SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
MAHAA DHEVA MAALAIYIL ONE SONG

மெய்ஞ்ஞான விருப்பத்திலேறிக் கேள்விமீதேறித் தெளிந்து இச்சை விடுதலேறி
அஞ்ஞானம் அற்றபடி ஏறி உண்மை அறிந்தபடி நிலைஏறி அது நான் என்னும்
கைஞ்ஞானம் கழன்றேறி மற்றவெல்லாம் கடந்தேறி மௌன இயற்கதியிலேறி
எஞ்ஞானம் அறத் தெளிந்தோர் கண்டும் காணேம் என்கின்ற அனுபவமே இன்பத்தேவே. ( மகாதேவ மாலை பாடல் எண் 50 )
இறைவனை அடைய சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வழிகளை நமது முன்னோர் வகுத்தனர். அவற்றுள் முடிந்த முடிபான ஞான வழியே இறைவனை அடையக்கூடிய வழியாகும். உண்மையான ஞான நிலை எதுவென்று அறிந்து அனுபவம் பெற்றோர் மரணம் அடைவது இல்லை.அதனால் மீண்டும் பிறப்பதும் இல்லை. மலைவின் மெய்ஞான மயமாய் வரவு போக்கற்ற நிலை கூthலோங்கி நிற்கவேண்டும்.பிரபஞ்சத்தின் மீது வெறுப்பும் ஞானத்தின் மீது விருப்பமும் அதிகரிக்க வேண்டும்.
மெய்ஞான விருப்பம் மேலோங்கி நின்றால் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களது ஞானக் கருத்துகளைக் கேட்கவும் வாய்ப்பு ஏற்படும்.அடுத்து ஞானிகளின் பேச்சைக் கேட்கின்ற ஆவலை வளர்த்துக் கொள்ளவேண்டும். அவ்வமயம் நமது மனதிலே இதுவரை தோன்றியிராத பலவித சந்தேகங்கள் தோன்றும்.மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப் பார்களோ என்ற அச்சமின்றி வாய் திறந்து சந்தேகங்களை ஞானிகளிடம் கேட்டு விளக்கம் பெறவேண்டும். இவ்வாறு கேள்வி ஞானம் வளர்ந்தால் மட்டுமே நமது சிந்தனையில் தெளிவு ஏற்படும்.
தெளிவு என்பது இது நல்லது இது கேட்டது என்று அறியும் அறிவு மட்டுமல்ல. நாம் யார், ஏன் பிறந்தோம்,எங்கிருந்து வந்தோம்,என்ன ஆகப்போகிறோம் என்பது போன்ற பல வினாக்களுக்கு சரியான விளக்கம் கிடைக்கும். யாருடைய மனதில் இது பொய் இது உண்மை என்ற தெளிவு ஏற்படுகின்றதோ அவர்கள் உலக ஆசையை விட்டு விடுவர். கண்டதெல்லாம் அனித்தியமே,கேட்டதெல்லாம் பழுதே, கற்றதெல்லாம் பொய்யே ,களித்ததெல்லாம் வீணே,உண்டதெல்லாம் மலமே,உட்கொண்டதேல்லாம் குறையே என்ற வள்ளலார் வாக்கின் உண்மை விளங்கும். இவ்வாறு உணர்ந்தோர் இச்சை நீங்கப் பெறுவர்.
அஞ்ஞானமே உலக இச்சைகளுக்கு மூல காரணம் ஆதலால் இந்த உலக ஆசையை நீத்தோர் அஞ்ஞானம் நீங்கப் பெறுவர். உலகியலில் தோய்ந்தோர் அஞ்ஞானிகளே ஆவர்.இச்சையை விடுத்தோர் அஞ்ஞானத்தைக் கடந்தவர் ஆவர். அவர்கள்தான் உண்மையை உணர்ந்தவர்கள். இறைவனையும் தன்னையும் பிரித்து அது நான் என்ற பேதம் கொண்டோர் அஞ்ஞானிகள்.இதைத்தான் கைஞானம் அதாவது சிறுமை காட்டும் ஞானம் என்பர்.என் நிலை இது நீ அடையவேண்டிய நிலை இது. இருநிலைகளும் ஒன்றே என்று தனக்கு இறைவன் அறிவித்ததாக சற்குரு மணிமாலையில் வள்ளர் பெருமானார் தெரிவிக்கின்றார்.
இறைவன் தன்னுள்ளேயே இருப்பதை உணர்ந்து மற்ற அனுபவ நிலைகளை ஒவ்வொன்றாகக் கடக்கவேண்டும்.முடிவாக மனம் செயல்பாடு அற்ற மௌன நிலை அனுபவம் பெறவேண்டும்.இறைவன் வரக்கூடிய வீதியை மௌனத் திருவீதி என்பார் வள்ளலார். ஞான நிலைகளின் எல்லா அனுபவங்களையும் பெற்ற ஞானிகள் இறைவனை தன்னுள்ளேயே காண்பர்.அவ்வாறு கண்டும் முற்றுப் பெற்ற நிலையை இன்னும் காணவில்லை என்றே ஏங்கும் அனுபவமாக விளங்குகின்ற சச்சிதானந்த இன்பப் பெருக்கே இன்பம் அளிக்கின்ற தேவனே.