விண்ணும் மண்ணும் ஒளிநெறி பெற்றிட வந்துதித்த
மருதூர் மணியே!
வான் மழைபோல் அருள்மழை பொழிய வருவிக்கவுற்ற
அருட்சித்தரே!
பசித்தோரின் முகம்பார்த்து அவர்தம் பசிப் பிணிபோக்க
ஜீவகாருண்யம் தந்த வள்ளலே!
எண்ணிலடங்கா இன் உயிர்காக்க ஓர் உயிராய் வந்துதித்த
உத்தமரே!
வாழும் நெறியை ஜீவகாருண்ய ஒழுக்கமென தந்திட்ட
அருட்தந்தையே!
உலகுயிர் உய்யவே உண்மை நெறியாம் “கொல்லாநெறி”
தந்திட்ட தலைவனே!
சாதி, சமய சழக்கிற்கு சவுக்கடிகொடுத்து ஓட ஓட
விரட்டிய சமுதாய வித்தகரே!
கண்ணின் ஒளிபோல், திருவருட்பா அறிவுஒளி ஏற்றிய
அன்பின் ஊற்றே!
காணும் இடமெல்லாம் உயிர் இரக்கம் உய்யவே,
வாடிய பயிரைக்கண்டு வாடிய மனிதகுல மாமணியே!
ஆன்ம நிலையின் உண்மையை உணர்த்த
வடலூர் பெருவெளியில் “ஞானசபை கண்ட” அருட்சித்தரே!
அகத்தே கறுத்த மனித குலம் திருந்திடவே
அருள்நிறை சன்மார்க்க சங்கம் கண்ட காருண்யரே!
வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில்
வந்துதித்த அருள் வள்ளலே!
வாழி நின்புகழ்! வாழி நின் பெருஞ்சீர்! வாழி நின் சன்மார்க்க நெறி!
அக்டோபர் 5ஆம் தேதி ஆன்மநேய தினமாகக் கொள்ள அலையென திரள்வீர் வடலூரில்! வான்புகழ் சேர்ப்பீர் அன்பர்களே!