தெய்வ மணி மாலை(MUPA)
காம உட்பகைவனும் கோப வெங் கொடியனும் கன லோப முழு மூடனும்
கடுமோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும்
ஏமம் அறு மாச்சர்ய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இவ்
எழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும் எனைப் பற்றிடாமல் அருள்வாய்
சேமமிகு மாமறையின் ஓம் எனும் அருட்பதத் திறன் அருளி மலய முனிவன்
சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞான சிவ தேசிக சிகாரத்னமே
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தளம் ஓங்கு கந்தவேளே
தண்முகத்துய்ய மணி உண்முகச் சைவமணி சண்முகத்தெய்வ மணியே (6 )
ஒவ்வொரு மனிதனையும் தீய நெறிக்குட்படுத்தும் ஏழு தீய குணங்களையும்
அவற்றின் தொடர்பாக வரக்கூடிய மற்ற வைகளும் உண்டு என எச்சரிக்கை செய்கிறார்
வள்ளல் பெருமானார். காமம் என்றால் ஆசை என்றுதான் பொருள் . இருந்தாலும் அந்தக்
காமம் என்ற சொல் பொதுவாக ஆண்களுக்குள்ள பெண் இச்சையையே எல்லோரும்
குறிக்கின்றார்கள். நாட்டிலே நடக்கின்ற கற்பழிப்பு போன்ற அட்டூழியங்களை நாம் தினமும்
செய்தித் தாள்களில் படிக்கிறோம்.பள்ளியிலே படிக்கின்ற சிறு சிறு பிள்ளைகளைக் கூடக்
கெடுக்கின்ற காமாந்த காரர்களைக் காண்கிறோம்.அவர்கள் நல்லவர்கள்தான், ஆனால் இந்தக்
காமம் என்கின்ற பேய்தான் அவர்களை இந்த இழி நிலைக்கு ஆளாக்கி விடுகின்றது. இந்தக்
காமம் வெளியிலே இருந்து வருவதல்ல. நமக்குள்ளேதான் இருக்கின்றது. இரவு பகல்
எந்த நேரத்தில் அது நம்மைத் தாக்கும் என்பதே தெரியாது.அதன் பிடியில் அகப்பட்டுவிட்டால்
சமுதாயத்தில் அதுவரை நமக்கு இருந்த மதிப்பு மரியாதை அனைத்தும் அழிந்து போவது மட்டுமல்ல
அதனால் வந்த அவப் பெயர் சாகும் வரை போகவே போகாது. அதனால்தான் அந்தக் காமத்தை
நம்முள்ளேயே இருக்கின்ற உட்பகைவன் என்றார் வள்ளல் பெருமானார்.பகைவன் என்றால் நமக்கு
எதிரி. நம்மை அழிக்கின்ற எதிரி. அந்த எதிரி நமக்கு வெளியே இல்லை. நமக்குள்ளேயே இருக்கின்றான்.
அப்படிப்பட்ட எதிரியாகிய காமத்தை உட்பகைவன் என்று எடுத்துக் காட்டுகிறார்.
அடுத்து நம்மை சாக அடிப்பது கோபம்தான். திரு வள்ளுவர் அன்றே கூறியிருக்கின்றார்
"தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்" என்று.
அந்தக் குறளையும் மறந்துவிட்டோம். கோபம் என் பது சினம் வெகுளி என்று இரண்டு பிரிவுகள்
கொண்டது.சினம் என்பது உள்வேக்காடு .ஒருவரைப் பார்த்தவுடனே நம்முள் ஏற்படும் எரிச்சலே
உள்வேக்காடு. இது நமது உடம்பை அழிக்கும் .வெகுளி என்பது கோபத்தின் உச்சியில் நாம்
கத்துகிறோமே அது நமது ஆயுளை அழிக்கும். எப்படியாயினும் சினம் என்பது நம்மை
அழிக்கும் விஷம் ஆகும். விஷம் சாப்பிட்டவுடன் கொன்றுவிடும். இந்தக் கோபம் சிறிது
சிறிதாகக் கொல்லும் .slow poison என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். இதைத்தான்
வள்ளல் பெருமானார் கோப வெங்கொடியன் என்று கூறியுள்ளார்.கோபம் வரும்போது நாம்
விஷத்தைச் சாப்பிடுகிறோம் என்ற விழிப்பு உணர்ச்சி வரவேண்டும். மரணத்தைத் தவிர்க்க
இது ஒரு சிறந்த வழியாகும்.உயிர் மேல் ஆசை உள்ளவர்கள் கோபத்தை வெல்லுங்கள்.
தர்மம் தலை காக்கும் என்று பெரியோர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் பணம் படைத்த
செல்வந்தர்களும் தருமம் செய்ய முற்படுவதில்லை. பிற்காலத்தில் நமக்கு வேண்டுமே
என்றும்,பணத்தைச் சேர்த்து வைக்கவேண்டும் என்றும் தருமம் செய்வதில்லை. நாம்
இவ்வளவு சிரமப்பட்டுச் சேர்த்து வைக்கின்றோமே இந்தப் பணம் நாம் சாகும்போது உடன்
வருமா என்று சிந்திப்பதே இல்லை. இந்த விளக்கம் இல்லாமல் துன்பப் படுவோரைக் கண்டும்
மனதிலே இரக்கம் இல்லாமல் தர்மம் செய்யாமல் பணத்தைச் சேர்த்து வைப்பவர்களை முழு
மூடன் என்று வள்ளலார் கூறியுள்ளார்.
அவா என்பது ஒன்றைக் கண்ணால் கண்டு விருப்பம் கொள்வது. ஆசை என்பது அதனை அடைய
முனைவது. மோஹம் என்பது கிடைக்கமுடியாத ஒன்றாய் இருந்தாலும் எப்பாடு பட்டாவது, என்ன
செய்தாவது தேவைப்பட்டால் தவறான முறையிலாவது அடைந்தே தீருவது என்பது மோஹம்
ஆகும். இந்தக் கடுமையான மோஹம் என்பது நம்மை வீணாக்கிவிடும்.
மதம், அஹங்காரம் வந்துவிட்டால் ஆணவம் தலை தூக்கிவிடும். யாரையும் மதிக்கவிடாது.
அதனால் அறிவுதான் மங்கிவிடும்.கண் கேட்ட குருடன் போல நம்மை அஹங்காரம் அழித்துவிடும்.
தான் என்ற ஆணவம் நம் எதிரில் உள்ள உண்மையைத் தெரிவிக்காது.
ஒருவன் நன்றாக வாழ்ந்தால் மனம் பொறுக்காது. ஐயோ அவன் இப்படி இருக்கிறானே. நம்மால்
அப்படி எல்லாம் இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கம் என் வந்தது. அவன் நிலையைப் பார்த்து
ஏற்பட்ட பொறாமைதான் காரணம். நன்றாக வாழ்பவனைப் பார்த்து மகிழாமல் பொறாமை அடைவதால்.
நாம் அடையப்போகும் பலன் என்ன ? ஒன்றும் இல்லை .பொறாமை உள்ளவன் விழலன் ஆவான்.
இவை எல்லாவற்றையும் விடக் கொடியது கொலை என்ற பாதகச் செயல்தான். ஓர் உயிரை கொலை
செய்யும்போது அதன் எஞ்சிய வாழ் நாட்களை நாம் அழித்துவிடுகிறோம். இது அறிவுள்ள மனிதன்
செய்யக்கூடிய செயலா? மேலே சொன்ன எல்லாவற்றையும் விடக் கொடியது இந்தக் கொலை என்ற
செயலே ஆகும். எனவே இறைவ, உட்பகைவனாகிய காமமும்,மிகவும் கொடியவனாகிய கோபமும்,
முழு மூடனாகிய கன லோபமும்,வீணனாகிய கடு மோஹமும் ,கொடு மதம் என்ற துட்ட கண் கெட்ட
ஆங்காரியும் ,விழலனாகிய மாச்சர்யம் என்ற பொறாமையும், கொடிய பாதகனாகிய கொலையும்
இந்த ஏழு பேர் மட்டுமல்ல இவர்கட்கு உறவான மற்றவர்களும் எனைப் பற்றிடாமல் அருள்வாய் .
நல்ல வாழ்வை அளிக்கின்ற மா மறையாகிய வேதத்தின் ஓங்காரப் பொருளை அருளி மலய
முனிவராகிய அகத்தியப் பெருமானின் சிந்தனையில் உற்ற வந்தனையை விரும்பிய மெய்ஞான
சிவா தேசிக சிகா ரத்தினமே,
மாலைகளோடு ஒளிர்கின்ற சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத்துய்யமணி உள்முகச் சைவ மணி சண்முகத் தெய்வமணியே (வளரும்)