திரு அருட்பா அருள் விளக்க மாலை 27 வது பாடல் இதுதான்.இதை நன்றாகப் படித்துப் பாருங்கள்.
பற்றுதலும் விடுதலும் உள் அடங்குதலும் மீட்டும் படுத லொடு சுடுதலும் புண் படுத்தலும் இல்லாதே
உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும் வெச்சென்றே சுடுதலும் இல்லாது என்றும் துலங்குகின்ற சுடரே
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திருச்சிற்றம்பலத்தே முயங்கு நடத்தரசே என் மொழியும் அணிந்தருளே
இந்தப் பாடல் மூலமாக வள்ளலார் நமக்கு என்ன சொல்ல விழைகிறார்?
பற்றுதலும்: மூச்சை மூக்கு துவாரம் வழியாக உள்ளே இழுத்தலும்( இதற்குப் பூரகம் என்று பெயர்)
விடுதலும்: மூச்சைப் பின்னர் வெளியே விடுதலும்,(இதற்கு ரேசகம் என்று பெயர்)
உள் அடங்குதலும்: மூச்சுக் காற்றை வெளியே விடாமல் உள்ளேயே நிறுத்துதலும் ,(இதற்குக் கும்பகம் என்று பெயர்)
மீட்டும் படுத லொடு : இந்த மூன்றையும் தொடர்ந்து தொடர்ந்து செய்து
சுடுதலும் : உடம்பை வெப்பம் ஆக்கிக் கொள்ளுதலும்
இல்லாதே: இல்லாமல்
உற்று: ஓர் ஆச்சாரியனை அடைந்து
ஒளி கொண்டு:அவனிடமிருந்து அறியவேண்டியதை அறிந்துகொண்டு (அவனுடைய ஒளி கொண்டு நெற்றிக் கண்ணைத் திறந்துகொண்டு)
ஓங்கி:அந்தத் தவத்திலே வளர்ந்து
எங்கும் தன்மயமாய் : எங்கெங்கும் அறிவு மயமாய்
ஞான உருவாகி: ஞானமானது நமக்குள்ளே தோன்ற
உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே: உயிர்க்கு உயிர் அனுபவத்தைக் கொடுத்து வளர்கின்ற தவக் கனலே
சுற்றுதலும்: சச்சு தீக்ஷை என்ற பெயரில் கண்ணிலுள்ள கருமநியைச் சுற்றச் செய்தலும்
தோன்றுதலும்: கண்ணைத் திறந்தே வைத்தாலும்
மறைதலும்: கரு விழியைப் பின் புறம் திருப்பி வெளியே தெரியாமல் மறைக்கச் செய்தலும்
வெச்சென்றே சுடுதலும்: கண்ணை இமைக்காமல் வெறித்துப் பார்த்து கண்களில் நீர் வரும்படிச் செய்தலும்
இல்லாதே: இல்லாமல் (இதை எல்லாம் செய்யாமல்)
என்றும் துலங்குகின்ற சுடரே: என்றென்றும் உள்ளேயே விளங்குகின்ற ஒளியே
முற்றும் உணர்ந்தவர் உளத்தே: எல்லாவற்றையும் அறிந்தவர்கள் உள்ளத்திலே
திருச்சிற்றம்பலத்தே: திருச்சிற்றம்பலம் எனச் சொல்லப்படும் புருவ மத்தியிலே
முயங்கும் நடத்தரசே:வீற்றிருக்கின்ற நடன நாயகனே
என் மொழியும் அணிந்தருளே: என்னுடைய பாடலையும் ஏற்றுக்கொள்வாயாக
இந்தப் பாடல் மூலமாக வள்ளலார் தெரிவிப்பது என்னவென்றால் என் சன்மார்க்க மக்களுக்கு உடம்பைப் புண் படுத்தும் மூச்சுப் பயிற்சியும் , கண்ணினால் செய்யும் சாதனையும் வேண்டாம். ஒரு குரு மூலமாக நெற்றிக்கண்ணைத் திருந்துகொண்டு அங்கே தவம் செய்து ஒளியை உள்ளே காணும் பயிற்சி போதும் என்பதே ,நம்மவர்களே இந்த என்னுடைய சிற்றறிவினால் நான் கொண்ட இந்தக் கருத்து உங்களுக்கும் ஏற்புடைய தாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்
4 Comments
பொருள் கொள்ள இயலாது.