SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
தெய்வமணி மாலை பாடல் 18
தெய்வமணி மாலை.

எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறுவாய்
எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகெடுக்கும் தலை
கந்தமிகு நின் மேனி காணாத கயவர் கண் கலநீர் சொரிந்த அழுகண்
கடவுள் நின் புகழ்தனைக் கேளாத வீணர் செவி கைத்திழவு கேட்கும் செவி
பந்தமற நினை எண்ணாப் பாவிகள் தம் நெஞ்சம் பகீரென நடுங்கும் நெஞ்சம்
பரம நின் திருமுன்னர்க் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடுங்கை.
சந்தமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே (1 8)

அழகு மிக்க சென்னைக் கந்த கோட்டத்துள் இலங்கும் கோயிலை இடமாகக் கொண்ட கந்தவேளே,தண்ணிய ஒளியை உடைய தூய மணிகளுள் சைவமணியாகிய சண்முகங்களை உடைய தெய்வமணியே எந்தையாகிய நின்னை வாழ்த்தாதவர்கள் பேயரே யாவர்.குடிக்கக் கூழும் இல்லாமல் பிறர் மனையில் பொய் ஏங்கி அதுவும் கிடைக்காமல் எப்போது கிடைக்குமோ என்று ஏங்கியே நிற்கும் வாயாகும் அவர் வாய்.வீடுதோரிறந்தும் ஒன்றும் கிடைக்காமல் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உள்ளம் துடித்தேன் என்றொரு பாடலில் வள்ளலார் பாடியுள்ளார்.
எங்கள் பெருமானே உன்னை வணங்காத தலை இகழ் விறகு எடுக்கும் தலை .அது என்ன இகழ் விறகெடுக்கும் தலை?. இங்கேதான் வள்ளலாரின் பூரண ஞானம் வெளிப்படுகிறது.சைவ சமயத்தில் பாண பத்திரர் என்பவருக்குப் பொற்கிழி வாங்கித்தரும் பொருட்டு மதுரை வீதியிலே சிவபெருமான் விறகு சுமந்து வந்து விற்றார் என்று ஒரு சம்பவம் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் இறைவனை வணங்காத மூடர் தலை விறகெடுக்கும் தலை என்று மட்டும் கூறியிருந்தால் புராணத்தில் சொல்லப்பட்ட சிவபெருமான் விறகு சுமந்ததைப் பழித்தது போல் ஆகியிருக்கும். இந்தக் குற்றம் ஏற்படாமல் அது புகழுக்காக விறகு சுமந்தது இதுவோ உன்னை வணங்காததால் பிணத்தை எரிக்கும் கேவலமான விறகு சுமந்த தலை என்றார்.
வாசனை பொருந்திய உனது அருமையான திருமேனி காணாத கயவர்கள் கண் என்ன கண் தெரியுமா?கலம் நீர் சொரியும் அழுகின்ற கண் ஆகும். கலம் என்றால் என்ன அளவு?எட்டு ஆழாக்கு ஒரு படி ஆகும். எட்டு படி ஒரு மரக்கால் ஆகும். பன்னிரண்டு மரக்கால் ஒரு கலம் ஆகும். எவ்வளவு அழுதாள் இவ்வளவு கண்ணீர் வரும்.இறைவா உன்னைக் காணாத கண் கலம் நீர் சொரிந்த அழு கண் ஆகும்.
கடவுளின் புகழைக் கேட்காதவர்கள் வீணர்கள். தமது வாழ்நாட்களை வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் காதுகளில் சுபமான மகிழ்ச்சியான செய்திகள் எதுவும் வராது. ஆனால் கேவலமான மரணச் செய்திகளே கேட்கும் காதுகளாக அவர்கள் காதுகள் விளங்கும்.
உன்னை இடைவிடாது யார் எண்ணுகின்றார்களோ அவர்கள் பந்தத்தை அறுத்து விடுவார்கள்.உன்னை எண்ணாதவர்கள் பாவிகளே ஆவர். அவர்கள் நெஞ்சம் பகீரென நடுங்கும் நெஞ்சமே ஆகும்.
வஞ்சகர்கள் உன் திருமுன் நின்று கைகூப்பி உன்னை வணங்கமாட்டார்கள்.அந்த வஞ்சகர்களின் கையானது போருளுக்காகப் பிறரிடம் பிச்சை கேட்டு நீட்டுகின்ற கைகளேயாகும்.
இந்தப்பாடலின் திரண்ட கருத்து என்னவென்றால் நாம் இறைவனை வாயார வாழ்த்த வேண்டும்.அஷ்டாங்க நமச்காரமாகக் கீழ் விழுந்து வணங்கவேண்டும்.கண்களால் நன்கு அவன் உருவைக் காண வேண்டும். ஆனது புகழை யார் சொன்னாலும் காதாரக் கேட்கவேண்டும். நமது நெஞ்சந்த்தில் சதா அவனையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவன் முன்னாள் நின்று இரு கைகளையும் தலைமேல் வைத்துக் கூப்பி வணங்க வேண்டும். (வளரும்)