திருவருட்பா ஆறு திருமுறைகளிலும், மிக உயர்ந்த கருத்துகளை, அனுபவங்களை, உலகநிலைகளை உள்ளடக்கியது. ஒரே இரவில் பெருமானால் எழுதப்பட்டது ‘அருட்பெருஞ்ஜோதி அகவல்’ ஆகும். எனவே தனிப்பட்ட கட்டுரைகள் எழுதும் முன் அகவல் உரையாகவே தொடரலாமெனக் கருதுகிறேன். இதுவே திருவருளின் ஆணையாகக் கூட இருக்கலாம்!
திருஅகவலுக்கு இதற்குமுன், தயவுமிகு. ஒளவை துரைசாமி, திண்டுக்கல் அமரர் சுவாமி சரவணானந்தா, வடலூர் சான்றோர் அமரர் முத்துராமலிங்கம், சென்னை திரு. மு. பாலசுப்ரமணியம், விழுப்புரம் திரு. கோவிந்தசாமி போன்ற சான்றோர் பெருமக்கள் விரிவான உரை எழுதி உள்ளனர் அவர்களின் வண்ணமலர்ப் பாதங்களை வணங்கி, அடியேனும் எனது சிற்றறிவுக்கு சரியெனப்பட்ட கருத்துக்களை தொகுத்துத் தர முயல்கிறேன். நிறைவிருப்பின், அனைத்துப் பெருமையும் சத்குரு வள்ளற்பொருமானுக்கு சமர்ப்பிக்கிறேன்.
குறையிருப்பின் அடியேனின் சிற்றறிவென தெரிவித்துக் கொள்கிறேன்.
அருட்பெருஞ்ஜோதி அகவலின் துவக்கமே மகாமந்திரத்தில் துவங்கி, மகா மந்திரத்திலேயே முடியும்படி பெருமான் எழுதியிருப்பது இதன் தனிச்சிறப்பு. மேலும், ஒரே இரவில் பெருமானால், 1596 வரிகளும் எழுதப்பட்டுள்ளது.
இதில் உலக நிலைத்தோற்றம், பஞ்சபூத விரிவு தத்துவ விளக்கம், தத்துவ நிக்ரகம், காலநிலை, மந்திரநிலை, மனிதநிலை, தெய்வநிலை என வள்ளற் பெருமான் தான்பெற்ற அனுபவங்களை அகவலில் கூறியிருக்கும் விதம் அற்புதம். அற்புதம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
இந்த மகாமந்திரத்தின் பெருமையை உணர முயல்பவர் (புலால் உணவு தவிர்த்தவர்) மௌனமாக ஓரிடத்தில் அமர்ந்து சிந்தனையை நமது புருவமத்தியில் வைத்து மெல்லென உச்சரிக்க வேண்டும். சிறிதுநேரம் அப்படி மந்திரத்தை உச்சரித்தால் உடலெங்கும் மின்சாரம் பாய்வதைப் போன்ற உணர்வை உணர முடியும். அப்பேர்ப்பட்ட உயர்ந்த மந்திரம் இம்மந்திரம்.
இதில் உயிர் எழுத்துக்களும், ஓம் எனும் பிரணவ ஒலியும் ஒருசேர சேர்ந்து இயங்குவதுபோல் மந்திரம் உள்ளது சிறப்பிலும் சிறப்பு. எந்த ஒரு தெய்வத்தையும் குறிப்பிடாது உலக உயிர்களுக்கெல்லாம் ஒரே இறைவன் என்ற நிலையை உணர்த்தும்படியும், இம்மந்திரம் நமக்கு அருளப்பட்டுள்ளது, என்பதை நாம் உணர வேண்டும். எந்த நாட்டவரும், எந்த மதத்தவரும் உச்சரிக்கும்படி அமைந்துள்ள பொது மந்திரமாகும் இது. எனவே சாதிமத பேதங்களைக் கடந்த நிலை உள்ள ஒரே மந்திரம் என்ற பெருமையையும் பெறுகிறது.
இப்பொழுது சில விஞ்ஞானப் பூர்வமான நிலைகளை காண்போம். மகாமந்திரத்தில் மொத்தம் எழுத்து 33, மனித உடம்பின் முதுகு எலும்பின் எண்ணிக்கையும் 33. அதாவது உலகம் இயங்க இந்த மகாமந்திரமே முதுகெலும்பாய் உள்ளது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், வள்ளற்பெருமானுக்கு முன்னர் வந்த அனைத்து ஞானிகளும் தாங்கள் பெற்ற அருளனுபவ நிலைகளை யோகநிலைகளை மூலாதாரம், மணிபூரகம், சுவாதிட்டானம், விசுத்தி, ஆஞ்யை என்ற நிலைகளில் பெற்றதாகக் கூறுகிறார்கள். இதில் ஆறுநிலைகள் யோகநிலை அனுபவம். ஏழாம்நிலை அறிவின் நிலை அனுபவம். எனவே இந்த மகாமந்திரத்தை நாம் முன்னர் கூறியதுபோல் கூறிவந்தால் படிப்படியாக ஞானிகள் பெற்ற அனுபவ நிலைகளைப் பெறுவது உறுதி.
சித்தர் பெருமக்கள் அனைவரும் மூலாதாரம் முதற்கொண்டு புருவமத்தி வரை ஒரு நாடி (காற்று) செல்வதாகக் கூறுகிறார்கள். இதுவே யோகநிலை அனுபவங்களை பெற்றுத் தருவதாகக் கூறுகிறார்கள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்
இதில் மூன்றாம் நிலையில் ‘அருள்’ காரியப்படும் பொழுது, அது தனிப்பெருங்கருணையாக மாற்றம் அடைந்து, இவ்வுலக இயக்கத்தை உண்டு பண்ணுகிறது. அதாவது, இறைவனின் கருணையே இவ்வுலக இயக்கம் என்பதை உணர்த்தவே, பெருமான் மகாமந்திரத்தை சொல்லும்பொழுது, ‘தனிப்பெருங்கருணை’ என்று கூறுகிறார். சுயஞ்ஜோதி - சுயமாக தோன்றி பரந்து விரிந்து எங்கும் வியாபித்து பரஞ்ஜோதியாக பரிணமித்து அருள்ஜோதியாக விரிந்து (தனிப்பெருங் கருணை) சிவமாக (சிவஜோதி) மாறும் என்ற முழுமை நிலையை உணர்த்துவதாக மகாமந்திரம அமைந்துள்ளது. எனவே, அருட்பெருஞ்ஜோதி அகவலில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் மகாமந்திரத்திலேயே அடக்கம். இதை உணர்த்தவே பெருமான் அகவலை முடிக்கும்பொழுது, அப்படியே முடித்துள்ளார்.
எனவே காலை அமுதகாலமாகிய 4மணி முதல் 6 மணிக்குள் அமைதியாக அமர்ந்து இந்த மகா மந்திரத்தை உச்சரித்து நலம் பெறுவோம். மகாமந்திரத்தை குறைந்தபட்சம் 24 நிமிடங்கள் ஒரு நாழிகையாவது உச்சரிக்க வேண்டும்.
- தொடரும்
3 Comments
now only i come across this edition. you have given thoght provoking information about maga mantra. i was really waiting to ask the meaning of lyrics started on jodhi jodhi jodhi param..........
your explanation in this regard is superb.
your comparison of the six spiritual stages( from moolatharam to sahasthram ) with this lyrics notice how keenly you have understood the arutpa.
i am eagerly waiting for the next edtion.
now only i come across this edition. you have given thoght provoking information about maga mantra. i was really waiting to ask the meaning of lyrics started on jodhi jodhi jodhi param..........
your explanation in this regard is superb.
your comparison of the six spiritual stages( from moolatharam to sahasthram ) with this lyrics notice how keenly you have understood the arutpa.
i am eagerly waiting for the next edition.
with regards
K.Kumaresan