SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
IS RAAMAYANAA A GOOD STORY OR A GOOD LESSON

இராமாயணத்தில் ஒரு காட்சி.
வாலியும் சுக்ரீவனும் அண்ணன் தம்பிகள். வாலி கொடியவன். சுக்ரீவன் நல்லவன். வாலி சுக்ரீவனுடைய நாட்டையும் மட்டுமல்ல அவனது
மனைவியையும் அபகரித்துக் கொண்டான்.சுக்ரீவனால் அவனது அண்ணனை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாமல் திகைத்துக் கொண்டிருந்தான். ஸ்ரீ ராமன் காட்டில்
வந்துகொண்டிருந்தபோது சுக்ரீவன் ஸ்ரீ ராமனைச் சந்தித்தான். ஸ்ரீ ராமா அபயம் என்று நமஸ்கரித்தான். ஸ்ரீ ராமனிடம் தன் வரலாற்றைச் சொல்லி தான் இழந்தது
அனைத்தையும் வாலியிடமிருந்து மீட்டுத் தரும்படி வேண்டினான். ஸ்ரீ ராமனும் அப்படியே ஆகட்டும் என்று வாக்களித்தான். வாலி மிகுந்த பலசாலி. ஒரே பாணத்தில் ஏழு மரங்களை யாரால் துளைக்கமுடியுமோ அவர்களால் மட்டுமே வாலியிடம் சண்டை போடமுடியும். நீங்கள் அப்படிச் செய்து காட்டுவீர்களா என்று சுக்ரீவன் ஸ்ரீ ராமனைக் கேட்டான். ஸ்ரீ ராமனும் ஒரே பாணத்தைவிட்டு ஏழு மரங்களைத் துளைத்துக் காட்டினார்.சுக்ரீவன் மிகவும் மகிழ்ந்தான். நீ இப்பொழுது வாலியிடம் சண்டை போடு. தக்க சமயத்தில் நான் உனக்குத் துணையாக வருவேன் என்று ஸ்ரீ ராமன் சொன்னான். இந்த வார்த்தையை நம்பி சுக்ரீவனும் வாலியைச் சண்டைக்கு அழைத்தான். வாலியும் சண்டைக்கு வந்தான். இருவரும் சண்டை இட்டார்கள். வாலி சுக்ரீவனை நையப் புடைத்து அனுப்பினான்.பலமாக அடிபட்டு வந்த சுர்க்ரீவன் ஸ்ரீராமா உன்னை நம்பி அல்லவா நான் அவனிடம் சண்டைக்குச் சென்றேன். இப்படிக் கைவிட்டு விட்டாயே. இது நியாயமா என்று அழுதான். சுக்ரீவ நீயும் வாலியும் ஒரே மாதிரி இருந்ததால் யார் சுக்ரீவன் யார் வாலி என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை. நான் அவன் என்று உன்னைத் தாக்கிவிட்டால் என்ன செய்வது என்றுதான் பேசாமல் இருந்து விட்டேன். இப்பொழுது நான் ஒரு மாலை தருகிறேன் ,இதைக் கழுத்தில் அணிந்துகொண்டு நீ அவனிடம் சண்டைக்குப் போ. நான் நிச்சயம் உன்னை காப்பாற்றுவேன் என்று ஸ்ரீராமன் சொல்லி சுக்ரீவனை மீண்டும் வாலியிடம் சண்டைக்கு அனுப்பினான். வாலியிடம் சண்டை போடுவதாய் இருந்தால் அவன் எதிரில் நின்று சண்டை போடக்கூடாது.அவன் எதிரில் யார் வருகிறார்களோ அவர்கள் பலத்தில் பாதியை வாலி எடுத்துக் கொள்வான் என்று சுக்ரீவன் சொல்லிவிட்டுச் சண்டைக்குப் போனான்.சுக்ரீவன் சொன்னது போல ஸ்ரீ ராமனும் வாலியின் பின்னால் மறைந்து நின்று வாலியின் மீது அம்பு தொடுத்தான். வாலி ஸ்ரீ ராமனைப் பார்த்து ஸ்ரீ ராமா உனக்கும் எனக்கும் எந்தப் பகையும் இல்லை. நீ என்னைக் கொல்வது தர்மத்திற்குப் புறம்பானது. எதிரில் நின்று சண்டை போடுவதே வீரனுக்கு அழகு. நீயோ கோழைபோல் மறைந்து நின்று என்மீது அம்பு தொடுத்து என்னை சாக அடிக்கிறாய். வானத்து சந்திரனில் களங்கம் இருப்பதுபோல் காலம் உள்ளளவும் நீ செய்த இந்தக் களங்கமான செயல் உன் பெயரோடு சேர்த்து இனி உன்னை எல்லோரும் ராமச்சந்திரன் என்று அழைக் கட்டும் .நீ ராமனல்ல ராமச்சந்திரன் என்று சபித்தான்.
ராமாயணத்தில் இந்தச் சம்பவம் என் எழுதப்பட்டது? இதன்மூலம் நமக்கு என்ன அறிவுரை வழங்குகிறார்கள்?

வாலியும் சுக்ரீவனும் குரங்குகள்.குரங்கு என்பது நமது மனம்தான்.வாலி கெட்ட மனம். சுக்ரீவன் நல்ல மனம். நல்ல மனதைவிட கெட்ட மனமே ஆதிக்கம் செய்யும்.
இதை உணர்த்தவே வாலி சுக்ரீவனுடைய நாடு முதல் அனைத்தையும் பறித்துக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. ஸ்ரீ ராமன் என்பது அறிவு. நல்ல மனம் அறிவின் துணையை நாடியது. ஏழு மரங்களை ஒரே பாணத்தால் யாரால் துளைக்க முடியுமோ அவர்கள்தான் வாலியை வெல்ல முடியும் என்றது என்ன வென்றால் , காமம், குரோதம், லோபம் மோகம் , மதம், மாச்சர்யம்,கொலை என்ற ஏழையும் வைராக்கியம் என்ற ஒரே பாணத்தால் யாரால் வெல்ல முடியுமோ அவர்களால்தான் கெட்ட மனதை வெல்லமுடியும் என்பதே. நமக்குள் நல்ல மனம் எது ,கெட்ட மனம் எது என்று நம்முடைய அறிவிற்குப் புரியாமல் இருப்பதே ஸ்ரீ ராமனுக்கு முதலில் வாலி யார் சுக்ரீவன் யார் என்று புரியாமல் போனது.வாலியின் எதிரில் நின்று சண்டை போடக்கூடாது என்றது ஏன்? கெட்ட மனதை நேர் நின்று அடக்க முடியாது, உதாரணத்திற்கு ஒன்று. சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள ஒருவன் அதை விடவேண்டும் என்றால் சிகரெட்டை தொடக்கூடாது என்று அதையே நினைத்துக் கொண்டிருந்தால் இன்றுமட்டும் ஒன்றே ஒன்று பிடிக்கலாம்.நாளையிலிருந்து கட்டாயம் விட்டுவிடலாம் என்று நினைப்பானாம். அதை விடவேண்டும் என்றால் அந்த நேரத்தில் கோவிலுக்குள் போய்விட்டால் அங்கே சிகரெட் பிடிக்கமுடியாது.அந்தத் தீய பழக்கத்தை மறைமுகமாகத்தான் வெல்லமுடியும். கெட்ட மனதை எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்பதே வாலி சுக்ரீவன் கதை.