Vallalar Pannattu Sanmargha Sangam.
வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்க கூட்டம்

வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தின் செயற்குழுக் கூட்டம்
நாள் – 08.06.2008 – (ஞாயிறு) காலை 10.00 மணி
நடைபெற்ற இடம் – சங்க அலுவலகம் – 22, கிரி சாலை,
தியாகராய நகர், சென்னை.17.
வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் 8.6.2008ந் தேதியன்று நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்க்காணும் செயற்குழுக் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
  1. திரு கே.சுப்புராமன், தலைவர், சென்னை.
  2. திரு பி.கி.சிவராமன், பொதுச் செயலாளர், தஞ்சாவூர்.
  3. டாக்டர் திரு ஹுசைன், வெளிநாட்டுச் செயலர், சென்னை
  4. திரு மேடா நித்தியானந்தம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்.
  5. டாக்டர் திரு வேணுகோபால் (Architect), சென்னை.
  6. திரு கோபால சுந்தரம், செயற்குழு உறுப்பினர், சென்னை.
  7. திரு ஷண்முகம், (முன்னாள் உலக மைய பொறுப்பாளர்), சென்னை.
  8. திரு ராமச்சந்திரன், (முன்னாள் உலக மைய பொறுப்பாளர்), சென்னை.
  9. திரு K.N. உமாபதி, (முன்னாள் உலக மைய பொறுப்பாளர்), சென்னை.
  10. திரு கே.ஆர் அவர்கள், செயற்குழு உறுப்பினர் மற்றும் திரைப்படத்துறை இயக்குனர்.
  11. திரு ஏ.ராமானுஜம், மதுரை.
  12. திரு சாயி கணேஷ், சென்னை.
  13. திருமதி சுகன்யா சாயி கணேஷ், சென்னை.
  14. திரு இரத்தின மாணிக்க வாசகம், வள்ளலார் தமிழ்ச் சங்கம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்.
  15. அருட்ஜோதி அடிகளார், சென்னை.
  16. திரு கா. ஏகாம்பரம், திருவொற்றியூர்.
  17. திரு. வேதாச்சலம், திருவொற்றியூர்.
  18. திரு M. ஏழுமலை, டோல்கேட், சென்னை.
  19. திரு மனோகரன், திருவள்ளூர்.
  20. திரு துரைராஜ், சென்னை.
  21. திரு N.W. அமானுல்லா, சாத்துமா நகர், டோல்கேட், சென்னை.
  22. திரு மனோகரன், சென்னை.
  23. திரு ரெகுநாதன்.
கூட்டத்தின் விவாதப் பொருள்கள்
  1. சன்மார்க்க ஒழுக்க கல்வியை தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் கட்டாய பாடமாக கொணர்வது குறித்து ஆயத்தம் செய்தல்
  2. சென்னையில் வள்ளலார் கோட்டம் அமைப்பது குறித்த விவாதம்
  3. தமிழகம் முழுவதும் வள்ளலார் குறித்த தொலைக்காட்சித் தொடர் சம்பந்தமான வள்ளலார் வருகை உலா பயணம்.
  4. பன்னாட்டு சன்மார்க்க சங்க நிர்வாகக் குழு சீரமைப்பு.
  5. 2007-08ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கை
  6. நிர்வாக செலவுகள் பற்றி ஆலோசனை
  7. வடலூர் சத்திய ஞான சபை வளாக மேம்பாட்டு திட்டம் (Master Plan)
திரு சுப்புராமன், தலைவர்.
அனைத்து சங்கங்களும் முதலில், ஒன்று பட வேண்டுமெனவும், தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் வள்ளலார் பன்னாட்டு சங்கத்தின் மூலம் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, எல்லா மாவட்டச் சங்கங்களும், தத்தமது மாவட்டங்களில் உள்ள சன்மார்க்க அன்பர்களை, அதிக எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
சென்னையில் வள்ளலார் கோட்டம் கட்டுவதற்கான (Master Plan) இட ஒதுக்கீடு இன்னும் கிடைக்கவில்லை என்றும், அது குறித்து, உயர் அலுவலர்களை அணுகி அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். வெளி நாட்டினர் வள்ளற் பெருமானின் கொள்கைகளைக் கேள்விப்பட்டு வந்தால், வள்ளலார் கோட்டம் போன்ற அமைப்புக்கள் இருந்தால், (Vallalar Study Centre) அவர்களுக்கு சுத்த சன்மார்க்கத்தின் மாண்பினை எடுத்துரைக்க இது போன்ற மையங்கள் அமைப்பது, மிக மிக அவசியம் என்றார்.
பள்ளி, கல்லூரிகளில், வள்ளலார் வகுத்த நெறிமுறைகளின்படி, பாடத்திட்டத்தை (Syllabus) மாற்றியமைப்பதற்கு, இச் சங்கம் பாடு பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். மாணவ சமுதாயம், சமீப காலங்களில் சீர் கெட்டு வருவதைக் கூறி, வள்ளலாரின் ஒழுக்கக் கல்வி, பிற கல்வியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதென்பதை, பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த பின் உலகறியச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சங்கத்தின் நிதி நிலையினை மேம்படச் செய்ய, தமிழ் நாட்டில் இயங்கி வரும் சன்மார்க்க சங்கங்கள் முன்வந்து, ஒவ்வொரு சங்கமும் ரூ.5,000/- நிதி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
டாக்டர் திரு பி.கி. சிவராமன், பொதுச் செயலாளர்.
வடலூரில் சத்திய ஞான சபை மற்றுமுள்ள இடங்களை சீர்திருத்தி அமைக்க (Master Plan) தயாரிக்கப் பட்டு வருவதாகத் தெரிவித்தார். அத் திட்டத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட வரைபடங்களை தாமும், தலைவரும், கட்டிட வரைகலலப் பொறியாளர் ஆகியோரும் காண்பித்ததாகவும் விரைவில் இதனை செயல்படுத்த தாம் உறுதி கூறியதாகவும் அவர் தெரிவித்தார். தவிரவும், உடுப்பி தர்மஸ்தலா போன்ற வழிபாட்டுத் தலங்களைப் போன்று, வடலூர் விளங்க வேண்டும் என்றும், அதற்கான முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
வள்ளலார் நெறியில், பள்ளி, கல்லூரிகளில், ஒழுக்கக் கல்வி போதிப்பது குறித்து, (Expert Committ & Syllabus Committee) 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில், சேர்ப்பதற்கு, பாடத் திட்டத்தை அமுல் செய்வதற்கு, அரசினை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அதனை செயலாக்கம் செய்ய வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கிறிஸ்து, இஸ்லாம், இந்து என்று மத வேறுபாடு பார்க்காது, வள்ளற் பெருமான் வகுத்த நெறியினை அனைத்து மதத்தினரும் பின்பற்றத் தக்க வகையில், இதனைச் செயல்படுத்துவதற்கு அரசினை வலியுறுத்த விருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெளி நாடுகளிலிருந்து சன்மார்க்கம் பயில வரும் ஆர்வலர்கள் எளிய வகையில் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளைப் புரிந்து கொள்ளும் வகையில், தாம் (Vallalar Guide) வள்ளலார் வழிகாட்டி என்ற புத்தகம் தயாரித்திருப்பதை தெரிவித்தார். கலந்து கொண்ட அன்பர்களுக்கு அதனைக் காண்பித்தார்.
அடுத்து, நிர்வாக நலன் கருதி, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களில், ஒரு சில மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
பொருளாளர் திரு மு.பாலசுப்பிரமணியன் அவர்கள், தமக்கு வேறு பணி இருப்பதாக தெரிவித்ததன் பேரில் அவருக்குப் பதிலாக, கூட்டத்திற்கு வருகை புரிந்த முன்னாள் உலக மையத்தின் மாநில சங்க பொறுப்பாளர், திரு கே.ராமச் சந்திரன் அவர்களை அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பொருளாளராக அறிவித்தார். அவரும் இதனை ஏற்பதாக தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.
இனிமேல் Finance Committee, Auditing Committee ஆகியவையும் அமைக்கப் பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தவிரவும், தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு சங்கங்களில் மிகவும் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபடும் சன்மார்க்க அன்பர்களையும், அவர்களின் தகுதிக் கேற்ப, சங்கத்தின் பொறுப்புக்களில் நியமிக்கும்படி, வருகை புரிந்த அன்பர்கள் கோரிக்கை தெரிவித்ததன் பேரில், அவ்வித நபர்கள், செய்யும் சன்மார்க்கப் பணி, சுத்த சன்மார்க்கத்தில் ஈடுபாடு, அவர்களது விலாசம் முதலானவற்றைத் தெரிவிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். அவை வரப்பெற்றபின், சங்க நிர்வாகிகளின் ஒப்புதலின் பேரில், புதிதாகச் சேர்க்கப்பட்ட பெயர்கள் அடங்கிய பட்டியல் தனியே வெளியிடப்படும் என்றார்.
இதுவரை தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் பல்வேறு கால கட்டங்களில் நடத்தப் பட்டது போல், இன்னும் கூட்டம் நடத்தப்படாத மாவட்டங்களிலும், இச் சங்கம் அடுத்து வரும் மாதங்களில், அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் தேதி நிர்ணய கோரிக்கையின்படி, ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.
சென்னையில், 8.6.2008 அன்று கூட்டப்பட்ட நிர்.22, கிரி சாலையில் உள்ள கட்டிடத்தில், இனி, இச் சங்கத்தின் அலுவலகப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் எனத் தெரிவித்து, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொருளாளர் திரு கே.ராமச் சந்திரன் அவர்களை, இப் பணியினை மேற்கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டார்.
அவருடன், சென்னையில் உள்ள முன்னாள் உலக மையப் பொறுப்பாளர் திரு K.N. உமாபதி அவர்களும், இப் பணியில் ஒத்துழைக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். அதற்கு தனது சம்மதத்தை திரு K.N. உமாபதி, தெரிவித்தார்.
திரு வேணுகோபால், (Architect) கட்டிடப் பொறியாளர், சென்னை.
வடலூரில், சத்திய ஞான சபையைச் சுற்றியுள்ள பெருவெளியினை 15 நாட்கள் அங்கேயே தங்கி, உரிய சர்வே பணியாளர்களைக் கொண்டு, அளவு செய்யும் பணி நிறைவுற்றிருப்பதாகத் தெரிவித்தார். அதில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடங்கள், மரங்கள், போன்ற அமைப்புக்களும், சர்வேயில் கணக்கெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னும் 2 மாத கால அவகாசத்தில் இதற்கான மாஸ்டர் ப்ளான் தயாரிக்கப்பட்டு விடும் என்றும் அவர் கூறினார்.
திரு கோபால சுந்தரம், செயற்குழு உறுப்பினர், சென்னை.
வள்ளலாருக்கு என சென்னையில் எழுப்பப்பட உள்ள வள்ளலார் கோட்டம் கட்டுவதற்கு, தகுந்த நபர்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து நிதி ஆதாரம் பெற வேண்டுமெனில், வருமான வரி சலுகை தருவதற்கு 80(ஜி) விதி விலக்கு அரசிடமிருந்து பெற வேண்டுமெனத் தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளிலும் , இதற்கென தகுந்த ஆட்களை நியமித்து, நிதி ஆதாரத்தைப் பெற வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்காவில் உள்ள நியு யார்க் நகரில், விநாயகருக்கு ஆலயம் எழுப்புவதற்கென Ganesha Borrow Schme என்ற திட்டத்தினை அறிமுகப் படுத்தி, அதன் மூலம் தக்க ஆர்வலர்களிடமிருந்து, நிதி ஆதாரம் பெற்று, கோவிலினைக் கட்டி முடித்ததை விவரித்தார். அதே போன்று, சென்னையில் வள்ளலார் கோட்டமும் அன்பர்களிடமிருந்து, நிதி உதவி பெற்று, கட்டுவதற்குரிய நடவடிக்கை இச் சங்கம் மேற்கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.
தாம் ஏற்கனவே திருப்புகழை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பதாகவும், அதேபோல், அன்னிய நாட்டினர் திருவருட் பிரகாச வள்ளற் பெருமானின் திருவருட்பாவின் மாண்பினை புரிந்து கொள்வதற்காக, தாம் அதனையும், ஆங்கிலத்தில், மொழி பெயர்க்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதுரை அன்பர் திரு ராமானுஜம், www.vallalar.org மற்றும் www.vallalarspace.com ஆகிய இணைய தளங்களைக் கண்ணுறும் பல்வேறு வெளி நாட்டினர், திருவருட்பாவினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, தாமும் பயன்பெற வகை செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டிருப்பதைத் தெரிவித்தார்.
ஏற்கனவே தஞ்சாவூர் அருட்பெருஞ்ஜோதி ட்ரஸ்ட் அன்பர் திரு தம்பையா அவர்கள், உபதேசப் பகுதியினை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணிக்கென தகுந்த மொழி பெயர்ப்பாளர்களை அமர்த்தி இப் பணியினை செய்து வருவதாகவும் தெரிவித்தார். அதேபோல், இப்பணிக்கு, இயன்ற நிதி ஆதாரம் தாங்கள் கொடுப்பதாக முதன் முதலாக, மலேசியா நாட்டின் சுங்கப் பட்டானியில் உள்ள அருட்ஜோதி நிலைய அமைப்பு, ஒத்துக் கொண்டிருப்பதையும் அவர் தெரிவித்தார். மொழிபெயர்க்கும் பணிக்கு. தகுந்த நபர்கள் இருந்தால், அதனைத் தெரிவிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
திரு ஷண்முகம். (முன்னாள் உலக மையப் பொறுப்பாளர்) சென்னை.
வள்ளலார் வளாகம் அமைப்பதற்கென்று முன்பு முயன்ற போது, மாண்புமிகு அமைச்சர் திரு கே.பி.கந்தசாமி அவர்கள் காலத்தில், பதினேழு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததாகவும், அக் கோப்பு, ஆய்வு செய்வதற்கு என்ற காரணம் காட்டி, பல வருடங்களாக, செயலகத்தில் முடங்கிக் கிடப்பதைத் தெரிவிதார். முந்தைய சங்கங்கள், தொடர் முயற்சி மேற்கொள்ளாத காரணத்தினால்தான் அவ்விதம் நடந்து விட்டது என்றும், தற்போதைய பன்னாட்டு சன்மார்க்க சங்கம், இதில் தொடர் முயற்சி மேற்கொண்டு சாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திரு கே.ஆர். அவர்கள் செயற்குழு உறுப்பினர் மற்றும் திரைப்படத் துறை இயக்குனர், சென்னை.
வள்ளற் பெருமானைப் பற்றி, (T.V. Serial) எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க கருத்துக்களை, பட்டி தொட்டிகள் தோறும் பரப்புவதற்கு ஒரு முயற்சியாக ஒரு பிரச்சார வேன் (Propoganda Van) மாவட்டந் தோறும் அனுப்பப்பட வேண்டும் என்றார். அந்த வேனுடன், ஒரு இசைக் குழுவும், திருவருட்பாக்கள் அடங்கிய சி.டி முதலானவற்றுடன், சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் அடங்கிய, துண்டுப் பிரசுரங்களையும், அனுப்பி, செல்லும் இடம் தோறும் அவை வினியோகிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதேபோன்று, வள்ளலார் நெறி பற்றி, கிராமங்களில் புரிந்துணர்வும், தற்போதைய நிலையினை பேட்டி எடுத்து, வள்ளற் பெருமானின் கொள்கைகளைப் பின்பற்றியதால் ஏற்படும் நன்மைகள் என்ன ? சைவ மற்றும் அசைவ உணவுண்பதால் ஏற்படும் நன்மை தீமைகள், ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதால் விளையும் நன்மைகள் என்ன என்பது குறித்தும், அதனால் பயனடைந்தவர்களையும் பேட்டி எடுத்து, தொலைக்காட்சி மூலம் அச் செய்திகள், மக்களைச் சென்றடைய வேண்டும் என்றார்.
இதன் முதற் கட்டமாக, சென்னை திரு அருட்ஜோதி அடிகளார், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் திரு ரெத்தின மாணிக்க வாசகம், திரு கே, என். உமாபதி, சென்னை மற்றும் இசைக்குழுவுடன், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஏரியாக்களில் தமது பிரச்சாரப் பயணத்தைத் துவக்கும்படியும் கூட்டத்தில் அனைத்து அன்பர்களின் ஏகோபித்த கருத்து எட்டப்பட்டது.
மேலும் இதற்கென ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தினை தாம் தொடர்பு கொண்டுள்ளதாகவும், விரைவில், தேவைப்பட்டால், தனியே ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பினை காலப் போக்கில் துவக்க எண்ணங் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
உலகளாவிய அளவில் சன்மார்க்கக் கருத்துக்களைப் பரப்புவதற்கு, ஆங்கிலத்தில் ஒரு மாத இதழ் துவக்கப்பட வேண்டுமென கோரிக்கை தெரிவிக்கப்பட்டது. அதற்கு Vallalar Universal Voice என்று பெயர் கொடுக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டது.
திரு சிவப்பிரகாச சுவாமிகள், மேட்டுக் குப்பம்.
இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேட்டுக் குப்பம் திரு சிவப்பிரகாச சுவாமிகள், குன்றக்குடி அருகே கறிவேப்பிலை என்ற கிராமத்தில் நடைபெற்ற பட்டி மன்றத்தில், உலகப் பொது நெறிகளை, இதுவரை மக்களுக்குக் கற்றுக் கொடுக்காதது குற்றமா ? அல்லது, மக்கள் கற்றுக் கொள்ளாதது அவர்கள் குற்றமா ? என்ற தலைப்புக்களில் நடைபெற்றபோது, கற்றுக் கொள்ளாததுதான் குற்றம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
எனவே வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை ஜீவர்கள் தீவிரமாகக் கற்றுக் கொள்ளாததுதான் இன்றளவிலும் ஒரு குறைபாடாக உள்ளது என்றும், இதனை முழு முயற்சியுடன், இச் சங்கம், உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றார்.
வள்ளலாருக்குப்பின் இறவா நிலையினை யார் அடைந்தார்கள் என்ற கேள்விதான் அன்பர்களிடையே, இன்றளவும் நிலவி வருகிறது எனவும், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி உலக முழுவதும் எல்ல மொழிகளிலும் பரவ வேண்டும் என்றும், அவ்விதம் பரவுவதற்கு அனைவரும் பாடு பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், பொருளாதாரச் சிக்கலைத் தீர்ப்பதற்கு, நியாயமான வழியில், தக்காரிடமிருந்து, நிதி ஆதாரம் பெறுவதற்கு,. அரசிடமிருந்து வருமான வரிச் சலுகை 80(ஜி) விதியின்கீழ் பெற்றுவைக்க வேண்டியதும் வெளி நாடுகளிலிருந்து நிதி ஆதாரம் பெற வேண்டியிருப்பதால், மத்திய அரசிடமிருந்து, F.C.R.I அனுமதி பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒருமுறை 407 வேனில். பிரச்சாரத்திற்கு தாமும் சில சன்மார்க்க அன்பர்களும் ஒரு கிராமத்திற்குச் சென்றபோது, செல்லும் வழி அந்த வேன் செல்ல முடியாத வகையில் இருந்ததால், அத் தகவலை அக் கிராமத்தினரிடம் தெரிவித்தவுடன், அக் கிராமத்தினர்கள் ஒன்று கூடி, வேனையே, கிராமத்திற்குத் தூக்கிச் சென்றனர் என்றும், இதிலிருந்து, அனைவரிடமும், ஒற்றுமை இருந்தால், சுத்த சன்மார்க்கக் கொள்கைகள், கண்டிப்பாக அனைவரையும் சென்றடையும் என்றும் தெரிவித்தார்.
சென்னையில் ஒரு மையம் துவக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அகில உலக சகோதரத்துவம், உலகளாவிய அளவில் ஏற்படுவதற்கு, சன்மார்க்க அன்பர்கள், தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இச் சங்கத்தின் செயல்பாடுகளைத் தெரிந்து கொண்டு, இதன் பணிகள் மென்மேலும் சிறப்புற வாழ்த்தியருளினார்.
டாக்டர் திரு ஹுசேன், சென்னை.
வள்ளற் பெருமான், மனித குலத்தைத் திருத்த வருவிக்க உற்றேன் எனச் சொல்லிச் சென்றுள்ளார். அன்றைய கால கட்டத்தில், மனித குலம் பெருமானின் உயர் கொள்கைகளைப் புரிந்து கொள்ளவில்லை.
கென்னட் என்ற ஒரு கிரேக்க அறிஞர் – வணக்கத்திற்குரியவன் இறைவன் என்பது பெருமையில்லை – வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டும்தான் என்பதே சிறப்பு என்றார்.
மதத்தால், தான் ஒரு இஸ்லாமியராக இருப்பினும், 1972லிருந்து, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க கொள்கைகளைப் பின்பற்றி வருவதாகவும், 20 ஆண்டுகளுக்கு முன்பு, சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடிப்பது மிகுந்த சிரமமாக உள்ளதாக கருதப்பட்டது.
ஆனால், அது, பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தின் சீரிய முயற்சிகளால், இன்றைய நாளில், சாத்தியமாகி உள்ளது.
பன்னாட்டு சன்மார்க்க சங்கம் இதுவரை ஆற்றியுள்ள பணிகள், பிரமிக்க வைக்கின்றன என்றும், இதுவரை தோன்றி அழிந்த சங்கங்கள் போல, இல்லாமல், இச் சங்கம் தனது பணியினை மென்மேலும் சிறந்த முறையில் ஆற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
உலகம் முழுதும் ஏன் சன்மார்க்கம் வளரவில்லை ? அவரவர்களுக்கு ஏற்கக் கூடிய கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு செயல்படுவதால்தான். நாம் இன்னும் தயாராக வில்லை என்பதைத்தான் இது காண்பிக்கிறது.
சன்மார்க்க காலம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதால், நாம்தான் நன்கு செயல்பட்டு, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை உலகளாவிய அளவில் பரப்ப வேண்டும் என்று அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இறுதியில், நன்றி கூற, கூட்டம், இனிதே முடிவடைந்தது.