சென்ற இதழில் ( {ContentRefr:1584} ) மகாமந்திரத்தின் சிறப்பையும் அதை எப்படி உச்சரித்து அருள்நிலைக்கு சன்மார்க்கம் சார்ந்த அன்பர்கள் பெற இயலும் என்பதையும் ஓரளவு தெரிந்து கொண்டோம். மகாமந்திரத்தை குறைந்த பட்சம் 24 நிமிடமும், அதிகபட்சமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், நமது புருவமத்தியில் மனதை வைத்து உச்சரிக்கும் போது, நமது முயற்சிக்கு ஏற்ப அருள் அனுபவம் கிடைப்பது உறுதி.
மகாமந்திரத்தில் கூறப்பட்ட மூன்று “அருட்பெருஞ்ஜோதி” அனுபவ நிலைகளை மனிதன் பெற, மூன்றாம் நிலையான “ தனிப்பெருங்கருணை ” நிலையை உணர்ந்து, இறைவனின் கருணை பரந்து விரிந்து, பஞ்சபூதங்களாக, உலக உயிர்களாக பரிணமித்து, மனித தேகத்தில் காரியப்படும் நிலைவரை உயர்ந்து உள்ளது என்ற உண்மையை உணர்ந்து அனுபவ நிலைகளை ஒவ்வொருவரும் பெற முயற்சிக்க வேண்டும்.
அன்பை இறைவனிடமும், தயவை பிற உயிர்களிடத்தும் செலுத்தவேண்டும் எனவும் வள்ளற்பெருமான் கூறியுள்ளார். அன்பு என்பது மென்மையான உணர்வு, தயவு என்பது பிற உயிர்களுக்கு மனிதன் செய்யும் தெண்டாகவும் பரிணமித்துள்ளது. நாம் எந்த அளவிற்கு சன்மார்க்க எளிய வாழ்வியலை வாழ்ந்து கொண்டு, உயிர் நலப் பணியை செய்து கொண்டு, இந்த மகாமந்திர அனுபவ நிலைக்கு முயற்சித்தால் மிக எளிதாக அருள் அனுபவ நிலையை அடையலாம்.
அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலை வாழ்
அருட்சிவ பதியாம் அருட்பெருஞ்ஜோதி.
இறைவனின் அருளைப்பெற “சிவ நெறி” யான ஒளி வழிபாட்டின் மூலம் அருள் நிறைந்த உயர்ந்த பேரின்ப வாழ்வை பெற, அவ்வழியை உண்மை நிலையில் உணர்த்தும் சத்குருவாக விளங்குபவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும். அப்பேர்ப்பட்ட அந்த இறைவனின் பாதங்களில் பணிவோம்.
ஆகமுடிமேல் ஆரணமுடிமேல்
ஆகனின்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி.
ஆரணம் - வேதம் - வேதத்தின் பயன், இறைவனின் அருள்சக்தியை உணர ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடு. அப்படி உணரப்பட்ட இறைவனின் அருளைப் பெற பூஜை முறைகளை வகைப்படுத்திக் கூறுவது “ஆகமம்”. இப்படி ஆகமமாகவும், ஆரணமாகவும் இவைகள் தோன்றுவதற்கு ஆதாரமாய் இருப்பதும் “அருட்பெருஞ்ஜோதி” எனும் இறை ஆற்றலாகும். இது சமயங்கள் சொல்லும் கருத்து. சன்மார்க்க அனுபவநிலைக்கு பரோபகாரம், சத்விசாரம் போதுமானது.
இகநிலைப் பொருளாய் பர நிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி.
இகநிலைப் பொருள் என்பது - நாம் இவ் உலகில் வெளிப்படையாக காணும் பொருள் மற்றும் நமது வாழ்வியல், செயல்பாடுகள், விஞ்ஞானமும் இதில் அடங்கும்.
பரநிலைப் பொருள் என்பது - பிறவிப் பயன், (ஊழ்வினை), நல்வினை, தீவினை இதை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் நன்மை தீமைகள் அதனால் ஏற்படும் மறுபிறவி இப்படி ஏற்படும் அனுபவ நிலைகளை தன்னகத்தே கொண்ட பதிவு நிலை தான் ஆன்மா எனும் அருட்பெருஞ்ஜோதி ஆற்றலாகும்.
ஈனமின்றிகபரத் திரண்டின் மேற் பொருளாய்
ஆனலின்றோங்கிய அருட்பெருஞ்ஜோதி.
இவ் உலக வாழ்க்கை நிலையில் பரோபகாரமும், சத்விசாரமும் மிக முக்கியமான அனுபவநிலைகள்.
பரோபகாரம் - பிற உயிர்களைக் கொல்லாது துன்புறுத்தாது வாழ்ந்து, நம்மை ஒத்த மனிதகுலத்து ஏழை எளியவர்க்கு அவரவர் சக்திக்கு உட்பட்ட அளவு உணவு அளித்து வாழ்வதாகும். இதில் மிக நிறைந்த “திருப்தி” இன்பம் கிட்டுவது உறுதி. இதை பெருமான் “ஜீவகாருண்யம்” என சிறப்பித்துக் கூறுகிறார்.
சத் விசாரம் என்பது, இறைவனின் புகழையும், உயர்வையும் சிந்தித்து நம்முடைய குற்றங்களை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிடுவது. இதில் வழிபாடு, தியானம், தெய்வ பாவனை யாவும் அடங்கும். இந்த இருநிலை அனுபவநிலைகளிலும் மனிதனுக்கு ஆணவமேலீட்டால் தோன்றும் ஆணவச் சூட்டை அகற்றி மேல் நிலை அனுபவமாகவும் இருப்பது அருட்பெருஞ்ஜோதி அருள் ஆற்றலாகும். தீபத்தின் சுடர் எப்படி மேல் நோக்கி எரிகிறதோ, அதே போல் தன்னடக்கம் உள்ள அன்பரின் செயல்பாடுகள் மேலோங்கி ஒளிபோல் பிரகாசிக்கும். இதை உள்ளுணர்வாய் உணர்த்துவதும் அருட்பெருஞ்ஜோதி ஆற்றலாகும்.
உரைமனங் கடந்த ஒருபெருவெளியாம்
அரசுசெய் தோங்கும் அருட்பெருஞ்ஜோதி
உரைமனம் - சதா இயங்கும் மனம் - அதாவது மனமானது எப்பொழுதும் அலைபாயும் குணம் கொண்டது. சதா உலகியலில் ஈடுபட்டு உழன்றுகொண்டிருக்கும். அப்பேர்ப்பட்ட மனமானது தனது இயக்கத்திலிருந்து விடுபட்டு, பக்குவப்படும் நிலைக்கும் மேலாக ஒரு பெருவெளியாக விரிந்து பரந்து நின்று மனதை அருள்நிலையில் செலுத்தும் அற்புத ஆற்றலும் அருட்பெருஞ்ஜோதியான அருளாகும். இந்த நிலையை “திருந்தும் என் உள்ளம் திருக்கோயில்” எனக் கூறுவார் பெருமான்.
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி.
ஊக்கம் என்பது, துவக்கநிலையில் அருள்நிலையை உணர்ந்து கொள்வது, அதனால் ஏற்படும் மன எழுச்சியே உணர்ச்சியாகும். இந்த நிலையில் மனிதனின் அறியாமை நீங்கி அறிவு நிலையை அடையும். இதுவே ஒளிதரும் என பெருமான் குறிப்பிட்டுள்ளார். அப்படி அடையும் ஒளியானது, உயிர்நலப்பணி செய்தும், சத் விசாரமாகிய நிலையில் பெறும் ஆன்ம லாபமாகிய ஒளிநிலை அனுபவத்தை பெற்றுத்தருவதாக விளங்குவதும் அருட்பெருஞ்ஜோதி அருள் ஆற்றலாகும்.
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தி என்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி.
முடிவில்லாத சுழற்சி முறை என்பதுதான் உலக உயிர்களின் இயல்பாக இருந்து வருகிறது. இதுவே எல்லையில் பிறப்பெனும் என்ற சொல்லால் கூறப்பட்டுள்ளது.
இருங்கடல் என்பது, இருளாகிய பிறவி, அதாவது இந்த மனித தேகத்தில் இறை அருளைப் பூரணமாக பெற இயலும் என்பதை அறியாதவரை, இந்த பிறவியே ஒரு மாயை நிறைந்த அறியாமை வாழ்க்கையாக இருக்கிறது. மாயையில் சிக்கிய ஆன்மா, உலக வாழ்வியலில் ஏற்படும் இன்ப, துன்பங்களால் சிறிது, சிறிதாக பக்குவப்பட்டு இறைத் தேடுதலுக்கு முயல்கிறது. அப்படி முயற்சி செய்து ஆன்மா இறை நிலையை உணர்ந்து இந்த பிறவியை வெல்லவேண்டும். அப்படி பல பிறவி எடுத்து பக்குவ நிலை பெற்றவர் பிறவியாகிய கடலை நீந்த முடியும் என்பதை இப்பாடல் விளக்குகிறது.
இது வள்ளற் பெருமான் பெற்ற பூரண அனுபவ நிலையான “மரணமில்லாப் பெருவாழ்வை” மட்டும் நமக்கு எடுத்துக் கூறாமல், முயற்சி செய்தால் நாமும் அந்த மேலான “சித்தி” நிலை அனுபவத்தை பெற இயலும் என்பதே உட்பொருள். இந்த அற்புத அருள் நிலை அனுபவத்தை வாரி வழங்குவதும் அருட்பெருஞ்ஜோதியாகிய அற்புத ஆற்றலாகும்.
ஏறா நிலைமிசை ஏற்றி யென்றனக்கே
ஆறாறு காட்டிய அருட்பெருஞ்ஜோதி.
ஏறா நிலைமிசை என்பது தயவு நெறியின் உயர்ந்த நிலை அனுபவமாகும். இந்த தயவு நெறியின் உயர்நிலை அனுபவத்தில் 6 + 6 = 36 ஞானேந்திரிய தத்துவங்களும் பூரணமாக உணரப்படுவது - ஆறாறு காட்டிய என்ற சொற்களால் விளக்கப்பட்டுள்ளது.
தத்துவங்கள் மொத்தம் 96. உடல் தத்துவம் 60, ஞானேந்திரிய தத்துவம் 36.
சன்மார்க்க அனுபவ நிலைகளில் ஏமசித்தி, சாகாக் கல்வி, தத்துவநிக்ரகம் என பெருமான் குறிப்பிடுவதை இங்கு நினைவு கொள்தல் அவசியம். ஏனெனில் 96 தத்துவங்களை நிக்ரகம் செய்தவர்தான் கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் என்ற உயர்நிலையை அடையமுடியும். இதற்கு தயவுதான் முடிவான சாதனம். இதை பெருமான் சிறப்பித்துக் கூறும் போது “தயவு தான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றியது என்பார். அப்படி தத்துவங்களை நிக்ரகம் செய்யும் வழியை அருளுவதும் அருட்பெருஞ்ஜோதி ஆற்றலாகும்.
ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி.
ஐயம் - என்பது உடலில் ஏற்படும் ஒருவித குறைபாடு அல்லது நோய். அடிக்கடி தொண்டைப் பகுதியில் கோழை உருவாகும். இந்த நோயையும், திரிபு என்றால் முத்தோவுமாகிய பித்தம், வாயு, சீதள நோய்களிலிருந்து காத்து, உலகியல் வாழ்வை விடுத்து அருள் நிலை வாழ்வில் முயற்சிக்கும் போது, பலவித ஜயங்கள், பயம் தோன்றுவதும் இயற்கையே. இப்படி உடலில் ஏற்படும் நோய்களிலிருந்தும், மனதில் ஏற்படும் பயம் என்ற இருள் நிலையையும் நீக்கி அருள் புரிவதும் அருட்பெருஞ்ஜோதி ஆற்றலாகும்.
ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி
இறைநிலையை உணர முயலும்போது ஆண், பெண் சக்தியாக பிரித்துக் கூறுவர் உலக மக்கள். இவை இரண்டும் இணைந்தது தான் இறை என்பர் மற்றொரு சாரார். ஆனால் இப்படி பலவகையான அருள் நிலை அனுபவங்களாக பரிணமித்து நிற்பது அருட்பெருஞ்ஜோதி அருள் ஆற்றலாகும்.
பெருமானும் திருவருட்பாவில் “அம்மையுமாய் அப்பனுமாய்” இருந்து அருள் புரிபவன் இறைவன் என்பார். அதாவது அம்மை என்றால் நாத நிலை அனுபவம். இதன் இயல்பு ஒலி (ஓசை) முதலியவை, அப்பனுமாய் என்பது ஒளி நிலை (வெளி அனுபவம்). ஆக நாத, விந்து கலைகள் அக்கினி கலையுடன் சேரும் பொழுது அருள் அனுபவநிலை ஏற்படும்.
ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி
கற்றேன் சிற்றம்பலக்கல்வியை கற்று கருணை நெறியுற்றேன் என ஒரு பாடலில் பெருமான் கூறுவார். மனிதன் சன்மார்க்கம் சார்ந்து இந்திரிய, கரண ஒழுக்கங்களை முறையாக கடைபிடித்து வாழ்ந்து வந்தால், பிறரால் உணர்த்தப் படாமல், உள்ளுணர்வாக ஏற்படும் அனுபவமே ஒளிநிலை அனுபவம் ஆகும். அப்படி பிற குருமார்கள் எவரிடமும் கற்றறியாது தானே நல் ஒழுக்க முறையில் முயன்று மேலான “சித்திநிலை” அனுபவத்தை பெற்றவர் நம் பெருமான். அதே போல் நல் ஒழுக்க நெறிகளில் வாழ்பவருக்கு அருள் ஆற்றலை வாரி வழங்கும் ஆதாரமாய் இருப்பது அருட்பெருஞ்ஜோதி ஆற்றலாகும்.
ஒளவியம் ஆதியோர் ஆறும் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி
மனிதன் இறைவனைப் பற்றி சிந்திக்காமல், உலக இச்சைகளில் புலன் வழி சென்று வாழ்வதால், பொறாமை, காமம், குரோதம், கோபம், மதம், உலோபம் என்ற தீய குணங்களால் சூழப்பட்டு துன்புறுகிறான். அருட்பெருஞ்ஜோதி ஒன்றே இறை என உணர்ந்து உயிர் நலப்பணியில் ஈடுபடும் பொழுது தனது ஆன்மாவை தூய்மைப் படுத்த வேண்டி இந்திரிய, கரண ஒழுக்கங்களை கடைபிடித்து முடிவில் மேற்கண்ட ஆறுவித தீயகுணங்களுக்கும் முதன்மையாக விளங்கும் பொறாமையை (ஒளவியம்) நீக்கும்படி அருள் செய்வதும் அருட்பெருஞ்ஜோதி அருள்
ஆற்றலாகும்.
- தொடரும்
excellent. the explanation for each stanza is very clear. very good service vallal peruman and to those who aim for knowing the Reality or Sivam.
Tuesday, October 7, 2008 at 06:58 am
by sahasranamam
Write a comment