கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப் பகல்போல் தெரியும். அவன்தான் சுத்த ஞானி.மேற்படி கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டும் சாவியும் உள்ளது.மேற்படி பூட்டை அருள் என்கிற திறவு கோலைக் கொண்டு திறக்கவேண்டும்.ஆதலால் மேற்படி அருள் என்பது ஆன்ம இயற்கையால் அடையும் பெருந்தயவு.நாம் தயா வடிவமானால் மேற்படி அனுபவம் நேரும்."(உரைநடை தெய்வநிலையப் பதிப்பு பக்கம் 420-421)
நம்முடைய நாபி முதல் புருவமத்தி வரை உள்ள கொடியையே வள்ளலார் புறத்திலே சன்மார்க்கக் கொடியாகக் காட்டியுள்ளார் என்ற உண்மை அனைவரும் அறிந்ததே. அதேபோல் தன்னுள் கண்ட ஞான சபையைப் புறத்திலே ஒரு கட்டடமாகக் காட்டியுள்ளார்.
சத்திய ஞான சபை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக்கொண்டனன் என்பதே வள்ளலார் வாக்கு.
.இந்தப் பாடலுக்குப் பொருள் காணுமுன் வடலூர் ஞான சபையை நம் கண் முன் கொண்டுவருவோம்.ஞான சபையில் கதவு உள்ளது. கதவிற்குப் பின் திரைகள் காணப்படுகின்றன.இதை மனதில் வைத்துக்கொண்டே இந்தப் பாடலின் முதல் வரியைப் படிக்கவேண்டும்.திருக்கதவம் திறவாயோ என்று நிறுத்த வேண்டும் .திரைகள் எல்லாம் தவிர்த்தே திரு அருளாம் பெருஞ்சோதித் திரு உருக்காட்டாயோ என்று படிக்க வேண்டும்.கதவிற்கு முன்னால் திரைகள் இல்லை.பெருஞ்சோதிக்கு முன்னால்தான் திரைகள் உள்ளன.ஆலயங்களில் நுழைவுவாயிலில் ஒரு பெரிய கதவு இருக்கக் காணலாம்.அந்தக் கதவிற்கு உள்ளேயே ஒரு சிறிய கதவும் இருக்கும், இந்தச் சிறிய கதவின் பெயர் மணிக்கதவு ஆகும்.அடுத்த பாடலில் மணிக்கதவம் திறவாயோ என்று வள்ளலார் பாடி உள்ளதால் இந்தக் கதவு, முன்னால் உள்ள பெரிய கதவு என்று கொள்ளவேண்டும். தக்க ஓர் ஆச்சாரியனைத் தேர்ந்தெடுத்து அவர் மூலமாக இந்தக் கதவைத் திறந்துகொள்ளவேண்டும்.இது வள்ளலார் வாக்கு.
செருக்கருதாதவர்க்கு அருளும் சித்தி புரத் தரசே சித்த சிகாமணியே என் திருநட நாயகனே.அருள் நடனம் புரியும் என்னுடைய நாயகனே ,சித்தி புரத்தின் அரசனே என் சித்த சிகாமணியே நீ அகங்காரத்தை எண்ணாது ஒழித்தவர்க்கு அருள்பவனே எனது நெற்றியிலே உள்ள கதவைத் திறக்க மாட்டாயா ,அந்தக் கதவைத் திறந்து உன்னை மறைத்துக் கொண்டிருக்கும் திரைகளை எல்லாம் தவிர்த்து உன் திரு அருளாம் பெருஞ்சோதித் திரு உருவைக் காட்டாயோ ஞான அனுபவத்தை அடையவொட்டாமல் அல்ப குணங்களாகிய காமம், குரோதம் ,லோபம், மோகம்,மதம்,மாச்சர்யம் ஆகிய தீயகுணங்கள் தடுக்கின்றன. இவைகள்தான் திரைகளாக க் குறிப்பிடப்பட்டுள்ளது .இந்தத் திரைகள் தவிர்க்கப்பட்டால்தான் நம்மால் ஒளி காண இயலும்.இந்த ஒளிதான் அருள் நிறைந்த பேரொளி. இந்தப்பாடலின் முதல் வரியில் திருக்கதவம் திறவாயோ ,பின்னர் திரைகள் எல்லாம் தவிர்த்தே திரு அருளாம் பெருஞ்சோதித் திரு வுருக் காட்டாயோ என்று பாடியுள்ளார். இங்கே திரைகள் நீக்கி என்று பாடவில்லை. திரைகள் எல்லாம் தவிர்த்தே என்ற சொல்லைக் கவனிக்கவேண்டும். இந்தக் குற்றங்கள் எல்லாம் ஒழிக்கப்படவேண்டும். !இந்தக் குற்றங்கள் எல்லாம் நீங்கிய நிலையில் மனம் செயல்பாடற்று அடங்கும்.அச்சமயம் பெருஞ்சோதி காட்சி கிடைக்கும்.
காட்சி கண்டபின் அமுதானது ஊற்றெடுத்து உடம்பு,உயிர்,உள்ளம் அனைத்தும் ஒளி மயமே ஆகும்படி எனக்கு மெய் உணர்ச்சி அருளாயோ என்று வேண்டுகின்றார் மனிதனால் கருத முடியாத ஒப்பற்ற வடிவத்தை உடையவனே நின்னை என்னுட் கலந்தே இரவு பகல் என்பதில்லாது என்றும் நான் களிப்படையும்படிச் செய்யாயோ
மன உணர்வு செல்லாத் தலத்திலே இறைவன் உள்ளதால் அவன் வடிவை யாராலும் கணிக்கவும் முடியாது கருதவும் முடியாது.
காற்றுருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்றுருவும் கனல்
உருவும் கண்டுரைப்பீர் என்றால்
வேற்றுருவே புகல்வர் அதை வேறொன்றால் மறுத்தால் விழித்து
விழித்து எம்போல்வார் மிகவும் மருள்கின்றார்
தோற்றும் அந்தத் தத்துவமும் தோன்றாதத் தத்துவமும் துரிசாக
அவை கடந்த சுக சொரூபமாகி
மாற்ற மன உணர்வு செல்லாத் தளத்தாடும் பெருமான்
வடி வுரைக்க வல்லவர் யார் வழுத்தாய் என் தோழி

2 Comments
Narayanasamy K
எனக்கு சில தகவல்கள் தேவை படுகிறது யாரை தொடர்பு கொள்வது
Thursday, March 12, 2015 at 09:20 am by Narayanasamy K
karuneegar umapathy
To get deep clarification ,you may contact , My Uncle Thiru. K.N. Umapathy, K.K.Nagar, chennai. cell number :-95 51 84 97 57... my cell number :9841232039, chennai-91..Meenambakkam.
Friday, March 13, 2015 at 05:15 am by karuneegar umapathy