HyperLink HyperLink

8/27/2008 8:41:16 PM by

வள்ளலார் அழைக்கிறார்!

 

அன்புமிகுந்த சகோதர, சகோதரிகளே, வந்தனம். உலக உயிர்களில் உயர்ந்த பிறப்பாகிய இம்மனித தேகத்தை பெற்ற நாம் நமது முன்னோர்கள் வழிகாட்டிய பக்தி முறையில் வாழ்ந்து வாழ்க்கையில் ஓரளவு துன்பங்களை நீக்கி வாழ்வது என்பது இயல்பு நிலை.
 
இந்த பக்தி முறையில் அளவிற்கதிகமான மூடநம்பிக்கைகளும், தேவையற்ற பூஜை புனஸ்காரமும் காலப்போக்கில் இடம் பெற்று விட்டதால் உண்மையான பக்தியையும், இறை நிலையையும், மக்கள் புரிந்து கொள்ள முடியாமலே போயிற்று. எனவே, மக்கள் பல பூஜை முறைகளை மேற்கொண்டும் துன்பங்களிலிருந்து விடுபட இயலவில்லை. இது இன்றைய நிலை.
 
இந்த காலகட்டத்தில் தான் இராமலிங்க சுவாமிகள் என போற்றப்படும், திருவருட் பிரகாச வள்ளலார் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மருதூர் எனும் ஊரில் 23. 10. 1823 ஆம் ஆண்டு பிறந்தார். (வருவிக்கவுற்றார்)
 
ஆறு மாத குழந்தையாய் இருக்கும் போது சென்னையை அடுத்த சின்னக் காவணத்திலும், அதை அடுத்து சென்னையிலும் பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகளுடன் வாழ்ந்தார்.
 
இளம் வயதிலேயே பக்திப்பாடல்கள் மூலம் உலக மக்களுக்கு ஒழுக்கநெறி பற்றியும், சன்மார்க்க வாழ்வியலையும் தெரிய வைத்தார். பின்னர் தனது 35 ஆம் வயதில் சென்னையை விடுத்து வடலூருக்கு சென்று, தனக்கு இறைவன் அளித்த சுத்த சன்மார்க்க கொள்கையை உலகறியச் செய்யும் வண்ணம், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நற்கருங்குழியில் 1865 ஆம் ஆண்டும், சத்திய தருமச் சாலையை வடலூரில் 1867லும், சத்திய ஞானசபையை வடலூரில் 1872லும் ஸ்தாபிதம் செய்தார்.
 
உலக ஞானிகளில் மிகவும் மாறுபட்டு, மனிதன் அடைய வேண்டிய உண்மை இறைநிலையை அடைய வழிகாட்டியவர் - இதன் முதல் நிலை: இறைவன் ஒருவன். அதுவும் உருவமில்லாத ஜோதி வழிபாட்டைக் கூறி, அந்த ஒளிநிலை இறைவனின் அருள்பெற ஆன்ம நேயம் என்ற உயர்ந்த கொள்கையை உலகிற்கு உணர்த்தியவர். அதாவது உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் இறைவனின் படைப்பே. இதை உணர்ந்து எந்த உயிருக்கும் தீமை செய்யாது வாழ்தல். மேலும் விளங்குகளைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணாது இருத்தல் போன்ற உயர்ந்த வாழ்வியல் தத்துவத்தை ஆன்மநேயம் என்ற அடிப்படை கொள்கை மூலம் விளக்குகிறார். மேலும் ஜீவகாருண்யம் என்ற நிலைப்பாட்டில் நம் போன்ற மனித தரத்தில் உள்ள ஏழை, எளியவர்க்கு அவர்களின் பசி தீர உணவு அளிப்பது, அப்பேர்ப்பட்ட உயர்ந்த நிலை, தருமச் செயலை செய்பவருக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களும், உலகியலில் அஜாக்கிரதையினால் வரும் இடர்பாடுகளும் நீங்கி நலமுடன் வாழலாம்.
 
ஜீவகாருண்ய ஒழுக்கம்:
 
ஒழுக்கம் விருப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
 
- என்ற திருவள்ளுவரின் குறள்படி வாழ்வில் நல்லொழுக்கத்தை கடைப்பி்டித்து வாழ்ந்தால் மென்மேலும் வாழ்வில் நலமடையலாம். இதன் விரிவை இந்நூலில் துன்பம் நீங்கி வாழ வேண்டுமா என்ற கட்டுரையில் கூறியுள்ளோம்.
 
பக்தி நிலையில் - தியானம் - தெய்வம் பற்றிய பாடல்கள் மூலம் தோத்திரம் செய்தல் போன்றவையும் வள்ளற்பெருமான் கூறியுள்ளார்.
 
அனுபவ நிலை என்று வரும் பொழுது அரிய ஞான மூலிகைகளான கரிசாலை, வல்லாரை, தூதுவளை, முசுமுசுக்கை போன்றவற்றை நாம் உபயோகித்து பின் தெய்வபாவனை என்ற ஒளி நிலை அனுபவத்தில் பூரண அனுபவ நிலையைப் பெறுவது என வள்ளலார் இவ்வுலக மக்களுக்கு தான் பெற்ற இறை அனுபவத்தை வாரி வழங்கி உள்ளார். அவர் தான் இறைவனால் அனுப்பப்பட்டதை ஒரு பாடலில் விவரித்து கூறுகிறார்.
 
‘அகத்தே கறுத்துப்புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தடை வித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று, மகிழ்ந்திடுதற்கென்றே எனை
இந்த உலகத்தே வருவிக்கவுற்றேன் அருளைப் பெற்றேனே.’
 
- என பாடல் மூலம் வள்ளற்பெருமான் தனது உலக வருகையைப் பற்றி தெளிவாக கூறியுள்ளார். எனவே அன்புப் பெருமக்களே, இனியும் காலத்தை வீண் செய்யாது சாதி சமய விகற்பமற்ற உண்மை நெறியாம் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்து நலம் பெற வாரீர் என வள்ளலார் நம்மை அழைக்கிறார்.
 
வருவார் அழைத்து வாழ வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே.
Title:
 
Comment:
 
(* login required)

    No results found.