சன்மார்கத்தைச் சார்ந்த நாம் கடைப் பிடிக்கவேண்டியது நான்கு , அதனால் நாம் அடையப்போவதும் நான்கு. அவை யாவை.நாம் அடையவேண்டிய பேறுகள் நான்கு. அதாவது 1 ஏம சித்தி, ௨. சாகாக் கல்வி, 3 தத்துவ நிக்கிரகம் செய்தல், 4 கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல். இந்தப் பெரும் பேறுகளைப் பெறுவதற்கு நாம் கொள்ளவேண்டிய ஒழுக்கங்கள் நான்கு அதாவது l.இந்திரிய ஒழுக்கம்,2 கரண ஒழுக்கம், 3 ஜீவ ஒழுக்கம்,4 ஆன்ம ஒழுக்கம்.இந்த ஒழுக்கங்களுக்கும் அந்தப் பேறு நான்கினுக்கும் என்ன தொடர்பு இருக்கக்கூடும் என்று பார்ப்போம்.இந்திரிய ஒழுக்கம் என்பது காதினால் நல்ல வார்த்தைகளையே கேட்கவேண்டும்,வாயினால் இனிய
வார்த்தைகளையே பேசவேண்டும்,மூக்கினால் சுகந்தம் விரும்பாதிருக்க வேண்டும், கண்ணினால் குரூரமாகப் பாராதிருக்கவேண்டும் தேகத்தினால் தயவாகவே மற்றவர்களைத் தொடலாம் என்பன போன்றவைதான் இந்திரிய ஒழுக்கம்.இப்படிப்பட்ட ஒழுக்கங்களோடு ஒருவன் வாழ்ந்தால் அவனை மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள். அவன் தங்கமான குணம் உடையவன் என்றுதானே சொல்லுவார்கள். ஏமம் என்றால் தங்கம். இந்தக் குணங்களோடு வாழ்ந்து தங்கமானவன் என்ற பெயர் எடுப்பதே ஏம சித்தியாகும். தங்கம் செய்யும் வித்தையை வள்ளலார் ஏம சித்தி என்று சொல்லவில்லை. இந்திரிய ஒழுக்கத்தால் ஏம சித்தி வரும். தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சன்மார்க்க சங்கமே கண்டு களிக்கவும், என்ற வள்ளலாரின் பாடல் இதனை உறுதிப்படுத்தும்.
கரண ஒழுக்கத்தில் முதல் ஒழுக்கமே மனதை எந்தவித ஆபாசத்திலும் செல்லவிடாமல் சிற்சபையின் கண்ணே நிறுத்துதல். அதாவது முதலில் புருவ மத்தியில் நிற்கச் செய்தல். இதுதான் சாகாக் கல்வியின் முதல்படி. கரண ஒழுக்கங்களின் மற்ற ஒழுக்கங்களும் சேர்ந்துவிட்டால் நாம் அடைவது சாகாக் கல்வியே.
ஜீவ ஒழுக்கம் என்பது மனிதர்கள் அனைவரையும் ஜாதி,சமயம், மதம், குலம், கோத்திரம், இனம், மொழி, தேசம் முதலிய எந்த பேதமும் இன்றி சகோதரர்களாகப் பாவித்தல். ஜாதி, மதம்,சமயம், முதலிய தத்துவங்களை இல்லாமல் செய்வதால் தத்துவ நிக்கிரகம் செய்தல் ஆயிற்று. எனவே ஜீவ ஒழுக்கமானது மூன்றாவது பேறாகிய தத்துவ நிக்கிரகம் என்ற பேற்றை அடையச் செய்கிறது.முடிவாக ஆன்ம ஒழுக்கம் என்பது யானை முதல் எறும்பு வரை அனைத்து உயிர்களையும் தன்னுயிர் போலப்பார்த்தல் இதுதான் கடவுள் நிலை. அனைத்து வுயிர்களிலும் கடவுள் வியாபித்து இருப்பதை உணர்ந்து எல்லா வுயிர்களையும் தன்னுயிர் போலப் பார்ப்பதே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல். வள்ளலார் அருளியுள்ள நான்கு பேறுகளையும் பெற அவர் காட்டியுள்ள நான்கு ஒழுக்கங்களையும் முழுமையாகக் கடைப் பிடித்து எல்லாப் பேறுகளையும் பெறுவோமாக
Write a comment