நமது வள்ளல்பெருமானாரின் சென்னை வாழ்க்கை :
தனது முப்பத்து ஐந்தாம் வயது வரையில் நமது பெருமானார் சென்னையில் இருந்திருக்கின்றார்.அந்தக் காலங்களில் அவர் எழுதியுள்ள பாடல்களை நன்கு படித்துப் பார்த்தால் பக்தியும் ஒழுக்கமும் வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கின்றதைப் பார்க்கலாம். வாலிபப் பருவம் தொடங்கிய ஐந்து வயதிற்கு முன்பே இறைவன் ஒருவனே என்ற விளக்கம் தனக்கு உண்டு என்று அவர் சொல்லியிருக்கின்றார். வண்ணங்கள் வேறு வேறாய் இருந்தாலும் , வடிவங்கள் வேறு வேறாய் இருந்தாலும் மன்னிய உண்மை ஒன்றென்றே எண்ணியது அல்லால் வேறு எண்ணியதுண்டோ என்ற அவரது பாடலும், சைவம் முதலாக நாட்டும் பல சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும் தெய்வம் இது வந்து பாரீர் திருச்சிற்றம்பலத்தே திரு நட ஜோதி, என்ற பாடலும் , திருச் சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்றே கண்டீர் என்று முடியும் பாடலும், வள்ளலாரின் கருத்து என்ன என்று நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. அதாவது சமயங்களில் கூறப்பட்டுள்ள தெய்வங்களின் எல்லாப் பெயர்களும் திருச் சிற்றம்பலத்தே இருக்கும் ஒரே தெய்வத்தைத்தான் குறிக்கின்றது.மன்னிய உண்மை ஒன்றென்றே எண்ணினேன் என்பது எல்லாத் தெய்வங்களும் திருச்சிற்றம்பல ஜோதிதான் என்று கருதித்தான் வள்ளலார் பாடியுள்ளார். அவர் எப்போதும் சமயம் சார்ந்தவர் அல்ல என்ற உண்மையை நாம் புரிந்துகொள்வது நல்லது. அந்தக் காலங்களில் எழுதப்பட்ட அவரது பாடல்களில் பக்தியும் ஒழுக்கமும் மிக மிகச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. இந்த வாழ்கையை பக்தி நெறி என்றும் ஒழுக்க நெறி என்றும் கொள்ளலாமா?
வள்ளலாரின் வடலூர் வாழ்கை:
ஜீவகாருண்யம் ஆரம்பத்திலிருந்தே அவரிடம் குடி கொண்டிருந்தாலும் வடலூரில் அவர் நிறுவிய சத்திய தருமச்சாலை அவரின் கருணை உள்ளத்திற்கு இன்றும் சான்றாக இருக்கின்றது. ஆதரவற்ற ஏழை மக்களின் பசியாற்றுவித்தலே எல்லாவற்றிலும் மேலானது என்று திடமாகச் சொன்னார். ஜீவகாருண்யமே அதாவது பிற வுயிர்களிடம் காட்டும் இரக்கமே கடவுள் வழிபாடு என்று வள்ளலார் கூறியது போல் வேறு யாரும் கூறியுள்ளதாத் தெரியவில்லை..ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்ற அவரது வார்த்தையும், கடவுள் அருளைப் பெறுவதற்கு ஜீவகாருண்யம் தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற அவரது உறுதியான ஆணையும், ஜீவகாருண்யம் இல்லாமல் செய்கின்ற தவம், விரதம், தியானம் பூஜை, முதலிய செய்கைகள் எல்லாம் பிரயோஜனம் இல்லாத வெறும் மாயாஜாலச் செய்கையே என்ற அறிவுரையும், வள்ளலாரின் இரக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.எல்லாவற்றிற்கும் மேலாக இரக்கம் ஒருவில் என் வுயிரும் வொருவும் என்றாரே அது ஒன்று போதாதா வள்ளலாரின் உள்ளத்தை வெளிப்படுத்த. வடலூர் வாழ்கையை கருணை நெறி என்று கொள்ளலாமா?
வள்ளலாரின் மேட்டுக் குப்ப வாழ்கை:
மேட்டுக் குப்பத்தில் தங்கி இருந்த காலத்தில்தான் வள்ளல் பெருமானார் வடலூரில் ஞான சபை நிறுவியுள்ளார்.சத்திய ஞானசபை என்னுள் கண்டனன் என்று வள்ளலார் பாடியுள்ளார். அதாவது இறைவனைத் தவத்தின் மூலமாக நம்முள்ளேயே கண்டு கலக்கவேண்டும் என்ற உண்மையைத் தெரிவிப்பதே அவரது மேட்டுக் குப்ப வாழ்க்கை ஞான சபையை .அவர் இருந்த மேட்டுக் குப்பத்தில் நிறுவாமல் ஏன் வடலூரில் நிறுவவேண்டும்? வடலூர் வெறுமனே சோறு போடும் இடமாக மட்டும் அமைந்துவிடக் கூடாது என்றே வடலூரில் ஞான சபை நிறுவினார் போலும்.எப்படி இருந்தாலும் ஞான சபையானது தவம் செய்யவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆக மொத்தத்தில் வள்ளலார் தனது,பக்தியாலும்,ஒழுக்கத்தாலும், கருணையினாலும், தவத்தினாலும் இறவா நிலை பெற்றார் என்று நாம் அறியலாம்.நாமும் அந்த நான்கு நெறிகளையும் கடைப் பிடித்துப் பார்க்கலாமே
Write a comment