வள்ளலாரே என்னை வணங்கவேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.அதை மீறி நாம் அவரை வணங்குவது சரியா?
ஆம் இது ஒரு நல்ல கேள்விதான். .முதலில் வள்ளலார் ஏன் இவ்வாறு சொன்னார் என்று சிந்திக்கவேண்டும்.அடுத்ததாக வள்ளலார் எந்த நிலை அடைந்தவர் என்று ஆய்வு செய்ய வேண்டும்.பிறகுதான் அவரை வணங்கலாமா வேண்டாமா என்று முடிவு கட்ட வேண்டும்.
வள்ளலார் தன் அடக்கம் கொண்டவர்.தற்போத இழப்பு என்ற தலைப்பில் உள்ள அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் என்று தொடங்கும் பாடலில் உன்னை சிறிது தெரிந்து கொண்டேன் முழுவதும் தெரிந்து கொள்ளும் வரை எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் .அவ்வண்ணம் இருந்த என்னை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் செயலோ அல்லது மாயையின் செயலோ என்று வருந்துகிறார்.
வள்ளலார் பாடல்கள் எழுதினார் அவற்றை அச்சடிக்க அனுமதி பத்து ஆண்டுகள் வரை தரவே இல்லை. ஏன்? பெருமை விரும்பினாரில்லை. ஆசிரியர் பெயரை ராமலிங்க ஸ்வாமிகள் என்று போடலாமா என்று கேட்டார்கள். அது ஆரவாரத்திற்கு அடுத்த பெயர். அவ்வாறு போடவேண்டாம் என்று கூறிவிட்டார். தன்னை மதியாதிருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுகூறியவர் அவர் தற் பெருமை விரும்புவாரா. எல்லாவற்றையும் விட இறைவனை அடையும் முயற்சி செய்யாமல் தன்னை மட்டும் வணங்குவதையும் அவர் விரும்பவில்லை..நமக்கு அவரே தெய்வம் .நாம் அவரை விடலாமா?
இறைவன் வந்து என்னோடு கலந்துவிட்டான் நான் வேறு அவன் வேறு அல்ல இருவரும் ஒன்றா னேம் என்று எத்தனையோ பாடல்களில் வள்ளலார் கூறியுள்ளார் .நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை என்றால் வள்ளலார்தானே இறைவன்?
உலகத்தில் உள்ளோர் மிகவும் துதிக்கத் தக்கவனாக இறைவன் எனை வைத்தான் என்ற அருட்பாவை நாம் என்ன செய்வது?
இகத்தும் பரத்தும் பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே
முகத்தும் உளத்தும் களி துளும்ப மூவா இன்ப நிலை அமர்த்தி
ஜகத்துள்ளவர்கள் மிகத் துதிப்ப தக்கோன் என வைத்து என்
அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உந்தன் அடைக்கலமே.
ஜகத்தில் உள்ளவர்கள் மிகத் துதிப்பத் தக்கோன் என வள்ளலாரை இறைவனே வைத்துள்ளான் எனில் இறைவன் சொல்லை நாம் மீறலாமா?வள்ளலார் நம்மால் துதிக்கத் தக்கவர் என்பது இறைவன் வாக்கு.இதுபோல் அனேக பாடல்கள் உள்ளன. வள்ளலாரை வணங்குவது சிறந்தது. அருட்பெருஞ்சோதியை அகத்தில் காண அக வழிபாடு செய்யவேண்டும் .ஏன் எனில் அது ஓர் அனுபவமே
Write a comment