SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
SANMAARGATHTHIL THIRUNEERU ANIYALAAMAA?

சன்மார்கத்தில் திருநீறு அணியலாமா?
இன்றைய தினம் இது ஒரு பெரிய பிரச்சினைக்குரிய வினா. சுத்த சன்மார்கிகள் என்று தன்னை சொல்லிக்கொள்வோர் திருநீறு அணியக்கூடாது என்று ஆணித் தரமாக கூறுவதோடு சமயம் கடந்த சன்மார்கத்தில் சமய சின்னமான திருநீறு எப்படிப் பொருந்தும் என்றும் கேட்கின்றார்கள், திருநீறு என்பது சைவ சமயச் சின்னம்தான், ஒரு சமயச் சின்னம் இருக்குமேயானால் மற்ற சமய மதத்தவர் எப்படி நமது சன்மார்கத்திற்கு வருவர் என்பதும் அவர்களது வினா.சமய மதம் கடந்த சுத்த சன்மார்கத்தில் ஒரு குறிப்பிட்ட சமயச் சின்னம் இருக்குமேயானால் அது எப்படி பொது மார்கமாக விளங்க,முடியும்? இவர்களது கேள்வியில் ஒரு நியாயம் இருக்கலாம்.ஆனால் இவர்கள் குருவாக ஏற்றுக்கொண்டுள்ள வள்ளலார் அல்லவா மூல புருஷர்? அவர் திருநீறு விஷயமாக என்ன சொன்னார் என்ன செய்தார் என்று நடு நிலையாக நின்று பார்ப்போம்.திரு நீற்றைப்போற்றிப் பலப்பல பாடல்கள் உள்ளன.அவை ஆரம்ப காலத்தில் பாடப்பட்டவை என்றாலும் இந்தப் பாடலைப் பாருங்கள்.
"மலங்கு மாலுடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே,கலங்குறேல் அருள் திரு வெண்ணீர் எனது கருத்திருந்தது கண்டிலை போலும்
விலகுறாப் பெருங்காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா ,நலங்கொள் செஞ்சடை நாதன் தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெரும் துணையே" நோய் தீர்க்கும் மருந்தாகவும் திருநீற்றை பெருமானார் பயன்படுத்தி இருக்கின்றார் என்பதும் நாம் அறியவேண்டிய உண்மை.இதை ஊர்ஜிதம் செய்வது போல தேவநாத பிள்ளையின் மகன் அய்யாசாமி பிள்ளைக்கு ஒரு காலில் கட்டி வந்து அவதியுற்ற போது நம் பெருமானார் அவர்கள் தேவநாத பிள்ளைக்குக் கடிதம் எழுதி திருநீறும் உடன் வைத்து அனுப்பி இருக்கிறார். அவர் எழுதிய கவிதைக் கடிதம் இதோ:"இறை அருள் நிரம்ப இருத்தலான் மகிழ்ந்து பிறை என வளரும் நம் பிள்ளை மணிக்கு ஊருவிற் கட்டி உடனே உடையும் அது குறித்து நீ அஞ்சலை அஞ்சலை இது குறித்து அருள் நீறு இதற்குள் அடக்கம் செய்து வைத்தனன் அத்திரு நீறு எடுத்து எய்து முப்போதும் இடுக மற்று அதன் மேல் கொவ்வைச் சாரும் கோள் வெடி உப்பும் கவ்வக் கலந்து காய்ச்சிப் பூசுக
பாசுரு முருங்கைப்பட்டை சாற்றினில்" கட்டி உடைந்து குணப் படுவதற்காக பெருமானார் திருநீறு அனுப்பி இருக்கிறார்கள். நோய் தீர்ப்பது என்பது ஜீவகாருண்யச் செயல் .இதை அந்த நீறு செய்யும் என்பதால் தான் அதைகையாண்டார்கள். இந்த வகையில் திருநீறு வள்ளலாருக்கு உடன்பாடே. பின்னால் எழுதிய ஆறாம் திருமுறையிலும் திருநீற்றைப் புகழ்ந்தே பாடியிருக்கின்றார்கள்.அனுபவமாலை பத்தாவது பாடலைக் கவனியுங்கள்."நற்பூதி அணிந்த திரு வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே"ஆறாம் திருமுறையிலும் திருநீறு மகிமை பெற்றே விளங்குகிறது.
ஒரு பாடலில் பெருமானார் திரு நீறு கேட்க இறைவன் செஞ்சுடர்பூ அளித்ததாக வருகிறது. இதனைச் சுட்டிக்காட்டி சிலர் இறைவன்செஞ்சுடர்ப்பூதானே அளித்தான்.திருநீறு தரவில்லையே .எனவே சன்மார்கத்தில் திருநீறு உகந்தது அல்ல என்று வாதிடுகின்றார்கள்.அந்தப் பாடல் இதோ நன்கு படியுங்கள்.
"திருவுருக் கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திருநீற்றுப் பையவிழ்த்து செஞ்சுடர்ப் பூ அளிக்கத்
தருவுருக் கொண்டெதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திருநீறும் தருக எனக் கேட்ப
மருவுருக் கொண்டு அன்றளித்தாம் திருநீறு இன்று உனக்கு மகிழ்ந்தளித்தாம் இவை என்று வாய் மலர்ந்து நின்றாய்
குருவுருக் கொண்டம்பலத்தே அருள் நடனம் புரியும் குருமணியே என்னை முன் ஆட்கொண்ட குணக்குன்றே"
இந்தப் பாடலில் ஆண்டவன் திருநீற்றுப் பை அவிழ்த்து செஞ்சுடர்ப்பூ அளித்ததாகவும் தான் மீண்டும் திருநீறு கேட்டதாகவும் அறிவிக்கின்றார். நமக்குத் தேவை ஆண்டவன் வள்ளலாருக்கு என்ன கொடுத்தான் என்பதல்ல. வள்ளலாருக்குத் திருநீறு உடன்பாடா இல்லையா என்பதே.செஞ்சுடர்ப்பூ பெற்றுக்கொண்ட பின்னும் வள்ளலார் திருநீறு கேட்டதிலிருந்து அவருக்குத் திருநீறு உடன்பாடே என்று தெரிகிறது.
கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்பவர் வள்ளலாரைச் சந்தித்து மூன்று நாட்கள் உரையாடினார்.முடிவில் பெருமானாரிடம் திருநீறு கேட்டார். வள்ளலார் தரவில்லை.இதையும் சான்றாகக் காட்டி வள்ளலாருக்குத் திருநீறு உடன்பாடில்லை என்று சொல்கிறார்கள்..சுந்தர ஸ்வாமிகள் தன் மடியிலிருந்து திருநீறு எடுத்து வள்ளலாரின்\ நெற்றியில் இட்டு மீதத்தை வள்ளலார் தந்ததாகக் கொண்டு தானும் இட்டுக்கொண்டு மற்றவர்க்கும் அளித்தார்.இதைச் சற்று சிந்திப்போம்.மூன்று நாட்கள் உரையாடிய சுந்தர ஸ்வாமிகள்.வள்ளலாரிடம் திருநீறு ஏன் கேட்டார்? ஒன்று வள்ளலாரின் நெற்றியில் திருநீறு இருந்திருக்கவேண்டும் அல்லது அந்த மூன்று நாட்களில் வள்ளலார் யாருக்கேனும் திருநீறு தந்திருக்க வேண்டும்.ஒன்றுமில்லாமல் சுந்தரசாமிகள் வள்ளலாரிடம் திருநீறு கேட்டிருப்பாரா ? வள்ளலார் வெள்ளை வேட்டி அணிந்தவர்.சுந்தர சாமிகள் காவி வேட்டி அணிந்தவர். காவி வேட்டி அணிந்தவர்கட்கு வெள்ளை வேட்டிக்காரர் திருநீறு தரக்கூடாது என்பது சம்பிரதாயம்.அதற்கு மதிப்பு கொடுத்து தான் நம் பெருமானார் சுந்தர சாமிகட்கு திருநீறு தரவில்லை.என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நம் பெருமானாருக்குத் திருநீறு உடன்பாடில்லை எனில் சுந்தர சாமிகள் தனது நெற்றியில் திருநீறு இடத் துணிந்தபோதே வள்ளலார் தடுத்திருப்பார்.அவ்வாறு தடுக்காததினால் வள்ளலாருக்கு திருநீறு மறுப்பில்லை என்பதையும் நாம் உணரவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஞானசபை வள்ளலார் முழு அனுபவம் பெற்ற பின்னர்தான் கட்டப்பட்டது .இதை யாரும் மறுக்கமுடியாது. அந்த ஞானசபையில் முதன் முதலாக பூஜை செய்த ரத்ன ஓதுவார் என்பவர் திரைக்கு தீபாராதனை செய்தபின்னர் வெளியே வந்து அங்கிருந்த மக்களுக்கு திருநீறு தருவேன் என்று வாக்கு மூலம் அளித்துள்ளார்.பூஜைக்கு வரும் மக்களை ஒன்றும் இல்லாமல் வெறுங்கையாக அனுப்பாமல் திருநீறு கொடுக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வள்ளலாரைப் பொருத்தவரை ஆரம்ப காலம் முதல் கடைசிவரை திருநீறு ப்ரசாதமாகவோ நோய் தீர்க்கும் மருந்தாகவோ பயன்படுத்தி இருக்கின்றார். வள்ளலார் பேசாத சுத்த சன்மார்கமா நாம் பேசிவிடப் போகிறோம்.? அவர்க்குத் தெரியாத நியாயமா நமக்குத் தெரிந்துவிடப் போகிறது?

KUMARESAN KRISHNAMURTHY
உண்மை தான் ஐயா!
வள்ளல் பெருமானார் எல்லா வற்றையும் கடந்தவர், அவர்களுக்கு எந்த ஒரு பட்டயமும் தேவையில்லை.
வெட்ட வெளிதனை மெய்யென்றிருப்போருக்கு பட்டயமேதுக்கடி குதம்பாய் என்று குதம்பை சித்தர் சொல்வது போல வள்ளல் பெருமானாருக்கு எந்த ஒரு சின்னமும் பட்டயமும் தேவையில்லை.
அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மனித வடிவம்.
அவர் அடைந்த நிலையினையும், அவருடைய ஜீவகாருண்ய கருத்துகளையும், அவருடைய செயல்களையும் ஒரு சிலர் குறுகிய பார்வையால் ஆய்வுச் செய்து தவறாக வெளியிடுகிறார்கள். அவருடைய செயல்களையெல்லாம் மனிதநிலையில் இருந்து காண்பது அறியாமையே.
அருளறிவு என்ற உத்தமநிலையில் இருந்து வள்ளல் பெருமானைக் காண வேண்டும். அப்பொழுது மட்டுமே சுத்த சன்மார்க்கத்தின் உண்மை நிலையை உணர முடியும்.
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Thursday, June 2, 2011 at 10:15 am by KUMARESAN KRISHNAMURTHY