கவிஞர். கங்கைமணிமாறன்
விடைதேட முடியாத விசித்திரம்!

வள்ளலார்-

அண்டத்தைக் கிழித்து 
அதிசயமாய்ப் புறப்பட்டு வந்த
அவதாரப் புருஷர் அல்லர்-

ஓர் அன்னைக்கும் தந்தைக்கும்
அற்புதமாய்ப் பிறந்து வந்த
அமானுஷ்ய மனிதர்!

அவர் -
வரலாற்றின் ஊடாடும்
வழக்கமான துறவியும்
அல்லர்!
வார்த்தைகளில்
வடிவமைக்க முடியாத
வைகறையாய் வருவிக்கவுற்ற
ஞானப் பிறவி!

அவர் வெறும்
ஆன்மிகவாதி அல்லர்-
வைதிக சமயத்தின்
அடிப்படையையே அசைத்து
அறம் பேசிய அழுத்தமான சீர்திருத்தவாதி!

அவர்
பிறவாத வரம் கேட்டு வந்தவர் இல்லை!
இறவாத வரம் பெற்று வந்தவர்!

அவர் கதைக்க வந்தவர் இல்லை-
சாத்தானைப் போன்ற
சமூகக் கேடுகளைப்
பூகம்பமாய்ப் பொங்கி எழுந்து
புன்செய் நிலத்தின்
எருவாக்கிப் போட்டுப்-
புதைக்க வந்தவர்!

'என்வழி தனிவழி!
அது இயற்கைப் பொதுவழி!
மற்ற வழிகளை எல்லாம்
மறுக்கவந்த ஒரே வழி!'
என்று

அறிவுக் கலகம் செய்து
புத்துலகம் சமைக்க வந்த
புரட்சியாளர்!

அவர் -
எடுக்கப்பட்ட படத்தில் மட்டுமா பிடிபடவில்லை..!
ஆழங்கால்பட்ட
அறிஞர்களின் பார்வையிலும் பிடிபடவில்லை-
இன்றுவரைக்கும்!

அவர் பற்ற வைத்தது
அணையாத அடுப்பை மட்டுமா-
ஆதிக்கவாதிகளின்
கடுப்பையும்தான்!

வள்ளலார்-
மேலிருந்து இறங்கவில்லை---
கீழிருந்து இரங்கினார்!

அவர்-

மேட்டையும் குப்பத்தையும்
நிரவவந்து
மேட்டுக்குப்பத்தில் நிறைந்த மேலவர்!

அவர் -
ஜாதிக்காரர் இல்லை!
அருட்பெருஞ் ஜோதிக்காரர்!
அவர்
வாழ வரவில்லை !
வாழ்விக்க வந்தார்!

நாம் பிறந்த இடம்-

கருவறையாகும் !
மறையும் இடம்-கல்லறையாகும் !
வள்ளலார்-
பிறந்த இடம் மட்டும் அன்று-
மறைந்த இடமும் கருவறையானது!

அவரின் அருட்பா-

அறிஞர்களாய் இருந்தும்
அவசரப்பட்டு அறிவித்து
அறியாமையால் வீழ்ந்தார்களே..

அவர்களின் கூற்றுப்போல்-
மருட்பா அன்று!

தேவாரமும் திருவாசகமும்
திருமந்திரமும்
கூடிக்கலந்த பொருட்பா!

முதல் ஐந்து திருமுறை எதார்த்தமானது!
ஆறாம் திருமுறை-
பண்பாட்டுப் புரட்சியைப் பந்திவைக்கும்
பதார்த்தமானது!

அவரின் மனுமுறைகண்ட வாசகம்
வெறும் -உரைகள் அன்று!
சமுதாயச் சிந்தனைகளின்-உரைகல்!

மொத்தத்தில் வள்ளலார்
ஒரு-
வித்தியாச வெளிச்சம்!
வெள்ளாடை கட்டிய அனிச்சம்!
ஜீவகாருண்யச் சித்திரம்!
இன்றுவரை-
விடைதேட முடியாத
விசித்திரம்!